Vetrimaaran: இதுதான் பிரச்சனை... அவ்ளோ இருக்கு... இதுக்கெல்லாம் பதில் சொல்லி ஆகணும்... ஓபனாக பேசிய வெற்றிமாறன்
Sep 24, 2024, 12:30 PM IST
Vetrimaaran: திரைப்படங்களை இயக்கி வெளியிடுவதில் சில பிரச்சனைகள் உள்ளது. அதற்கான கன்டீஷன்களும் உள்ளது. இங்கு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பதில் கூறியே ஆக வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
சினிமாவில் நடிகர்களின் சம்பளம் அதிகரித்துள்ளது. இதனால், திரைப்படங்களின் பட்ஜெட்டும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய கதாநாயகர்களுக்கு பெரிய பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கும் வழக்கம் வந்துள்ளதால், சினிமா எடுப்பது இங்கு பிரச்சனையாக உள்ளது.
இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களை ஓடிடி தளங்களும் வாங்க பெரிதும் முன்வருவதில்லை. அப்படி அவர்கள் வாங்க முன் வந்தாலும் பல கண்டிஷன்களை முன் வைக்கின்றனர் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.
மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாம் பாதிக்கப்பட்ட நபரின் பக்கமே நிற்க வேண்டும். அதை விடுத்து, பாதிக்கப்பட்ட சமயத்திலேயே ஏன் கூறிவில்லை என கேள்வி எழுப்புவது நியாயமற்றது. ஒருவர் மேல் அளிக்கப்படும் பாலியல் புகார்களுக்கு அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பதில் கூறியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கப் பத்திரிகையான தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர், இந்தியாவில் அதன் பதிப்பை தொடங்கியுள்ளது. இதுதொடர்பான விழாவில், தமிழ் சினிமாவின் இயக்குநர்களான வெற்றிமாறன், பா,ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் போது வெற்றிமாறன் சினிமாத் துறையில் நடக்கும் சில முக்கிய விஷயங்கள் குறித்த கருத்துகளை முன்வைத்தார். இது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்...
கேரள திரைத்துறையில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சினிமாவின் ஒரு அங்கமாக இருப்பதால் இதைப்பற்றி பேசித்தான் ஆக வேண்டும்.
பெண் ஒருவர் தான் பாதிக்கப்பட்டதாக பொது வெளியில் கூறினால், அந்தப் பெண்ணை குற்றவாளி போல் பார்க்கின்றனர். அவரிடம் நீங்கள் குற்றம் நடந்த சமயத்திலேயே இதுகுறித்து ஏன் கூறவில்லை. நீங்கள் இடம் கொடுக்காமல் இப்படி நடக்குமா என பல கேள்விகளை அடுக்கி வருகின்றனர். இது மிகவும் மோசமான விஷயமாக நான் பார்க்கிறேன்.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் நபர் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், நாம் பாதிக்கப்பட்ட நபரின் பக்கமே நிற்க வேண்டும். இதுவரை ஒருவர் மீது குற்றச்சாட்டுகளே இல்லை என்பதற்காக அவர் நல்லவராகத்தான் இருப்பார் எனக் கூறக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர் தான் நிரபராதி என்பதை நிரூபித்தே ஆக வேண்டும். அதற்கு அவர் பதிலளித்தே ஆக வேண்டும் எனக் கூறினார்.
ஓடிடி நிறுவனங்களின் கட்டுப்பாடு
பெரிய ஹீரோக்கள் எல்லாம் தங்களின் சம்பளத்தை உயர்த்தி வருகின்றனர். இதுவே படத்தின் பட்ஜெட்டை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல், படத்தின் கதை குறித்த அவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இது பெரும் பிரச்சனையாக உள்ளது.
சில நாட்களுக்கு முன் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் வெளியானது. அதில், இயக்குநரின் பெயரைத் தவிர வியாபார ரீதியாக கொண்டு செல்ல எதுவும் இல்லை. ஆனால், அந்தத் திரைப்படம் அதன் பட்ஜெட்டை விட 2 மடங்கு சம்பாதித்தது. இதனால், தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை குறைகிறது என்ற கருத்தை நான் ஏற்க மாட்டேன்.
அதேசமயம், பெரிய நடிகர்களின் படத்தை பல மடங்கு அதிகமான தொகை கொடுத்து வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. அப்படி வாங்கினாலும், மத உணர்வு, மனித உணர்வு என பல கட்டுப்பாடுகளை முன் வைக்கின்றனர். இதனால் படம் எடுப்பதில் சிக்கலாக உள்ளது என அவர் கூறினார்.