குழந்தையால் படத்தில் நடிக்கவில்லையா?… பூமிகா விளக்கம்
Feb 21, 2022, 12:28 PM IST
நடிகைகளுக்கு திருமணமாகி, குழந்தை இருப்பதால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என சொல்வது தவறான ஒன்று என பூமிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை ஒரு சில நடிகைகள், சில படங்களிலேயே நடித்தாலே ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்று விடுகின்றனர். அவர்கள் நடிக்கும் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படுவதால் மக்கள் அவ்வளவு எளிதாக அவர்களை மறப்பதில்லை. அந்த வரிசையில் நடிகை பூமிகா சாவ்லாவும் ஒருவர்.
இவர் கடந்த 2001ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ’பத்ரி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ’ரோஜா கூட்டம்’, ’ஜில்லுனு ஒரு காதல்' என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்தார். இதனால் பூமிகா தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவர்ட் ஹீரோயினாக மாறிவிட்டார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை பூமிகா சாவ்லா கடந்த 2007ஆம் ஆண்டு யோகா ஆசிரியரான பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாஷ் என்ற மகன் உள்ளார். அதற்கு பிறகு தமிழ் படங்களில் நடிப்பதற்கு சிறிது அளவு பிரேக் விட்ட பூமிகா தற்போது 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பூமிகா சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தனது திரையுலக பயணம் குறித்தும், மக்கள் தன் மேல் வைத்திருக்கும் பார்வை குறித்தும் பேட்டி அளித்துள்ளார். அதில், "நான் இறுக்கமான கயிற்றில் மேல் நடப்பது போல் உணர்கிறேன். நான் இன்னும் திரைத்துறையில் வேலை செய்கிறேன் என்பதைத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த நேரமும் அவர்கள் என்னை அணுகலாம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
மக்கள் எனக்கு திருமணமாகி, குழந்தை இருப்பதால் திரைத்துறையில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்று கருதுகிறார்கள். அந்த நேரங்களில் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தொடர்பாளர்கள் எனக்கு உதவியாக இருக்க வேண்டும். நான் ஒருபோதும் ஓய்வு எடுக்கவில்லை, தென்னிந்தியப் படங்களில் பணியாற்றி வருகிறேன்.
நான் நடித்துள்ள மூன்று படங்கள் ரிலீஸாக தயாராக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதம் தொடங்கவிருந்த படம் என்னிடம் உள்ளது. ஆனால் தேதி பிரச்சனையால் அது தாமதமாகிட்டது. பின்னர் ஓமிக்ரான் அலை ஏற்பட்டது.
இந்தியில் ஒரு படம் நடிக்கவுள்ளேன். ஜனவரி, பிப்ரவரியில் அந்த படம் ரிலீஸாகி இருக்க வேண்டிய படம். ஆனால் அதுவும் கரோனா பரவல் காரணமாகத் தாமதமாகி உள்ளது. இந்த நேரத்தில் ஓடிடி தளங்கள் மிகவும் சாத்தியமானது என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்.
எனக்கு மகன் பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கன்னடப் படத்தில் நடித்தேன். அடுத்து, தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தேன். தெலுங்கிலும் மூன்று படங்களில் நடித்தேன். இப்படி வரிசையாக நான் படங்கள் நடித்தும், நான் திருமணத்திற்குப் பிறகு நடிக்கவில்லை என கூறுகின்றனர்.
குழந்தை பெற்ற பிறகும் வேலையைத் தொடர வேண்டியது அவசியம்.குழந்தைகளுக்காக வேலை செய்வதை நிறுத்தினால், அவர்கள் வளரும்போது நீங்கள் தனித்து விடப்படுவீர்கள் என்றும் அவர் கூறினார்.