50 Years of Naan Avanillai: தமிழில் பிளாக் அண்ட் ஒயிட் பிளேபாய் படம்! ரசிக்க வைத்த காதல் மன்னன் ஜெமினி கணேசன் காதல் லீலை
Jun 07, 2024, 04:58 PM IST
தமிழில் வெளியான பிளாக் அண்ட் ஒயிட் ப்ளேபாய் படமாக இருக்கும் நான் அவனில்லை வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. ஒன்பது விதமான வேடங்களில் கல்யாண மோசடி மன்னனாக காதல் மன்னன் ஜெமிணி கணேசன் காதல் லீலை ரசிக்க வைத்தது.
கலர் திரைப்படங்கள் தமிழில் பிரபலமான போதிலும் பிளாக் அண்ட் ஒயிட்டில் இந்த படத்தை உருவாக்கி, கதை அமைப்பிலும் சரி, காட்சி அமைப்பிலும் சரி ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுத்து வெற்றியு கண்டார் மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்.
கல்யாணம் மோசடி மன்னன் மாதவ் காஜி என்பவரது வாழ்க்கையை மையப்படுத்தி, கடந்த 1962 ஆம் ஆண்டு ‘டூ மீ நவ்ஹெக்’ என்ற மராத்தி நாடகம் ஒன்று வெளியானது. இந்த நாடகத்தை பிரகலாத் கேசவ் அத்ரே என்பவர் இயக்கி இருந்தார். இந்த நாடகத்தைத் தழுவி நான் அவனில்லை என்ற படத்தை பாலசந்தர் உருவாக்கினார்.
இந்த படத்தின் டைட்டில் அப்படியே பொருந்துவது போல் படத்தில் டுவிஸ்ட்கள், காட்சியமைப்புகளுடன் விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருப்பார்.
ஆண்டி ஹீரோ வேடத்தில் ஜெமினி கணேசன்
வெவ்வேறு அடையாளங்களுடன் வெவ்வேறு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு சொகுசாக வாழும் பலே கில்லாடி ஹீரோ இருப்பது தான் 'நான் அவனில்லை' படத்தின் ஒன்லைன்.
காதல் மன்னன் என்ற ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஜெமினி கணேசன் இந்த கதைக்கு அப்படியே பொருந்தி போனார். அப்பாவித்தனம், காதல் லீலை, அயோக்கியதனம், திருட்டுதனம் என பல்வேறு உணர்ச்சிகளை தனது கதாபாத்திரத்தின் வழியே வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருப்பார். ஒன்பது வேடங்களில் பல பெண்களை ஏமாற்றும் மோசடி பேர் வழியாக வில்லனிச கதாபாத்திரத்தில் கதைக்கு நியாயம் சேர்க்கும் விதமாக இவரது நடிப்பு அமைந்திருந்தது.
ஆண்டி ஹீரோ என்ற சொல் அப்போது தமிழ் சினிமாவில் பெரிதாக வழக்கத்தில் இல்லாத நிலையில் அதுபோன்றதொரு கதாபாத்திரத்தை செய்த ஹீரோவாக ஜெமினி கணேசன் திகழ்ந்தார். அப்பாவியான முகம், நல்லவர் பிம்பம், காதல் மன்னன் என்றே பார்த்து பழகிய ஜெமினி கணேசனை இப்படியான பிம்பத்தில் பார்ப்பது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
லட்சுமி, ஜெயபாரதி, ஜெயசுதா, பி.ஆர்.வரலட்சுமி போன்றோர் ஹீரோயின்களாகவும், பூர்னம் விஸ்வநாதன் நீதிபதி கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். தேங்காய் சீனிவாசன், காத்தாடி ராமமூர்த்தி, செந்தாமரை, காந்திமதி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். கமல்ஹாசன், எஸ்.ஏ. அசேகன் சிறிய கேமியோ கதாபாத்திரத்தில் வந்து போவார்கள்.
பாடல்கள் ஹிட்
கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இந்தப் படத்துக்கு இசையமைத்து இருந்தார். ராதா காதல் வராதா, எங்கிருந்தோ வந்தாள் ஆகிய பாடல்கள் அந்த காலகட்டத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சூப்பர் ஹிட்டான ரீமேக்
இந்த படத்தின் கதையை அப்படியே 2007இல் ஜீவன் நடிப்பில் ரீமேக் செய்தனர். புதிய நடிகர்கள் தவிர படத்தின் கதையில் பெரிய மாற்றங்களை செய்யாமல் உருவாக்கப்பட்ட ப்ரஷ் ஆக இருந்ததுடன், மீண்டும் ஹிட்டடித்து. அந்த வகையில் தமிழில் உருவாகி தமிழில் ரீமேக் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையும் இந்த படம் பெற்றது.
பட்டையை கிளப்பிய பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இந்த படத்தில் ஒன்பது விதமான கெட்டப்புகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜெமினி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்தது. குடும்ப திரைப்படங்கள், மெலோ டிராமா திரைப்படங்களுக்கு மத்தியில் ப்ளே பாய் பாணி கதையாக வெளியான நான் அவனில்லை புதுமையான அனுபவத்தை தந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது. தெலுங்கிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் ஹிட்டடித்தது. தமிழ் சினிமாவில் கல்ட் ஸ்டேட்டஸ் அந்தஸ்தை பெற்ற நான் அவனில்லை வெளியாகி இன்று 50 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்