HBD Loosu Mohan: 'உடல் மொழியை தன் மொழியாக்கிய உன்னதக் கலைஞன் லூசு மோகன்'
Feb 08, 2024, 05:50 AM IST
‘காமெடி நடிகராக ஜொலிக்காவிட்டாலும் கிடைக்கும் சின்ன சின்ன வேடங்களில் கூட சிக்சர் அடித்தவர். மெட்ராஸ் பாஷை பேசி நடித்த மகா கலைஞன். தமிழக அரசு 2000 ஆம் ஆண்டு இவரின் கலைச்சேவையை பாராட்டி கலைமாமணி விருது வழங்கியது.
காமெடி நடிகர் “லூசு மோகன்”
இந்த பெயர் கேட்கும் போதே உங்கள் மனத்திரையில் அவர் தோன்றி விடுகிறாரா. ஒடிசலான மெலிந்த தேகம். சிமிட்டும் கண்கள் , உருட்டு விழிகள், கலைந்த கேசம், வாயிழுக்கும் மெல்லிய சிரிப்பு, கழுத்தை சுற்றி கட்டிய கைக்குட்டை, பார்டர் வச்ச முண்டா பனியன், டவுசர் தெரிய கட்டம் போட்ட கைலி, இடுப்பில் பட்டையாக துணி பெல்ட் என்ற மாறாத காஷ்ட்யூம்களுடன் இவர் உடல் மொழி நடிப்போடு எந்த நடிகரும் பேசாத மெட்ராஸ் பாஷைக்கு சொந்தக்காரர். கிட்டத்தட்ட ரிக்சா காரர் அல்லது வேலைக்காரர் உங்கள் மனக்கண்களில் தெரியும் மனுசன் தான் இந்த கட்டுரை நாயகன் லூசு மோகன்.
பிறப்பு
1928 பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். ஆறுமுகம் மற்றும் வடிவுடையாள் அவர்களின் இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது தந்தை லூசு ஆறுமுகம் நாடக நடிகர். இவர் பெற்றோர் வைத்த பெயர் ஆறுமுகம் மோகனசுந்தரம். தனது தந்தையின் பாதையில் சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
1944 ல் பி.யூ. சின்னப்பா அவர்களின் படமான ஹரிச்சந்திரா என்ற படத்தில் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார். அந்த காலத்து பிரபல ஹீரோ படத்தில் அறிமுகம் ஆனாலும் கூட தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்து விடவில்லை. ஒவ்வொரு கம்பெனியிலும் வாய்ப்பு தேடிக்கொண்டே பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்து சிறு சிறு நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
1970 க்கு பின் தான் சின்ன சின்ன வாய்ப்புகள் வந்தது. 1974 ல் கடவுள் மாமா என்ற படத்தில் சற்று நீண்ட கதாபாத்திரம் ராக்கெட் என்ற பெயரில் கிடைத்தது. 1979 ல் வெளியான "ரோசாப்பூ ரவிக்கைகாரி" என்ற திரைப்படம் தான் இவருக்கு பாப்புலாரிட்டி கொடுத்த படம்.
சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கி 1937 ல் வெளிவந்த "மிஸ்டர் டைட் அன்ட் லூஸ்" என்ற படத்தில் இவரது தந்தை ஆறுமுகம் லூசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகி லூசு ஆறுமுகம் என்று அழைக்கப்பட்டார். அவரின் தடத்தில் நடந்து முன்னேற்றம் கண்ட மோகனசுந்தரமும் தனது பெயருக்கு முன்பு "லூசு" என்ற அடையாளத்தை சேர்த்து லூசு மோகன் என்ற பெயரில் தன்னை அடையாளப்படுத்தினார். ‘
பச்சயம்மாள் என்பவரை திருமணம் செய்தார். மூன்று பெண் குழந்தைகள் ரேவதி, கீதா, லட்சுமி மற்றும் ஒரு மகன் கார்த்திகேயனுக்கு தந்தை ஆனார். சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகராக மூன்று தலைமுறையின் அனைத்து முன்னனி இயக்குநர்கள், நடிகர்கள், நடிகையருடனும் நடித்திருக்கிறார்.
