T. S.Balaiah: பழம்பெரும நடிகர் டி.எஸ்.பாலையா நினைவு தினம்
Jul 22, 2023, 05:00 AM IST
பாடல் மட்டும் இன்றி கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.
நடிகர் திலகம் சிவாஜியே பார்த்து வியந்த திரை ஆளுமை டி.எஸ்.பாலையா. அவர் குறித்த சில தகவலை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
டி.எஸ்பாலையா இவர் 1914 ஆகஸ்ட் 23ந்தேதி பிறந்தார். இவர் தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டை என்ற சிற்றூரில் பிறந்தார். இவர் பிறந்த போது சுண்டங்கோட்டை திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தால் இவர் திருநெல்வேலி சுப்பிரமணியம் பிள்ளை பாலையா என அழைக்கப்பட்டார். அதுவே பின்னாளில் டி.எஸ்.பாலையா என்று மறுவியது.
இவர் 6 ம்வகுப்பு படித்தபோது தூத்துக்குடியில் சர்க்கஸ் பார்க்க சென்றார். அப்போது வித்தைக் காட்டியவர்களுக்கு கிடைத்த கை தட்டலை பார்த்து தானும் சர்க்கஸில் சேர விரும்பினார். ஆனால் அவரை சேர்த்துக்கொள்ள அந்த முதலாளி மறுப்பு தெரிவித்ததால் அயற்சியடைந்தார். இதையடுத்து தன் நண்பர் உதவியுடன் சர்கஸில் சேர எண்ணி சேர்த்து வைத்த பணத்துடன் மதுரை புறப்பட்டார். ஆனால் அந்த நண்பர் நான் சொன்னவர் மதுரையில் இல்லை மானாமதுரையில் இருக்கிறார் என்று ஏமாற்றினார். இதை நம்பி நண்பருடன் மானாமதுரைக்கு சென்றார். அப்போது இரவாகி விட்டதால் நடைமேடையில் படுத்து விட்டனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்தபோது பாலையாவின் பணத்துடன் அந்த நண்பவர் அங்கிருந்து சென்றிருந்தார். கையில் காசு இல்லாமல் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த பாலையா அங்கும் இங்குமாக வேலைக்கு தேடினார். பின்னர் உணவகம் ஒன்றில் பணியாற்றினார். இதையடுத்து கசாப்பு கடை ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். அந்த காலங்களில் மதுரை வீதிகளில் நிறைய நாடக கம்பெனிகள் செயல்பட்டதால் தினமும் நாடகம் பார்க்க சென்றார். அங்கு நாடக நடிகர்களுக்கு கைதட்டல் கிடைப்பதை பார்த்த பாலையா தானும் நாடகங்களில் நடிக்க விரும்பினார்.
இதையடுத்து மதுரையின் பிரபலமான ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்து விலகிய சிலர் பால மோகன சங்கீத சபா என்ற புதிய நாடக கம்பெனியை தொடங்கி இருந்தனர். பாலையா அந்த கம்பெனியில் இணைந்து கொண்டார். அங்கு கந்தசாமி முதலியார் என்பவர் பாலையாவுக்கு நடிப்பை கற்று தந்தார். பாலையா முதல் முறையாக 15 வயதில் நாடக மேடை ஏறினார்.
இதையடுத்து கந்தசாமி முதலியாரின் சிபாரிசால் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய படத்தில் முதல் முறையாக வில்லனாக அறிமுகமானார். அதே படத்தில் எம்.ஜி.ஆர் சிறு வேடத்தில் நடித்தார்.
எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, கே.ஏ. தங்கவேலு போன்ற பழம்பெரும் நடிகர் அறிமுகமானது சதி லீலாவதி என்ற அந்த படத்தில் தான் என்பது ஆச்சரியம் ஊட்டும் உண்மை. இந்த படத்தில் பாலையாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து பாலையா நடித்த ஆரியமாலா திரைப்படமும் வெற்றி பெற இயக்குநர்களின் ஆதர்ஷ நடிகரானார் பாலையா.
இதற்கிடையில் கோவையைச்சேர்ந்த பத்மாவதி என்பவரை திருமணம் செய்தார். பின்னர் லீலாவதி என்பவரை திருமணம் செய்தார். மேலும் நவநீதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மொத்தம் 7 குழந்தைகள் இருந்தனர். ஆனால் திருமண பந்தங்களில் சலிப்படைந்த பாலையா புதுச்சேரிக்கு சென்று சாமியாராக மரத்தடியில் உட்கார்ந்து விட்டார்.
இது திரைத்துறைக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம் தருவதாக அமைந்தது.
இதற்கிடையில் புதுச்சேரிக்கு வேலைக்காக சென்றிருந்த மார்டன் தியேட்டர்ஸ் உரிமையாளரான சுந்தரம் பாலையாவை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பாலையாவை வற்புறுத்தி காரில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு மீண்டும் அழைத்து வந்தார். இதையடுத்து பர்மா ராணி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். இதையடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்ததோடு சொந்த குரலில் பாடவும் செய்தார். மணமகள் என்ற படத்தில் நாட்டிய பேரொளி பத்மினிக்கு ஜோடியாக நடிப்பில் கலக்கி இருந்தார் பாலையா.
இவர் பாடிய சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல் இன்றளவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
பாடல் மட்டும் இன்றி கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்திலும் சிறந்து விளங்கினார்.
இதையடுத்து மதுரை வீரன், அம்பிகாவதி, வேலைக்காரி, ஓர் இரவு கலத்தூர் கண்ணம்மா, புதையல் போன்ற வெற்றிப்படங்களில் தன் நடிப்பில் முத்திரை பதித்திருந்தார். காதலிக்க நேரம் இல்லை, ஊட்டி வரை, உறவு போன்ற படங்களில் காமெடியில் கலக்கி இருந்தார் பாலையா. இப்படி தமிழ் திரை உலகில் 36 வருடங்களில் சுமார் 146க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பாலையாவை திரை உலகிற்கு அறிமுகம் செய்த எல்லீஸ்.ஆர்.டங்கன் என்ற ஆங்கிலேய இயக்குநர் 'No one can Replace Balaiah' என்றார். ஆம் காதலிக்க நேரம் இல்லை என்ற படத்தை ரீமேக் செய்ய முடியாமல் போனதற்கு பாலையா கேர்க்டருக்கும் மட்டும் சரியான ஆள் இல்லாததே காரணம் என்றார் இயக்குநர் ஸ்ரீதர். இப்படி 100 ஆண்டுகள் கடந்தும் எல்லீஸ் ஆர்.டங்கனின் அந்த சொல் மறுக்க முடியாதது என்பதே உண்மை
பாலையா குறித்த வாழ்க்கை குறிப்பை 'நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா' என்ற பெயரில் சந்தான கிருஷ்ணன் என்பவர் எழுதி உள்ளார். இப்படி முகம், உடல், அங்க அசைவுகள் ஒவ்வொன்றிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தும் பாலையா கடந்த 1972ம் ஆண்டு ஜூலை 22 ந்தேதி மறைந்தார். அவரது நினைவு நாளில் அவர் குறித்த தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்