5 Years of Nadigaiyar Thilagam: முதலில் நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்; சவாலாக அமைந்த 'நடிகையர் திலகம்'!
May 11, 2023, 06:40 AM IST
5 Years of Nadigaiyar Thilagam: கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக அசத்தியிருந்த 'நடிகையர் திலகம்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் (மே 11) 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தமிழ் திரையுலகம் மறக்க முடியாத ஒரு பழம்பெரும் நடிகை சாவித்ரி. அவரது வாழ்க்கை வரலாற்றை மையாக வைத்து தெலுங்கில் ‘மகாநடி’யாகவும், தமிழில் டப் செய்யப்பட்டு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் 2018 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது. துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், விஜய் தேவரகொண்டா, சமந்தா, உள்பட பலர் நடித்திருந்தனர்.
கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை பற்றி எழுதும் பணி பத்திரிகையாளரான மதுரவாணிக்கு (சமந்தா) வழங்கப்படுகிறது. சாவித்ரியின் சிறுவயது தொடங்கி, அவரது நாட்டியப் பயிற்சி, நாடக மேடை, சினிமா வாய்ப்பு, நடிகர் ஜெமினி கணேசனுடன் காதல், திருமண வாழ்க்கை, உதவி செய்யும் குணம், உடல்நலமின்மை என்று ஒவ்வொன்றையும் ஆர்வமாக சேகரிக்கிறார் சமந்தா.
இதற்கிடையே, தன்னுடன் பணியாற்றும் புகைப்படக் கலைஞரான ஆண்டனி (விஜய் தேவரகொண்டா) மீது சமந்தாவுக்கு காதல் ஏற்படுகிறது. ஒரு பக்கம் சாவித்ரியின் வாழ்க்கைப் பதிவு சேகரிப்பு, இருவருக்குமான காதல், சமந்தா சந்திக்கும் சூழல்கள், சாவித்திரியின் வாழ்க்கை, சாவித்திரி சந்திக்கும் சூழல் போன்றவற்றை கச்சிதமாகச் சொல்லி, திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.
இதில் தத்ரூபமாக நடித்ததோடு மட்டுமல்லாமல் சாவித்ரியை கண்முன்னே கொண்டுவந்து காட்டினார் கீர்த்தி. அதேபோல், ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில் காதல் மன்னனாக அசத்தியிருப்பார் துல்கர் சல்மான். மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு, MCP நம்பருடன் சாலையில் நகரும் பழைய கார்கள், விஜய வாஹிணி ஸ்டுடியோஸ், சந்திரலேகா போஸ்டர், டிராம், பழைய கால கேமரா, மைக் என பிளாக் அன் ஒயிட் காலகட்டத்தை அற்புதமாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
ராஜேந்திர பிரசாத், தனிக்கெல்லா பரணி, பானுப்ரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே, சிறப்பு தோற்றங்களில் வரும் பிரகாஷ் ராஜ், மோகன் பாபு, நாக சைதன்யா உள்ளிட்டோரும் இந்த படத்தின் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார்கள்.
இந்தப்படத்தில் நடித்தது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் பின்னாளில் ஒரு பேட்டியில், "முதலில் `நடிகையர் திலகம்' படத்தில் நடிக்க நான் மறுப்பு தெரிவித்தேன். சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் பயந்தேன். சாவித்திரிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா? என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் இயக்குனர் நாக அஸ்வின் என்னை ஊக்கப்படுத்தினார். இந்த கதாபாத்திரத்தை உன்னால் செய்ய முடியும் என்று தைரியம் கொடுத்தார்.
டைரக்டர் என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தபோது என்னை நான் ஏன் நம்பக் கூடாது என நினைத்துதான் அந்த படத்தில் நடித்தேன். சாவித்திரி மகளிடம் பேசி அவரை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டு நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெரிய சவாலாகவும் இருந்தது." என்று தெரிவித்திருந்தார்.
'நடிகையர் திலகம்' படத்தினால் பல்வேறு தரப்பினால் பாரட்டப்பட்ட கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றார். இப்படம் மே 9, 2018 அன்று தெலுங்கில் 'மகாநடி' என்ற பெயரிலும், மே 11, 2018 அன்று இதே நாளில் நடிகையர் திலகமாக தமிழிலும் வெளியானது. பல விருதுகளை வாரி குவித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
டாபிக்ஸ்