Anchor dd: இதுதான் கடைசி அறுவைசிகிச்சை இருக்கணும்.. வலி தாங்க முடியல.. புதிய காலோட வர்றேன் மக்களே! - டிடி நெகிழ்ச்சி!
Sep 11, 2024, 10:15 AM IST
Dhivyadharshini: இதுவே என்னுடைய கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன், நம்புகிறேன். இதிலிருந்து நான் வெளியே வருவதற்கு, கடினமான பயணத்தை கடந்து கொண்டிருக்கிறேன். இது அதிகமான வலியை கொடுக்கிறது. - டிடி நெகிழ்ச்சி!
பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினி தன்னுடைய முழங்கால் அறுவை சிகிச்சை குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
நான்காவது அறுவை சிகிச்சை
இது குறித்து அவர் பதிவிட்டதாவது, “ கடந்த மூன்று மாதங்கள் எனக்கு சோதனை காலம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், என்னுடைய முழங்கால் பகுதியில் பெரிய அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. ஆம், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை நான் செய்து கொண்டிருக்கிறேன். கடந்த 10 வருடத்தில் இது என்னுடைய நான்காவது அறுவை சிகிச்சை ஆகும்.
இதுவே என்னுடைய கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன், நம்புகிறேன். இதிலிருந்து நான் வெளியே வருவதற்கு, கடினமான பயணத்தை கடந்து கொண்டிருக்கிறேன். இது அதிகமான வலியை கொடுக்கிறது. ஆனாலும், முன்னேற்றம் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இதை நான் என்னை திரையில் பார்த்து அன்பைப் பொழிபவர்களுக்காகவும், எனக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்காகவும், அனுதாபம் காட்டுபவர்களுக்காகவும் இங்கு பதிவிட்டு இருக்கிறேன்.
அளவில்லா அன்பை பார்த்து
எனக்கு கிடைத்திருக்கக்கூடிய இந்த அளவில்லா அன்பை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். கடந்த பத்து வருடங்களாக இந்த கடினமான பயணத்தில் எனக்காக வேண்டிக்கொண்டவர்களுக்காகவும், உறுதுணையாக நின்றவர்களுக்காகவும் என்னுடைய மனதின் அடியாளத்தில் இருந்து, இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இது என்னுடைய வாழ்க்கையின் இருண்ட பக்கத்திற்குள் என்னை அழைத்துச் சென்றது. இந்த வலியானது என்னை ஒரு கசப்பான மனிதராக மாற்றக்கூடாது என்று எப்போதும் நான் எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதை செய்வதற்கு உங்களின் அன்பு எனக்கு உதவிகரமாக இருந்தது. இப்போது கொஞ்சம் வெளிச்சம் தெரிவதால், நான் மறுபடியும் வலுவாக வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த சிகிச்சையில் எனக்கு உதவிகரமாக இருந்த மருத்துவர்கள், குடும்பத்தினர் நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த வருடங்களில் நான் எங்கேயாவது நடந்து செல்வதை நீங்கள் பார்த்து இருந்தாலோ, நான் நன்றாக வேண்டும் என்று நீங்கள் என்னிடம் கூறியிருந்தாலோ, இப்போது எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்கள். எனக்கு உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும். நான் தற்போது வலிமை பெற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் நான் என்னுடைய புதிய முழங்காலுடன் சந்திக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
டிடிக்கு முழங்கலாலில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அவர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
அந்தப்பேட்டியில் அவர், "எனக்கு முன்னால் முட்டியில் ஒரு சிறிய பிரச்சினை இருந்தது. அதற்காக ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த அறுவை சிகிச்சையானது தவறாக முடிந்து விட்டது. அதை சரி செய்வதற்காக இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
அந்த அறுவை சிகிச்சையின் கிளை அறுவை சிகிச்சையாக இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இதையெல்லாம் செய்து முடிப்பதற்குள் எனக்கு Autoimmune condition டெவலப் ஆகிவிட்டது. இது எதற்காக வருகிறது, ஏன் வருகிறது என்பதை எல்லாம் நம்மால் கணிக்க முடியாது. அது உங்களுக்கு வந்து விட்டால் உங்களது வாழ்க்கையை அது 360 டிகிரியில் மாற்றிவிடும்.
நோய் வந்த முதல் மூன்று வருடங்களில் ஏன் இது, எனக்கு ஏன் இது வந்திருக்கிறது என்று சொல்லித் தேடிக் கொண்டே இருப்பீர்கள். உலகத்தில் என்னென்னவெல்லாம் கண்டுபிடித்து விட்டார்கள் இதை சரி செய்ய முடியாதா என்று சொல்லி நீங்கள் ஓடிக்கொண்டே இருப்பீர்கள். பல கட்ட முயற்சிகள் செய்வீர்கள்.
ஒரு கட்டத்தில் ஓடி ஓய்ந்து அதை நீங்களே அனுமதித்துக் கொள்வீர்கள். அந்த அனுமதிப்பில் இதுதான் நான். இதற்கு மேலே இதில் முயற்சி செய்ய என்ன இருக்கிறது என்று யோசிப்பீர்கள்.
ஒரு கட்டத்தில் உன்னால் எனக்கு ஏதும் பயனில்லை இதனால் எனக்கு நீ வேண்டாம் என்று சொல்லி கூட சிலர் செல்வார்கள். உங்கள் வேலையை கூட ஒழுங்காக செய்ய முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மை வரும். விஜய் டிவில் என்னால் தற்போது ஒரு நிகழ்ச்சியைக்கூட தொகுத்து வழங்க முடியவில்லை.
காரணம் என்னவென்றால் விஜய் டிவியில் நிற்காமல் செய்யக்கூடிய ஒரு ஷோ கூட இல்லை; அவர்களுடைய கஷ்டமும் எனக்கு நன்றாகவே புரிந்தது. இதையடுத்து தான் நாம் இவ்வளவு நாள் இரண்டு காலில் ஒரு கோட்டையை கட்டினோம். இனி ஒன்றைக் காலில் நம் கோட்டை கட்ட வேண்டும் என்று உள்ளுக்குள்ளையே சொல்லிக்கொண்டு முன்னேறிச் செல்ல முயன்று கொண்டிருக்கிறேன்.
எனக்கு இந்த பிரச்சினை 2013ல் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 10 வருடங்களில் நான் வலி இல்லாமல் தூங்கியது என்று பார்த்தால் வெறும் பத்து நாட்கள் தான் இருக்கும். எல்லா நாளும் எனக்கு வலி என்பது இருந்து கொண்டே இருக்கும். எதனால் இந்த வலி வருகிறது என்பது யாருக்கும் தெரியாது..
இதனால் நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அப்படியே முடங்கி விட்டது. ஆனால் சினிமாவில் எனக்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் ஒரு ஷாட்டுக்கு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வந்தால் போதும். என்னால் இரண்டு நிமிடங்கள் நிற்க முடியும். அதற்கு மேல் நான் இருக்க முடியாது. மேலும் சினிமாவில் நான் என்னுடைய ஸ்டிக்கை பயன்படுத்திக் கொள்வேன். ஷாட் இல்லாத நேரங்களில் அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். என்னால் ஓடவே முடியாது. ஆனால் அதே நேரம் நான் வெயிட் போடாமலும் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல என்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன்” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்