ஜாமீன் வழங்கப்பட்ட போதும் அல்லுக்கு இரவு சிறை.. காரணம் என்ன? - போலீஸ் அதிகாரி விளக்கம்
Dec 14, 2024, 08:34 AM IST
ஜாமீன் வழங்கப்பட்ட போதும், அல்லு சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதை இங்கே பார்க்கலாம்.
கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியும், அவர் நேற்று இரவு சிறை வைக்கப்பட்டார். இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் வழங்கப்பட்ட போதும்,.அவர் சிறையில் அடைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதை இங்கே பார்க்கலாம்.
இரவு நேர சிறை விதிகள்
இது குறித்து அவர் கூறும் போது, " நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் ஆவணம் மிகவும் தாமதமாக பெறப்பட்டது. இரவு நேர சிறை விதிகளின் படி, அல்லு அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார். " என்று கூறினார்.
Allu Arjun Arrested: புஷ்பா 2 தி ரூல் முதல் காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸார் அதிரடியாக கைதுசெய்தனர் அதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜூன் சிக்கடபள்ளி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அல்லு அர்ஜுன். தரப்பில் இருந்து தெலுங்கானா உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார்.
ஆனாலும், அரசு விதிமுறைகளை காட்டி, அவர் நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
நடந்தது என்ன?:
உலகெங்கும் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸானது. அதில் குறிப்பாக தெலங்கானாவில் ரசிகர்களுக்காக டிசம்பர் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படத்துக்கான பிரிமீயர் ஷோக்கள் போடப்பட்டன. அதனால், அந்த காட்சியைப் பார்க்க அல்லு அர்ஜுன் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 4ஆம் தேதி இரவு 10 மணிக்கு படம் பார்க்க ஹைதராபாத்தில் ஆர்.டி.சி. கிராஸ் ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டருக்கு வந்தார். இதனை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அங்கு அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்து நெரிசல் ஏற்பட்டது.
அதில் ஹைதராபாத்தின் எல்.பி.நகரில் வசிக்கும் ரேவதி என்கிற இளம்பெண், டிசம்பர் 4 ஆம் தேதி, படம்பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேலும், அவரது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். போலீசார் சிபிஆர் சிகிச்சை செய்து சிறுவனை மீட்டனர்.
அல்லு அர்ஜுன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள்:
அல்லு அர்ஜுன் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் இல்லாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அல்லு அர்ஜுனை டிசம்பர் 13ஆம் தேதி காலையில் அவரது இல்லத்தில் போலீசார் கைது செய்தனர்.
டாபிக்ஸ்