Director Perarasu: ‘நதியா வளையல், குஷ்பூ இட்லி.. ராமராஜன் சட்டை.. 2 படம் ஓடுனாலே கால்சீட் கொடுக்க மாட்றாங்க’ - பேரரசு!
Mar 30, 2024, 11:38 AM IST
நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில், ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும், தேனாண்டாள் பிலிம்ஸும் தான்.
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு நடிகர் ராமராஜன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.
அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்த இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு பேசினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள்;வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார்.
நதியா வளையல், குஷ்பூ இட்லி என நடிகைகளை மட்டுமே புகழ்ந்த ரசிகர்கள் மத்தியில், ராமராஜன் சட்டை என ஒரு நடிகரையும் புகழ வைத்தது ராமராஜன் தான். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும், தேனாண்டாள் பிலிம்ஸும் தான்.
அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும், சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குநர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு.
ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும், அவருடைய ரசிகர்களும் தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராமராஜன், “2010ல் நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு வந்து நான், இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. இதற்கு காரணம், என்னுடைய ரசிகர்களின், தமிழக மக்களின் பிரார்த்தனைதான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கு நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் ராகேஷ் எனக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்துகின்ற மாதிரி அருமையான திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதன் ட்ரெய்லரையும் பாடல்களையும் நான் ஒரு டெக்னீசியனாகத்தான் பார்த்தேன். இதற்கு விளம்பரமே கொடுக்க வேண்டாம்..
ராமராஜன் படம் என்றால் பார்ப்பதற்கு லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த படத்தின் திரைக்கதையை உலகில் பிறந்த எவரும் கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை. இன்று ராஜா அண்ணன் வருவார் என நினைத்திருந்தேன்.
அவர் வராததால் மனதிற்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.
கே எஸ் ரவிக்குமார் இங்கே இருக்கும்போது சில விஷயங்களை பேச வேண்டும்.. நான் நடித்த ராஜா ராஜா தான் படத்தில் இயக்குநர் ஈ.ராமதாஸிடம் கே.எஸ் ரவிக்குமார் துணை இயக்குநராக வேலை பார்த்தார். நானும் 40 படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவன் என்கிற வகையில், அப்போதே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
அதன்பிறகு நான் நடித்து இயக்கிய ‘பெத்தவ மனசு’ படத்தில் என்னுடன் இணைந்து இணை இயக்குநராக பணியாற்றினார். இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் அளவு புகழ்பெற்ற அவர், மீண்டும் என்னை சந்திக்கும் போது அவர் காட்டிய அந்த மரியாதையை பார்த்த போது, சினிமாவில் உண்மை, நன்றி, விசுவாசம் இன்னும் சாகவில்லை.. உயிரோடு இருக்கிறது என்று நினைக்க தோன்றியது.
கரகாட்டக்காரன் 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு 100 நாள்கள் ஓடிய படங்களை கொடுத்தேன். இந்த படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார்.
இந்த படத்தில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை. எனக்கு ஜோடி எம் எஸ் பாஸ்கர், ராதாரவி அண்ணன் தான்.. சரி ஒரு படம் தியாகம் பண்ணிவிட்டு போவோம் என விட்டுவிட்டேன். ஆனால் அடுத்த படத்தில் ஜோடியும் வேண்டும் பாட்டு வேண்டும்.. இப்போது கூட ஆறு பாட்டுகளுடன் ஒரு படம் கொண்டு வா உனக்கு பண்ணித் தருகிறேன் என ராஜா சார் கூறினார். இளையராஜா இதுவரை உலக அளவில் பெற்ற புகழை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றதில்லை. இனியும் பெற முடியாது.
தன்னுடைய மூன்று புதல்வர்களையும் இசைக்காக சென்னைக்கு அனுப்பிய அந்த தாய் சின்னத்தாய் அல்ல.. தெய்வத்தாய்… மகுடி வாசித்தால் பாம்பு ஆடும். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அண்ணன் இளையராஜா ஆர்மோனியம் வாசித்தால் பாம்பேயே ஆடும்.
அவர் எனக்கு கொடுத்தது போல் வேறு ஒரு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள். நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல, எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று கூட சொல்வேன். ஆனால் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா” என்கிற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் சென்று வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான்தான்.. எங்களுடன் ஒரு மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.
44 படங்களில் நடித்த பின் 45வது படம் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் சாமானியன் திரைப்படம் சரியான நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்