BiggBoss7Tamil: ‘மாயா புனிதரானார்.. விஷ்ணு வில்லன் ஆனார்’ என்ன சொல்ல வருகிறது பிக்பாஸ்?
Jan 08, 2024, 10:31 AM IST
‘கடைசி வார ஓட்டெடுப்பில், யாருக்கு சாதகமாக வர வேண்டும் என்கிற முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டதோ என்கிற சந்தேகத்தை தான், சனி, ஞாயிறு எபிசோடுகள் காட்டுகிறது’
பிக்பாஸ் தமிழ் சீசன்களிலேயே, இந்த சீசன் மாதிரியான வினோதங்களை இதுவரை மக்கள் பாத்திருக்க மாட்டார்கள். இறுதிவாரத்தை எட்டி இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில், ஒட்டுமொத்தமாக வெறுப்பை சந்தித்தவர்கள் கூட, பைனலில் வர முடியும் என்றால், அதன் பின்னணியை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.
இதற்கு முந்தைய சீசன்களில் எல்லாம், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஸ்கிரப்டட் என்று பலரும் குற்றம்சாட்டியது உண்டு. ஆனால், இந்த சீசனில் அது தெள்ளத் தெளிவாக உண்மையாக இருக்குமோ என்கிற சந்தேகத்தை இயற்கையாகவே வரவைக்கிறது.
அதற்கு சரியான உதாரணம், பைனல் வரை தொடரும் மாயாவின் இருப்பு தான். ‘ஏன்.. மாயா பைனலுக்கு வரக்கூடாதா?’ என்று நீங்கள் கேட்கலாம். தவறில்லை, ஓட்டு ஒருவரை தேர்வு செய்கிறது என்றால், கண்டிப்பாக வரலாம். அதே நேரத்தில் முரண்பாடுகளை தான், இங்கே குறிப்பிட விம்புகிறோம்.
90 நாட்கள் வரை, கடுமையாக விமர்சிக்கப்பட்ட மாயா, கடைசி இரு வாரங்களாக, ‘மக்களால் விரும்பப்படும் போட்டியாளர்’ என்று கொண்டாடப்படுவது எப்படி? ‘பைனலுக்கு முழுத் தகுதியான போட்டியாளர்’ என்று சொல்லப்படுவது எப்படி? இந்த வார்த்தைகளை, கடந்த காலங்களில் அவர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்த போட்டியாளர்களே.. முன்னெடுப்பது எப்படி?
எந்த வெறுப்பை மறைக்க, இந்த முயற்சி நடக்கிறது? என்கிற கேள்வி, நிகழ்ச்சியை பார்க்கும் ஒவ்வொரு சமானியனுக்கும் எழுவது இயற்கை தான். இதுஒருபுறம் என்றால், பைனல் டிக்கெட் வாங்கிய விஷ்ணுவை கடந்த இரு வாரங்களாக, ‘கொலை குற்றவாளி’ போல சித்தரிப்பது ஏன்?
‘நம்பியவர்களை ஏமாற்றிவிட்டார், நன்றி மறந்துவிட்டடார், பிறரை பயன்படுத்திவிட்டார்’ என்றெல்லாம் விஷ்ணு மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதில் முதல் விசயத்திற்கு வருவோம், நம்பியவர்களை ஏமாற்றியவர்கள் இந்த சீசனில் யார் என்பது உலகத்திற்கே தெரியும். அதில் விஷ்ணு மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்? இரண்டாவது, நன்றி மறந்துவிட்டார் என்கிறார்கள், அதாவது அவர் ஜெயிக்க பாடுபட்டவர்கள் செய்த உதவியை, அவர் மறந்துவிட்டார் என்கிறார்கள். தான் எப்படி ஜெயிக்க வேண்டும் என்றே தெரியாதவர்கள், பிறரை எப்படி ஜெயிக்க உதவுவார்கள்? அவ்வளவு பெரிய வெற்றி சூத்திரம் தெரிந்தவர்களா அவர்கள்?
மூன்றாவது, பிறரை பயன்படுத்திவிட்டார் என்கிறார்கள். இதை யார் சொல்கிறார்கள் என்றால், முதல் நாளிலிருந்து வெளியேறும் நாள் வரை, பிறரை பயன்படுத்தி குளிர் காய்ந்தவர்கள் தான், அந்த வார்த்தையை கூறுகிறார்கள். மனதளவில், உடலளவில் பிறரை பயன்படுத்தியவர்களை அவர்கள் கொண்டாடித் தீர்த்தது வேறு கதை. அப்படி பார்க்கும் போது, விஷ்ணுவை டார்க்கெட் செய்து, அவர் மீது இந்த பழி சுமத்தப்படுகிறது.
இவர்களின் நோக்கம், ‘நாம் நினைத்தவர்கள் போய்விட்டார்கள், இவன் இருக்கிறானே’ என்பது தான். ஒருவேளை விஷ்ணு பைனல் டிக்கெட் பெறவில்லை என்றால், அவர் மீது இந்த விமர்சனமே வந்திருக்காது. அதற்காக விஷ்ணு மிகச்சரியானவர் என்று அர்த்தமில்லை. இவ்வளவு குற்றம்சாட்டும் அளவிற்கு அவர் குற்றவாளி இல்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், மாயா, பூர்ணிமா, விசித்ராவால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சாடப்பட்ட அர்ச்சனா கூட, விஷ்ணுவை குறை கூறுவது தான், உச்சம். எப்படி ஒரே வாரத்தில் மாயா புனிதரானார்? அது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த இரு நாள் எபிசோட் பார்த்தால், மாயாவை வெற்றியாளர் என்று அறிவிக்காதது தான் பாக்கி. அதற்கு தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் சால்ரா அடித்ததும், அதற்கு மேல் சகிக்க முடியாதவை.
கடைசி வார ஓட்டெடுப்பில், யாருக்கு சாதகமாக வர வேண்டும் என்கிற முடிவு முன்கூட்டியே எடுக்கப்பட்டதோ என்கிற சந்தேகத்தை தான், சனி, ஞாயிறு எபிசோடுகள் காட்டுகிறது. இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்கள் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த முறை தான் முதன் முதலாக, பிக்பாஸ் நிகழ்ச்சியே விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. பைனலில் தெரிந்து விடும், உண்மையில் இது மக்கள் வாக்கெடுப்பில் தான் இந்த நிகழ்ச்சி நடக்கிறதா என்று! அதுவரை ஒரு சிறிய இடைவேளைக்கு காத்திருப்போம்!