Jani Master: கணவரைப் பிரிகிறேன்…சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி... அடுத்து என்ன நடக்கப் போகிறது?
Sep 20, 2024, 01:56 PM IST
Jani Master: பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தன் கணவர் மீதான புகாரை நிரூபித்தால் அவரை விட்டு விலகுவதாக அவரது மனைவி ஆயிஷா கூறியுள்ளார்.
கேரள திரைத்துறையில் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து திரைத்துறையிலும் அதிகளவிலான பாலியல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தனுஷின் மாரி 2, திருச்சிற்றம்பலம், நடிகர் விஜய்யின் பீஸ்ட், வாரிசு போன்ற படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியதன் மூலம் புகழ் பெற்றவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா. இவருக்கு சமீபத்தில் தேசிய விருது அளிக்கப்பட்ட நிலையில், உதவி பெண் நடனக் கலைஞர் ஒருவர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
பாலியல் புகார்
அப்பெண் ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், "கடந்த 6 மாதங்களாக அவரது குழுவில் பணியாற்றிய வந்த தன்னை ஜானி மாஸ்டர், வெளிப்புற படப்பிடிப்பில் இருக்கும் போது நார்சிங்கில் இருக்கும் அவரது வீடு உட்பட பல இடங்களில் என்னை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்தப்பெண், மேலும் இந்த சந்தர்ப்பங்களில் அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமல்லாமல், தன்னை அடித்தும் காயப்படுத்தி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட ராய்துர்கம் காவல்துறையினர் ஜானி மாஸ்டர் மீது சட்டப்பிரிவு 376. 506, 323 (2) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, வழக்கை நாரங்கி காவல்நிலையத்திற்கு மாற்றி விசாரணையை முடுக்கி விட்டனர்.
கைது, கட்சியிலிருந்து நீக்கம்
பின் தலைமறைவாக இருந்தவரை ஹைதராபாத் காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர். இதற்கிடையில், புகார் அளிக்கப்பட்ட உடனே நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியிலிருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, கட்சி தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மனைவி ஆவேசம்
இந்நிலையில், ஜானி மாஸ்ட கைது குறித்து அவரது மனைவி சுமலதா என்ற ஆயிஷா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். சினிமாவிற்குள் வந்தால் சொகுசாக வாழலாம் என நினைத்து என் கணவரிடம் உதவி நடன இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். அவரால், சினிமா அசோசியனில் உறுப்பினராகக் கூட பணம் கட்ட முடியாத சூழலில் அப்பெண்ணுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தவர் என் கணவர். ஆனால் இன்று அவர் மீதே அப்பெண் பாலியல் புகார் அளிக்கிறார்.
புகாரளித்தப் பெண் மைனராக இருந்த போதே பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு என்ன ஆதாரம். அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை யாரேனும் பார்த்த ஆதாரம் உள்ளதா? அப்படி பார்த்திருந்தால், இதனை அப்போதே ஏன் யாரும் வெளியில் சொல்லாமல் இருந்தீர்கள்? அப்படியே அவர் பாலியல் தொல்லை அளித்திருந்தாலும் கூட ஏன் அப்பெண் தொடர்ந்து என் கணவரிடம் பணியாற்ற வேண்டும்? ஜானி மாஸ்டரிடம் வேலை செய்வது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என ஏன் வெளியில் கூறிக் கொள்ள வேண்டும்? என அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அவரிடம் இருந்து விலகுவேன்
அதுமட்டுமின்றி, புகார் அளித்த பெண் என் கணவரால் துன்புறுத்தலுக்கு உள்ளானதை நிரூபித்தால், நான் உடனடியாக அவரை விட்டு விலகவும் தயாராக உள்ளேன் என சவால் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.