MGR: படத்தில் அரசியல்.. எம்ஜிஆர் அலை உச்சம்.. ரசிகளால் திரையில் தீ பறந்த திரைப்படம்.. இன்று போல் என்றும் வாழ்க
May 05, 2024, 06:00 AM IST
Indru Pol Endrum Vaazhga: எம்ஜிஆர் அலை வீசிய அந்த காலகட்டத்தில் இதே நாளில் வெளியான இன்று போல் என்றும் வாழ்க படம் இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எம்ஜிஆரின் படங்கள் என்றாலே ஜனரஞ்ச விஷயங்களுக்கு பஞ்சம் இருக்காது. அவரது படங்களில் ஆக்ஷன், செண்டிமெண்ட், நகைச்சுவை, ரெமான்ஸ் என அனைத்து விஷயங்களுக்கு கலந்து கட்டி இடம்பிடித்து இருக்கும். இதன் காரணமாகவே எம்ஜிஆர் படங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழ் சினிமாவுக்கு பல்வேறு புதுமைகளை கொண்டு வருவதில் முன்னோடியாகவே அவர் இருந்து வந்தார்.
சினிமாவில் நடித்து பிரபலமான நடிகர் ஆன பிறகு, நடிகர், நடிகைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை எம்ஜிஆர் நன்கு பயன்படுத்தி கொண்டார். அதுவரை ஒரு சினிமாவை உருவாக்குவதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களே முக்கிய பங்கு ஆற்றி வந்த நிலையில், ரசிகளின் தேவை, எதிர்பார்ப்பு ஏற்ப நடிகர்களும் தக்கவமைத்து கொள்ளும் விதமாக ட்ரெண்டை மாற்றினார் எம்ஜிஆர். ரசிகர்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடிகைகளுடன் ஜோடி போட்டதுடன், டெக்னீஷயன்களையும் தனது படங்களில் பணியாற்ற வைத்தார். இதன் காரணமாகவே ஜனரஞ்சகமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
நடிகர், நடிகை, டெக்னீஷ்யன்கள் உள்பட தனது ஆஸ்தான அணிகளுடன் இணைந்து தொடர் ஹிட்களுடன் சினிமா வாழ்க்கை செல்லி, அரசியலிலும் திமுகவின் பிரச்சார பீரங்கியாக ஜொலித்தார். பின்னர் திமுகவில் இருந்த அதிமுக கட்சியை தொடங்கிய பின்னர் தனக்கான தனியொரு பிம்பத்தை உருவாக்குவதற்கு ஏற்ப பல்வேறு மாறுதல்களுடன் செயல்பட்டார். அதிமுக என்ற கட்சியை தொடங்கிய பின் வந்த படங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை பிரசாரமாக முன் வைக்கும் படங்களாக மாறிப்போயின.
அதில் சினிமாவில் அவர் கையாண்ட பாணியாக, புதிய நடிகைகள், பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிப்பது. தனது அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு இந்த புதிய கலைஞர்கள் பக்க பலமாக இருந்தார்கள் என்றால், நடிகைகளில் வழக்கமாக ஜோடி சேரும் நடிகைகளை விடுத்து புதுமுகங்களை தேடினார்.
அந்த தேடலில் கிடைத்தவர்தான் ராதா சலுஜா. பாலிவுட் படங்களில் நடிப்பு, கவர்ச்சி என கலக்கி வந்த இவர் அங்குள்ள சிலுக்காகவே பார்க்கப்பட்டார். அந்த வகையில் ராதா சலுஜாவுடன் இணைந்து 1975இல் இதயக்கனி படத்தில் நடித்தார். சுண்டி இழுக்கும் அழகு நிறைந்த ராதா சலுஜா, அந்த படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருப்பார். இதனால் படமும் ஹிட்டாகியது.
இதன் தொடர்ச்சியாக 1977இல் உருவான இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்ஜிஆருடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். 1980 காலகட்டத்தில் வந்த சில்க் எப்படி கவர்ச்சி கலந்த கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தாரோ, அதற்கு முன்னரே அவ்வாறு கவர்ச்சியில் தாராளம் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் ராதா சலுஜா.
முன்னாள் எம்எல்ஏவான காளிமுத்து கதை, வசனம் எழுத, கே சங்கர் இயக்கத்தில் வெளியான இன்று போல் என்றும் வாழ்க திரைப்படம் அக்மார்க் எம்ஜிஆர் படமாக அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்னர் வெளியான இந்த படத்தில் அரசியல் நொடி சார்ந்த வசனங்கள் சற்று தூக்கலாகவே இருந்தன. தேவைப்படும் இடங்களில் பிரச்சாரமாகவே படத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் காலகட்டத்தில் எம்ஜிஆர் வைத்து கமிட்டாகி இருந்த பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து விரைவாக படத்தை முடிக்க வேண்டும் என பரபரப்பாக இருந்தார்கள். அவருடன் தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் தேர்தலுக்கு முன்பே சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், வழக்கமாக தனது படங்களில் இருக்கும் ஜனரஞ்ச அம்சங்களை தவிர்த்து, அதிமுகவின் பிரசார யுக்தியை பயன்படுத்தும் விதமாக பாடல்கள், காட்சிகளை புகுத்த புதுப்புது பாடல் ஆசிரியர்களுக்கும், பாடகர்களுக்கும் எம்ஜிஆர் வாய்ப்பு அ்ளித்து வந்தார்.
தாம் அழைக்கும் நேரம் வந்து எவ்வளவு நேரமானாலும் இருந்து, தன் வேலையை முடித்துக்கொடுக்கக்கூடிய ஆட்களையே அவர் விரும்பினார். அந்தச் சமயம், ஒரு பாடல் காட்சி எடுத்தார். அதில்தான் தொழிலாளர் அனைவருக்கும் ஆதரவாக இருப்பதை வெளிப்படுத்தினார். தொழிலாளர் கைகளை பற்றிய பாட்டாக இருந்தாலும், இதைக் கேட்கும்போதும் சில காட்சிகளில் தன் கையை உயர்த்தி க்ளோசப் காட்சிகளாக இந்த கை பாடலை எடுக்கப்பட்டிருக்கும். "இது நாட்டை காக்கும் கை – உன் வீட்டை காக்கும் கை" என்ற இந்த பாடல் மிகவும் பிரபலமானது.
இந்தப் பாட்டில், இது பெண்கள் தம் குலம் காக்கும் கை, இது திருடும் கை அல்ல என்று எதிரெதிர் கருத்துக்களாக பாடல் வரிகள் அமைந்திருக்கும். அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒலிக்கும் பிரதான பாடலாகே இது அமைந்தது.
இதுதவிர எம்எஸ் விஸ்வநாதன் இசையில் அன்புக்கு நான் அடிமை, புதுமை பெண்கள், வெல்கம் ஹீரோ போன்ற பாடல்களும் ஹிட்டாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன. இந்த படத்தின் பாடல்களே அதிமுக கோட்டையை பிடிப்பதற்கான கருவியாக இருந்ததாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளும் பாராட்டுகளை தெரிவித்தன.
எம்ஜிஆர் அலை வீசிய அந்த காலகட்டத்தில் இதே நாளில் வெளியான இன்று போல் என்றும் வாழ்க படம் இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எம்ஜிஆர் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய திருப்புமுனைக்கு முன்னர் வெளியான இந்தப் படமாக அவரது மற்ற படங்களைபோல் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், எம்ஜிஆர் ரசிகர்களாலும், அபிமானிகளாலும் மறக்க முடியாத படமாகவே இருந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்