தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Senthil: தமிழ் சினிமாவின் காமெடி தூண்.. அழிக்க முடியாத வரலாறு.. ஈடு செய்ய முடியாத ஜாம்பவான் செந்தில்

Senthil: தமிழ் சினிமாவின் காமெடி தூண்.. அழிக்க முடியாத வரலாறு.. ஈடு செய்ய முடியாத ஜாம்பவான் செந்தில்

Mar 23, 2024, 06:00 AM IST

google News
நடிகர் செந்தில், நடிகர் செந்தில் பிறந்த நாள், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ராமநாதபுரம்
நடிகர் செந்தில், நடிகர் செந்தில் பிறந்த நாள், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ராமநாதபுரம்

நடிகர் செந்தில், நடிகர் செந்தில் பிறந்த நாள், தமிழ் சினிமா, சினிமா செய்திகள், ராமநாதபுரம்

ராமநாதபுரம் கலை உலகத்திற்குக் கொடுத்த மிகச்சிறந்த முத்துக்களில் ஒன்று முனுசாமி. சினிமாவில் முனுசாமியா யார் அது? என்ற கேள்வி உங்களுக்கு எழும், அவர்தான் நகைச்சுவை நடிகர் செந்தில். பெயரைக் கேட்கும் பொழுதே முகத்தில் சிறிய புன்னகை பூக்கும். அதுதான் இந்த கலை நாயகனின் சாதனை.

சிறிய கிராமத்தில் விவசாயிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர், 12 வயதில் சொந்த ஊரை விட்டு சினிமாவின் மீது கொண்ட காதலால் ஓடி வந்து விட்டார். செய்வதறியாது புதிய இடத்தில் தவித்த செந்தில் எண்ணை ஆட்டும் நிலையத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அதன் பின்னர் மதுபான கடையில் பணிபுரிந்துள்ளார்.

ஒரு துறையில் ஜாம்பவானாக ஜொலிக்க வேண்டும் என்றால் தங்களது கனவு பாதையில் மனம் தளராமல் பயணம் செய்ய வேண்டும். தனது கனவைக் கலைக்காமல் நாடகத்தில் சேர்ந்து செந்தில் தனது நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டார்.

அதுவே தமிழ் சினிமாவில் நுழைவதற்கு எளிய வழியாக மாறியது. திரைப்படங்களின் ஆங்காங்கே சிறு சிறு காட்சிகளில் வந்த நடிகர் செந்திலுக்கு மலையூர் மம்பட்டியான் திரைப்படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஊரை விட்டு ஓடிச் சென்ற மகனை ஆவலோடு, ஆசையோடு கிராமமே சேர்ந்து வரவேற்கும் வகையில் 14 ஆண்டுகள் கழித்து தனது கிராமத்திற்கு சென்றார் செந்தில். அல்ல தமிழ் சினிமாவின் நகைச்சுவை நாயகன் செந்திலாக தனது கிராமத்திற்குச் சென்றார்.

இவரைப் பற்றி பெரிய விளக்கம் கொடுக்க தேவையில்லை. தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணியும், இவரும் சேர்ந்து அடித்த லூட்டி தமிழ் மக்கள் அனைவரும் அறிவார்கள்.

ஏறத்தாழ இருவரும் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் அந்த படம் ஹிட் என்ற அளவிற்குக் கொடி கட்டிப் பறந்தனர். தமிழ்த் திரைப்பட ரசிகர்களால் கவுண்டமணியையும், செந்திலையும் மறக்கவே முடியாது.

அந்த அளவிற்கு இவர்களது ஜோடியானது மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. இருவரின் ஒப்பந்தத்திற்காகப் பல இயக்குநர்கள் காத்துக் கிடந்துள்ளனர். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து படங்கள் வரை செந்தில் நடித்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. அந்த அளவிற்கு பிஸியாக இருந்த நடிகர் இவர்.

ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் என்றால், நகைச்சுவை நடிகர்களுக்கு தனி ஸ்டைல் இருக்க வேண்டும். உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நடிக்க வேண்டும். அந்த அணுகுமுறையே ரசிகர்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வைக்கும்.

இவர் ரசிகர்கள் மத்தியில் பதியவில்லை, வேரூன்றி கிளை விட்டு மரமானார். தமிழ் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கிய பிறகு அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்களை ஆதரித்துப் பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அவர் இறந்த பிறகு டிடிவி தினகரன் தொடங்கிய அமுமுக கட்சியில் இணைந்தார். அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2020 ஆம் ஆண்டு அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டாலும், அவ்வப்போது சினிமாவில் தன் முகத்தை ரசிகர்களுக்குக் காட்டி வருகிறார். தமிழ் சினிமா விழாமல் தாங்கிப் பிடித்த தூண்களில் இந்த கலைஞரும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது. இன்று தனது 73 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான் செந்திலுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி