HBD Meena: ‘அவர் என் கூடதான் இருக்கார்.. எனக்கு ஒழுக்கத்த கத்துக்கொடுத்தவர் அவர்தான்’ -48 வது பிறந்தநாளில் மீனா!
Sep 16, 2024, 07:46 AM IST
HBD Meena: கணவர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். எப்போதும் உன்னுடைய அம்மாவையே சார்ந்து இருக்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். - மீனா!
நடிகை மீனா இன்றைய தினம் தன்னுடைய 48 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது கேரியரில் அவர் கொடுத்த முக்கிய 3 பேட்டிகளை இங்கே பார்க்கலாம்.
கணவர் சொல்லிக்கொடுத்த ஒழுக்கம்
மீனாவின் கணவர் கடந்த 2022ம் ஆண்டு இறந்தார். அதில் உடைந்து போன அவர் நெகிழ்ச்சியாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில், என்னை எல்லோரும் வேலையில் மிகவும் ஒழுக்கமானவள், அர்ப்பணிப்போடு உழைப்பவள் என்றெல்லாம் சொல்கிறார்கள். சிறிய வயதில் நான் அப்படி இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஏனென்றால் அந்த வயதில் என்னுடைய உடலில் சக்தி இருந்தது; நான் ஓடினேன். அந்த சமயத்தில் எனது வயதை விட மூத்தவரான என்னுடைய அம்மா எனக்கு முன்பாகவே எழுந்து என்னை தயார்படுத்துவார். எனக்கு எந்த விதத்திலும் அவர் கஷ்டம் கொடுக்காமல் 100% என்னை என்னுடைய தொழிலில் இயங்க அவர் உறுதுணையாக இருந்தார். அம்மா மட்டுமல்ல அப்பாவும் என்னுடைய தொழிலுக்கு துணையாக இருந்தார்.
அவர் இங்கதான் இருக்கார்
இருவருமே எனக்காக அவருடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். ஆகையால் என்னால் சினிமாவில் நல்லபடியாக இயங்க முடிந்தது. பொதுவாக அந்த காலத்தில் ஆண் வேலைக்குச் செல்ல வேண்டும்; பெண் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் எங்கள் வீட்டில் அப்படியே மாறுதலாக எனது அம்மா என்னுடனும் எனது அப்பா வீட்டில் உள்ள வேலைகளையும் கவனித்து வந்தார். இந்த சமயத்தில் நான் இரண்டு பேரை இங்கு மிகவும் மிஸ் செய்கிறேன். ஒன்று என்னுடைய அப்பா, இன்னொன்று என்னுடைய கணவர்.
இந்த சமயத்தில் அவர்கள் என்னுடன் இருந்திருந்தால் முதல் சீட்டில் உட்கார்ந்து என்னை ரசித்து இருப்பார்கள். அவர்கள் இப்போதும் எங்களுடன் தான் இங்கு இருக்கிறார்கள். கணவர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். எப்போதும் உன்னுடைய அம்மாவையே சார்ந்து இருக்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.
ஷூட்டிங்கிற்கு தனியாகச் செல் என்பார். என்னிடம் அப்படி தொடர்ந்து சொல்லி சொல்லி தைரியமானவளாக மாற்றினார். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு தான் வெளி உலகம் என்றால் என்ன என்பதை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். எனக்கு ‘நோ’ சொல்ல கற்றுக் கொடுத்தார். என்னுடைய மகள் மிக மிக குறைவாகதான் பேசுவாள்;ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவள் பேசுவதை பார்க்கும் பொழுது இவள் இவ்வளவு அழகாக பேசுவாளா?என்று எனக்கு தோன்றியது” என்று பேசினார்.
மீனாவின் மகள் பேட்டி
மீனாவின் மகள் அம்மா மீனா பற்றி பேசும் போது , “அம்மா மிகவும் கடினமாக உழைப்பாளி. ஆனால் வீட்டுக்கு வந்தால் அம்மா அம்மாவாக மட்டுமே இருப்பார் அந்த இடத்தில் ஒரு கதாநாயகியாக அவர் இருக்க மாட்டார். நான் ஒரு வெற்றிகரமான மனிதராக இருந்து உங்களை பெருமைப்படுத்துவேன். உங்களுக்கு நான் பெரியதாக ஏதாவது ஒன்றை நிச்சயம் வாங்கி தருவேன்.அது ஒரு மிகப்பெரிய வீடு என்பதை நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அப்பா இறந்த பிறகு அம்மா மிகவும் சோகமாக மாறிவிட்டார் எப்போதுமே மன அழுத்தத்தில் இருந்தார். அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவர நான் முடிந்தவரை உதவி செய்தேன். அம்மா பலமுறை என் முன்னே அழுது இருக்கிறார்கள். அதை பார்க்கும் பொழுது நானும் மிகவும் கவலைப்படுவேன். ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி இருவரும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முயற்சி செய்வோம்.
அந்த சமயத்தில் நான் எனது அம்மாவிற்கு பரிசு ஒன்றை கூட வாங்கி கொடுத்தேன். குழந்தையிலிருந்து நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள்; இனி நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். நிறைய டிவி சேனல்கள் எனது அம்மாவை பற்றி தவறான தகவல்களை வெளியிடுகின்றனர்.
அதில் சில பிரபலமான டிவி சேனல்கள் உண்டு. தயவு செய்து இது போன்ற தகவல்களை வெளியிடாதீர்கள்; எனக்காக இதை நிறுத்திக் கொள்ளுங்கள். அம்மா ஒரு கதாநாயகி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு மனிதர் தான். அவருக்கும் உணர்வுகள் உண்டு.” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்