‘கபடி… கபடி…’: விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள்
Feb 17, 2022, 12:50 PM IST
தமிழ் சினிமாவில் நகைச்சுவை, காதல் ஆகிய படங்களுக்கு மத்தியில் விளையாட்டு சார்ந்த படங்களும் ஹிட்டடித்த வரலாறு இருக்கிறது.
தமிழ் திரையுலகில் மற்ற மசாலா படங்களை ஒப்பிடுகையில் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படங்களில் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் அதிகம் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அந்த வகை திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம்.
2000 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைய திரைப்படங்கள் விளையாட்டை மையமாக கொண்டு வர தொடங்கின. அப்படி முழுக்க முழுக்க விளையாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு உருவான சில திரைப்படங்களின் வரிசையை இந்தத் தொகுப்பில் காண்போம்.
கில்லி
2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் தேசிய அளவில் நடக்கும் கபடி போட்டியை மையமாகக் கொண்டு உருவான ஒரு கதைக் களமாகும். நடிகர் விஜய் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் அதிகம் விளையாட்டை மையமாக கொண்டு திரைப்படங்கள் வெளியானது. விஜய்யின் திரைப்பயணத்தில் பெருமளவு பேசப்பட்ட திரைப்படங்களில் கில்லியும் சொல்லி அடித்த ஒரு படம்.
சென்னை 28
நார்த் மெட்ராஸ் பகுதியில் நடக்கும் லோக்கல் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான ஒரு படம். சார்க்ஸ் மற்றும் ராக்கர்ஸ் என்ற இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் , அதற்கு இடையில் நடக்கும் சின்ன சின்ன சலசலப்புகள் குறித்து வெளியான ஜாலியான படம். கிரிக்கெட்டுக்கு நடுவில் சில நண்பர்களின் சோகம், சிரிப்பு, காதல் என அனைத்தும் கலந்த நகைச்சுவை திரைப்படமாக வெளியாகி வெற்றியை கண்ட படம் சென்னை 28.
வெண்ணிலா கபடி குழு
கிராமங்களில் நடத்தப்படும் கபடிப் போட்டியை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம், வெண்ணிலா கபடி குழு. ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் கபடி போட்டி, தமிழ்நாடு அளவில் பிரபலமாகிறது. அதனால் ஏற்படும் விளையாட்டும், விளைவுகளும் தான் படத்தின் மையக்கரு. நெகட்டிவ் கிளைமாக்ஸ் இருந்தும் ஹிட்டடித்த திரைப்படங்களில் இந்த படமும் ஒன்று.
ஆடுகளம்
தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பிரதான விளையாட்டாக இருந்த சேவல் சண்டையை மையமாக கொண்டது. சேவல் சண்டை என்பது வெறும் போட்டிக்காக மட்டுமல்ல கௌரவத்திற்காகவும் நடத்தப்படுகிற போட்டி என்பதை சொன்ன ஒரு படம்.
போட்டி என்பது களத்திற்கு உள்ளே மட்டுமல்ல, ஆடுகளத்திற்கு வெளியேவும் தான் அதன் பெயர். அதுதான் கௌரவம். அதற்காக நடக்கும் போட்டிகளும், பொறாமைகளும், வஞ்சகமும் சூழ்ந்த கதைக்களம் தான் ஆடுகளம்.
எதிர்நீச்சல்
2013 ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் திரைப்படம், தடகளப் போட்டியை மையமாக கொண்டது. தடகளப் போட்டியில் நடக்கும் அநியாயங்கள், அதனால் தனது வாழ்க்கையை இழக்கும் தடகள வீரர்கள் என தடகள விளையாட்டில் நடக்கும் அரசியலையும், தனி நபர் தலையீட்டை குறித்தும் எடுத்துச் சொன்ன திரைப்படம்.
ஜீவா
இந்தியாவில் பிரபலமாக இருக்கக் கூடிய கிரிக்கெட்டை மையமாக கொண்டது ஜீவா திரைப்படம். ஒரு சாதாரண கிரிக்கெட் படம் போல் இல்லாமல் கிரிக்கெட் செலக்ஷன் கமிட்டியில் நடக்கும் அரசியலையும், இந்திய அணியில் தமிழ்நாடு சார்பிலிருந்து யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டிய ஒரு படம். திரைக்கதையில் எந்த ஒரு பிதற்றலும் இல்லாமல் யதார்த்த பாணியில் சொல்லி வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படம்.
வல்லினம்
இந்தியாவில் கூடைப்பந்து விளையாட்டை மையமாக கொண்டு வெளியான முதல் திரைப்படம் வல்லினம். இந்தியாவைப் பொருத்தவரை கிரிக்கெட் மட்டும் தான் ஒரு சிறந்த விளையாட்டாகக் கருதப்படுகிறது. அப்படி கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் பேஸ்கட்பால் போன்ற எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் மையக்கரு.
இறுதிச்சுற்று
குத்துச்சண்டையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் இறுதிச்சுற்று. உண்மையான பாக்ஸர்கள் எப்படி திறமை இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள். திறமையை இல்லாத சிலர் எப்படி பரிந்துரையின் பேரில் உலகப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
வீரர் மட்டுமல்ல, பயிற்சியாளராக இருப்பதுகூட எவ்வளவு கடினம் என்பதைக் கண் முன் நிறுத்திய திரைப்படம். இயல்பான தோணியில் நகரும் திரைக்கதையும் எடுத்துக்கொண்ட மையக்கரு வலுவாக இருந்ததால், இறுதிச்சுற்றில் வெற்றி கண்டது இத்திரைப்படம்.
கனா
பெண்கள் கிரிக்கெட் போட்டியை கதைக் கருவாகக் கொண்டு உருவான படம் கனா. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தையும், இந்தியாவின் அதிகம் பார்க்கப்படும் கிரிக்கெட்டைப் பற்றி விரிவாகச் சொன்ன படம். பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கும், விவசாயத்திற்கும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று ஒப்பிட்டுச் சொன்ன படம். மேலும் பொதுவாக பெண் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாட கூடாது என சொன்னவர்களுக்கு பாடம் புகட்டியது கனா திரைப்படம்.
சார்பட்டா பரம்பரை
வீரமான குத்து சண்டையை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை, 2021 ஆம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படம் 70 காலக்கட்டத்தில் நடக்கும் குத்துச்சண்டை குறித்தும், அதன் பின்னணியில் நடக்கும் அரசியல் குறித்தும் எடுத்துச் சொன்ன திரைப்படம். குத்து சண்டை வீரன் எப்படி இருக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், வழி மாறினால் என்ன நடக்கும் என்பதை மிக எதார்த்தமாக சொல்லி ரசிகர்கள் மனதை வென்றப் படம்.