அவர் நடித்த படங்களின் பட்டியல் ஆயிரத்தை எட்டும். ஆனால் அதற்கான போராட்டம் மிகவும் நீண்டது. இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்த வரலாறும் உண்டு. காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்கள் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மேடைப் பேச்சாளர் மற்றும் பிரச்சாரமும் செய்து வந்தார். இசையில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தனது குரலில் "பொண்ணுன்னா பொண்ணு" என்ற பாடலை பாடி இருக்கிறார்.
சினிமாவில் பொதுவாக மக்கள் மத்தியில் ஒரு நடிகர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் பதிந்து விடுகிறாரோ அதே போன்ற கதாபாத்திரங்களே தொடர்ந்து அமையும் என்பது எழுதப்படாத விதி. இவருக்கும் அப்படித்தான். ஆயிரம் படங்கள் என்ற பெரிய எண்ணிக்கையை தொடுமளவு நடித்தாலும் பெரும்பாலும் ரிக்சாகாரர், வாட்ச்மேன், கூலிக்காரர், அப்பாவி போலிஸ், பேட்டை ரௌடி, போன்ற எளிய கதாபாத்திரங்களில் தனது வழக்கமான மெட்ராஸ் பாஷையில் நகைச்சுவை கலந்த வேடங்களில் மின்னினார்.
சின்னப்பா காலத்தில் நடிக்க வந்து எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவகுமார் என்று தொடர்ந்து அஜித் வரை நடித்து விட்ட நகைச்சுவை நடிகர். மராத்தி, இந்தி, துளு, போஜ்புரி ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தங்கர்பச்சான் இயக்கிய அழகி ஆகும்.
இந்த படத்தில் விவேக், பாண்டுவுடன் நடித்த காட்சிகள் தியேட்டர்களில் அமர்க்களப்படும். சாதனை என்ற படத்தில் சிவாஜி இயக்குநர் ஆக நடிக்க இவர் துணை இயக்குநர் ஆக கிளாப் போர்டு அடிப்பார். அந்த காட்சியில் தவறு செய்து விட்டதாக கருதி சிவாஜி அடிப்பார். அப்போது அவர் அழுகையுடன் தேம்பி நடிப்பார். ஒரு நகைச்சுவை நடிகனுக்குள் ஒழிந்து இருக்கும் அற்புத திறமையை சிவாஜி கணேசன் பாராட்டினார்.
தமிழக அரசு 2000 ஆம் ஆண்டு இவரின் கலைச்சேவையை பாராட்டி கலைமாமணி விருது வழங்கியது. இவர் மனைவி 2004 ல் இறந்தார். பின்னர் தனது மகனுடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார். இறுதியில் 2012 செப்டம்பர் மாதம் பதினாறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது 84 வயதில் காலமானார்.
இன்று அவருக்கு 96 வது பிறந்த நாள். தனிப்பட்ட காமெடி நடிகராக ஜொலிக்காவிட்டாலும் கிடைக்கும் சின்ன சின்ன வேடங்களில் கூட சிக்சர் அடித்தவர். மெட்ராஸ் பாஷை பேசி நடித்த மகா கலைஞன். மரணம் நம்மை விட்டு பிரித்தாலும் கூட கறுப்பு வெள்ளை படம் காலம் முதல் மல்டி கலர் படம் வரை அவரின் தனித்துவமான நடிப்பில் வரும் காட்சிகள் எல்லாம் இந்த தலைமுறைக்கும் அவரை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும். ஆம்.. அதுதான் அந்த மகா கலைஞனுக்கான பெருமை என்றால் மிகையில்லை.
டாபிக்ஸ்