ரஜினி இடத்தில் விஜய்.. ரொமான்டிக் ஹீரோ ஆக்ஷன் ஹீரோவாக மாறியது இங்கு தான்.. ரகசியம் சொல்லும் டைரக்டர்
Oct 14, 2024, 04:38 PM IST
நடிகர் ரஜினிக்காக எழுதிய கதையில், நடிகர் விஜய்யை நடிக்க வைத்தது ஏன், அது என்ன படம் என்பதை விளக்குகிறார் இயக்குநர் ஏ. வெங்கடேஷ்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குநராக மட்டுமே தெரிந்த ஏ.வெங்கடேஷ் அங்காடி தெரு படத்தின் மூலம் கொடூர வில்லனாகவும் தெரியத் தொடங்கினார். கருங்காளி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பார்க்கும் மக்களால் வசைபாடப்பட்டார்.
இவர், இத்திரைப்படத்தில் நடிகராகும் முன்பே, பல திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இந்நிலையில், இவர் நடிகரும் பிரபல யூடியூபருமான சித்ரா லக்ஷ்மணனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தான் இயக்கிய பகவதி படம் குறித்த சில முக்கிய விஷயங்கள் குறித்து பேசியிருப்பார்.
முழுக்க முழுக்க ரஜினி படம்
அந்த நிகழ்ச்சியில், பகவதி படம் முழுக்க முழுக்க நடிகர் ரஜினிகாந்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை என பேசியுள்ளார். இந்தப் படத்தின் கதையை பலமுறை நடிகர் ரஜினியிடம் சொல்ல முற்பட்டும் அவரால் கதையை சொல்ல முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
தனது இயக்கத்தில் வெளியான மகாபிரபு படத்தை பார்க்க நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். அப்போது, அவருக்காக எதாவது ஒரு கதை எழுத வேண்டும் என நினைத்து பகவதி திரைப்படத்தின் கதையை முழுவதுமாக எழுதி முடித்தேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனது 2வது படமாக வரவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால், என்னால், நடிகர் ரஜினியை பார்க்கவோ, அவரிடம் படத்தின் கதையை சொல்லவோ முடியாமல் போனது. இதனால், இந்தப் படத்தை நடிகர் சரத்குமாரை வைத்து இயக்கலாம் என முடிவு செய்தேன். அதுவும் என்னால் முடியாமல் போனது. காரணம் பகவதி படத்திற்கான பட்ஜெட் மிகவும் அதிகம். இதனால், சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் இந்தப் படத்தை எடுக்காமலேயே இருந்தேன்.
ரஜினி இடத்தில் விஜய்
பின் ஒரு சமயத்தில், படம் பார்க்க தியேட்டருக்கு சென்றபோது, அங்கு விஜய் நடித்த ஷாஜகான் படத்தின் ட்ரெயிலர் ஒளிபரப்பப்பட்டது. அதில், விஜய், ரயில்வே ஸ்டேஷனில் நின்று காதலர்களை சேர்த்து வைத்துவிட்டு வசனம் பேசும் காட்சி இடம்பெற்றது. அப்போது, அவர் சிகரெட்டை பற்ற வைத்து தீக்குச்சியை கீழே போடும் காட்சிக்கு தியேட்டரில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி, விசிலடித்து, கத்தி கொண்டாடினர். இதை பார்த்ததும் அடுத்த நாளே பகவதி படத்தில் விஜயை நடிக்க வைக்கலாம் என தீவிரமாக முடிவு செய்து அவரிடம் பேசத் தயாரானேன்.
தயங்கிய விஜய்
இதுகுறித்து தகவலறிந்த விஜய் 3 நாட்களுக்கு பின் கதை குறித்து பேச அப்பாயின்ட்மெண்ட் தருகிறார். கதையை முழுவதுமாக கூறிய போது, இது ஆக்ஷன் திரைப்படமாக இருக்கிறதே. எனக்கு இந்தப் படம் சரியாக அமையுமா எனக் கேட்டார். அப்போது அவரை பேசி சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தேன் எனக் கூறினார்.
இயக்குநர் வெங்கடேஷ், இந்தப் படம் எடுப்பதற்கு முன் விஜய் நடித்த அனைத்து படங்களுமே குடும்ப சென்டிமென்ட் படங்கள் தான். ரொமான்டிக் ஹீரோவான இவர், இவ்வளவு பஞ்ச் வசனங்கள் பேசி இதுவரை யாரும் பார்த்ததே இல்லை. இதனால்,, விஜய் உட்பட அனைவருக்கும் இது ஒருவித உருத்தலை ஏற்படுத்தியே வந்தது.
ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
இதற்கிடையில், பகவதி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.
பகவதி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் தான் பாபா படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் என்னிடம் வந்த விஜய், நான் ரஜினி சாரை பார்த்துவிட்டு வந்து விடவா என்று கேட்டார். இந்த நிலையில் நான் அடுத்ததாக எனக்கு ஷிப்ட்டிங் இருக்கிறது அதனால், இந்த ஷாட்டை மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு, நீங்கள் சென்று விடுங்கள் என்று கூறினேன். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினி சார் எங்களது படப்பிடிப்பிற்குள் வந்து விட்டார். நேராக விஜய் நோக்கி வந்தவர், விஜய் நீங்கள் இருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன் அதனால்தான் உடனே உங்களை பார்க்க வந்தேன் என்று சொன்னார்.
கிண்டலடித்த விஜய்
விஜய் சார் அப்பொழுது தோளில் துண்டை போட்டிருந்தார். ரஜினி சார் வருவதைப் பார்த்த அடுத்த நொடியே, தோளிலிருந்து துண்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டார். இந்த நிலையில் முன்னதாக ரஜினிதான் இந்த கதைக்கு சரியானவர் என்று அவர் சொன்னதை குறிப்பிட்டு, பாருங்கள் சார் அவர் படப்பிடிப்பிற்கே வந்து விட்டார் என்று கிண்டலடித்தார் எனக் கூறி தன் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
ஆக்ஷன் ஹீரோவான விஜய்
பின் பகவதி படம் வெளியான நிலையில், விஜய்யின் நடிப்பை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தாராம். பகவதி படத்தைத் தொடர்ந்தே நடிகர் விஜய்க்கு திருமலை, கில்லி என அடுத்தடுத்த ஆக்ஷன் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய், செல்வா மற்றும் நிலவே வா என 2 படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் பெற்ற அனுபவத்தை தொடர்ந்தே விஜய் பகவதி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, தற்போது தமிழ்நாடே கொண்டாடும் மாஸ் ஹீரோவாக உள்ளார்.
டாபிக்ஸ்