Dhanush : 100 கோடியை தாண்டிய வசூல்.. தட்டித்தூக்கிய தனுஷ்.. ராயனுக்கு ஆஸ்கர் நூலகத்தில் புது அந்தஸ்து! - என்ன தெரியுமா?
Aug 02, 2024, 02:37 PM IST
Raayan: தனுஷ் நடித்து, இயக்கிய ராயன் திரைப்படம் தற்போது புதிய அங்கீகாரம் ஒன்றை பெற்று இருக்கிறது.
Raayan: இரண்டாவது முறையாக தனுஷ் இயக்குநராக களம் இறங்கி இருக்கும் திரைப்படம் ராயன். கடந்த ஜூலை 26ம் தேதி வெளியான இந்தத்திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அவரின் 50 வது திரைப்படமாகவும் அமைந்திருக்கும் இந்தப்படத்தில், அவருடன் இணைந்து சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.
மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
முதல் வார இறுதியில், ராயன் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 60 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், உலகளவில் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்தப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்று இருக்கிறது. இந்த நிலையில், இந்தத்திரைப்படம், தற்போது புதிய அங்கீகாரம் ஒன்றை பெற்று இருக்கிறது. அது என்னவென்றால், ராயன் திரைப்படம் ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகி இருப்பதுதான். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
முன்னதாக, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம் பெற தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கதையின் கரு என்ன?
ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் நடத்தி, குடும்பத்திற்கு அண்ணனாக மட்டுமல்லாமல், ஒரு அப்பாவாகவும் இருந்து, தன் இரு தம்பிகளையும், தங்கையையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறான் காத்தவராயன். இதற்கிடையே, அவனின் இரண்டாவது தம்பியான முத்துவேல் ராயன் குடித்து விட்டு, அடுத்தடுத்து பிரச்சினைகளை இழுத்து வருகிறான்.
அப்படி வரும் ஒரு பிரச்சினையில், ஏரியாவில் முக்கிய புள்ளி ஒருவனின் மகன் கொல்லப்படுகிறான். அதற்கு பழி தீர்க்க, அந்த கும்பல் முத்துவை கொலை செய்வதற்கு திட்டமிட, முந்திக்கொள்ளும் காத்தவராயன், தன் தம்பிகளோடு சேர்ந்து, அந்த கும்பலை ஒட்டு மொத்தமாக கருவறுக்கிறான். அவன் கையில் எடுத்த கத்தி அவனை எங்கு கொண்டு நிறுத்தியது?.. இறுதியில் அவன் செய்தது என்ன? இதற்கிடையில், பெரும் திட்டத்துடன் களமிறங்கும் போலீஸ் அதிகாரியின் சூழ்ச்சி நிறைவேறியதா? இந்த களேபரத்திற்கு நடுவே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் ராயன் தங்கை கல்யாணம் என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பட த்தின் கதை!
நடை, உடை, பாவனை என அனைத்திலும் கறார் அண்ணனாகவும், உறவுக்கு ஒன்று என்றால் திமிறி எழும் அசுரனாகவும், நடிப்பில் மிரட்டி இருக்கிறார் தனுஷ். கதாபாத்திரத்திற்கு தேவையான இறுக்கத்தில், இம்மியும் மாறாமல் அவர் படம் முழுக்க வந்தது, அவரது அனுபவ முதிர்ச்சியை காண்பித்தது. தம்பிகளாக சந்தீப் மற்றும் காளிதாஸ், தங்கையாக துஷாரா, தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை துல்லியமாக கடத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக துஷாரா, ஆக்ஷனில் காட்டிய ஆக்ரோஷம் மிரட்டல். சூழ்ச்சி வலையை விரிக்கும் போலீஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ், அந்த கதாபாத்திரத்திற்கே உண்டான பாடிலாங்குவேஜில், அவர் வலம் வரும் போதெல்லாம் .. ஏனோ நெஞ்சம் படபடக்கிறது. வில்லனாக எஸ். ஜே. சூர்யா, வழக்கம் போல் வில்லத்தனத்திலும், அவருக்கே உண்டான லூட்டித்தனத்திலும் ஸ்கொர் ஸ்கோர் செய்திருக்கிறார். அபர்ணா - சந்தீப் காதல் அழகு!
இயக்குனராக ஜொலித்தாரா தனுஷ்?
தான் இயக்குநராக அறிமுகம் ஆன பவர் பாண்டி திரைப்படத்தில் மென்மையான கதை களத்தை தேர்வு செய்திருந்த தனுஷ், இந்தப்படத்தில் முழுக்க, முழுக்க ஆக்ஷன் கதை களத்தை கையில் எடுத்திருக்கிறார். கதாபாத்திர தேர்வு, அதற்கான டீடெய்லிங், அதன் வடிவமைப்பு, கதாபாத்திரங்களிடம் நடிப்பை வாங்கி இருக்கும் விதம், சுவாரசியம் குறையாத திரைக்கதை என அனைத்திலும், இயக்குநராக தனுஷ் ஸ்கோர் செய்திருக்கும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது.
இடைவேளைக்கு பிறகு நடக்கும் துரோகத்திலும், அது தொடர்பான காட்சிகள் கடத்தப்பட்ட விதத்திலும், இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்து இருக்கலாம். கலை இயக்குநர் ஜாக்கியின் வடசென்னை தொடர்பான செட்கள், கதைக்கு கூடுதல் நம்பகத்தன்மையைக் கொடுத்திருக்கிறது. தனுஷூடன் சேர்ந்து படத்தை தோளோடு, தோள் கொடுத்து தாங்கி பிடித்திருப்பதில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷூக்கும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. ஓம் பிரகாஷின் லைட்டிங்கும், காட்சிகளுக்கு காட்சி அவர் அமைத்திருக்கும் கலர்டோனும், படத்தின் இறுக்கத்தை நமக்கு செவ்வனே கடத்துகிறது. பாடல்களில் வழக்கம் போல ஸ்கோர் செய்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். ராயன் ஏமாற்றவில்லை.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்