HBD P. C. Sreeram: காட்சிகளின் கலை சிற்பி பி.சி.ஸ்ரீராம்!
Jan 26, 2023, 06:00 AM IST
காட்சிகளின் சிற்பியாகத் தமிழ் சினிமாவில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம் அவர்கள் இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
திரைப்படம் என்பது கதாநாயகனை மையமாக வைத்து நகரும். ஆனால் உண்மையில் முழுமையான சினிமா அப்படி கிடையாது. ஒரு படத்திற்குப் பின்னால் குறைந்தது 1500 கலைஞர்கள் வேலை செய்வார்கள். ஒரு சினிமாவை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாமல் அதனை முழுமைப் படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதனை முழுமைப்படுத்த ஒளிப்பதிவு மிகவும் முக்கியமாகும்.
அந்த ஒளிப்பதிவு கலையில் கை தேர்ந்த ஜாம்பவானாகத் திகழ்ந்து வருபவர் தான் பி.சி ஸ்ரீராம். ஒலிக்கற்றைகளை சினிமாவில் ஓவியமாகத் தீட்டுபவர் இவர். வித்தியாசமான காட்சியை வடிவமைப்பதில் இவருக்கு நிகர் இவர் மட்டுமே. இவரது சிறப்பு என்னவென்றால் இவர் எடுக்கும் காட்சிகளில் அமைந்திருக்கும் ஒளிக்கலவை தான்.
பி.சி ஸ்ரீராம், ஒளிப்பதிவாளர் கலையை மெட்ராஸ் திரைப்படக் கல்லூரியில் கற்றுக் கைதேர்ந்தார். ஒளியை புதிய கோணத்தில் வளர்த்தெடுத்தவர். 1956 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி பிறந்த பி.சி ஸ்ரீராம் கல்லூரி முடித்த பிறகு சிறு சிறு படங்களில் பணியாற்றினாலும் பெரிய கவனம் பெறவில்லை.
கணவன்-மனைவி வாழ்க்கையை கேமரா மூலம் திரைக்குக் கடத்திய மௌன ராகத்தின் மூலம் மக்களிடம் பிரபலமானார் இவர். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. மீண்டும் மணிரத்னத்துடன் அக்னி நட்சத்திரம் மூலம் இணைந்தார் பி.சி ஸ்ரீராம்.
அதன் பின்னர் கீதாஞ்சலி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மணிரத்னம்-பி.சி ஸ்ரீராம் இவர்களின் கூட்டணியில் உருவான திரைப்படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படம் நாயகன். அவ்வளவு எளிதில் இந்த படத்தை விவரித்து விட முடியாது. தற்போது வெற்றிகரமாகத் தமிழ் சினிமாவில் இருந்து வரும் இயக்குநர்களுக்கு இந்த படம் ஒரு பாடமாக இருந்து வருகிறது. கதையை விட இந்த படத்தில் காட்சிகள் பேசும், அதனைப் பேச வைத்தது பி.சி ஸ்ரீராம்.
காட்சிகள் மூலம் கதைகளை மக்களுக்குக் கடத்தக்கூடியவர் பி.சி ஸ்ரீராம். இவரைப் பிடித்த காரணத்தினால் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் இவரை ஒளிப்பதிவாளராக நியமித்தார். இன்று வரை அந்த படம் அனைவருக்கும் பிரம்மிப்பின் உச்சமே.
ஒளிப்பதிவாளராக மட்டுமில்லாமல் விக்ரமை கதாநாயகனாக வைத்து மீரா என்ற படத்தில் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். வியாபார ரீதியாக இந்த படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அபூர்வ சகோதரர்களின் கமலை நமக்கு குள்ளனாக காட்டியது இவருடைய ஒளிப்பதிவு.
கமலஹாசன்-அர்ஜுன் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் குருதிப்புனல் இந்த படத்தை இயக்கியவரும் இவரே. மணிரத்தினத்துடன் பல படங்கள் இணைந்து இவர் வேலை செய்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்ற திரைப்படம் அலைபாயுதே.
பச்சை நிறமே என்ற பாடல் காட்சிகள் இன்று வரை இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணம் இவர் தான். இவர் படம் காட்டவில்லை பாடம் கற்றுத் தருகிறார் என்பது தற்போது வளர்ந்து வரும் கலைஞர்களின் வாக்கு.
ஆம் தமிழ் சினிமாவில் ஜீவா, கே.வி ஆனந்த் போன்ற பல ஒளிப்பதிவாளர்களை உருவாக்கியவர் இவர்தான். காட்சிகளின் மூலம் கதையை மனதில் நிறுத்தக்கூடியவர் இந்த பி.சி ஸ்ரீராம் என்றால் அது மிகையாகாது. இன்று 67வது பிறந்த நாளை கொண்டாடி வரும் இவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.
டாபிக்ஸ்