Agilan Review : அகிலனை போற்றுமா அகிலம்? அமர்ந்து பார்க்க ஏற்ற படமா? விமர்சனம்!
Mar 10, 2023, 12:07 PM IST
Agilan Movie Review:படத்தில் பலவீனம் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. டூயட், ரொமான்ஸ் என்று எதிர்பார்த்து வந்தால், அதற்கு வாய்ப்பில்லை.
பொன்னியின் செல்வன் ஹிட் அடித்த கையோடு, ஜெயம் ரவி நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் அகிலன். ப்ரியா பவானி சங்கர், தன்யா ராஜேந்திரன், ஜிராக் ஜானி, தருண் அரோரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தை முன்னதாக பூலோகம் படத்தில் ஜெயம்ரவியுடன் இணைந்த கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.
காலை முதல் காட்சியை பார்த்த கையோடு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வழங்கும் விமர்சனம் இதோ, சரி வாங்க, படம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்!
ஹார்பரில் முறைகேடாக நடக்கும் அனைத்து கடத்தல்களுக்கும் நங்கூரமாய் இருக்கிறான் அகிலன். அவன் உட்பட அனைத்து கடத்தல் காரர்களுக்குமான தலைவனாக கபூர் வலம் வருகிறான்.
கபூரை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் அகிலன் ஒரு கட்டத்தில் அவனை சந்திக்க, பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் ஒருவனை நாடு கடத்தும் அசைமெண்ட் அவனிடம் கொடுக்கப்படுகிறது.
இதற்கிடையே அகிலனின் ஆட்டத்தை அடக்க நினைக்கும் டெல்லி இன்டலிஜன்ஸ் அதிகாரி பல்வேறு முயற்சிகளை செய்து அவனை கைது செய்ய துடிக்கிறான். இறுதியில் அகிலன் அந்த அசைமெண்டை முடித்தானா? அதற்கு பின்னால் அவன் வைத்திருந்த மாஸ்டர் பிளான் என்ன? அகிலனை அடக்க நினைத்த அதிகாரிக்கும், அவனுக்கும் இடையேயான முட்டல் மோதல் எங்கு போய் முடிந்தது? என்பதே அகிலன் படத்தின் கதை.
முதல் பலம் படத்தின் லொக்கேஷன். நீண்ட நாட்களுக்கு பிறகு ஹார்பர், கடல், கப்பல் என முழுக்க முழுக்க கடலும், அதனை சார்ந்த இடங்களும் நமக்கு நிச்சயம் புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். அகிலனாக ஜெயரவி; அவரின் அலட்டிக்கொள்ளாத நடிப்பு அகிலனுக்கு அப்படி பொருந்தி இருந்தது.
கதாநாயகி பிரியா பவானி ஷங்கருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. அந்த வேலை கூட தான்யா ரவிச்சந்திரனுக்கு இல்லை. இன்டலிஜன்ஸ் அதிகாரியாக வரும் ஜிராக் ஜானியின் ஸ்கீரின் பிரசன்ஸ் மிரட்டுகிறது. நடிப்பிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். மெயின் வில்லனாக வரும் தருண் அரோரா, அவருக்கு கீழ் இயங்கும் ஹரீஷ் பேரடி, யூனியன் தலைவராக வரும் மதுசுதன், ஒரு காட்சியில் வந்தாலும் மிரட்டி விட்டு சென்ற பாக்ஸர் தீனா உள்ளிட்டோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
பூலோகம் படத்தில் பாக்ஸின் அரசியலை அக்குஅக்காக பிரித்தவர் அகிலன் படத்தில் சரக்கு கப்பல்கள் எப்படி பங்கு சந்தை வரை வேலை செய்கிறது என்பதை அழகாக சொல்லி இருக்கிறார். படத்தில் அகிலன் எப்படியானவன் என்பதை ஆடியன்ஸிடம் கொண்டு சேர்க்க, ஆரம்பத்தில் அவர் எழுதிய சில காட்சிகளை தவிர, பிற அனைத்து காட்சிகளும் நம்மை சீட்டின் நுனியில் அமரவைத்திருக்கிறது
படத்தில் அவ்வளவு டீடெய்லிங்; அதனால் ஆரம்பத்தில் படத்தின் கதைதான் என்ன? என்று நமக்கு தோன்றினாலும், அதனை படத்தில் பரபரவென இருக்கும் திரைக்கதை மறக்க செய்து விடுகிறது. கடல்சார்ந்த இடங்களுக்கு தகுந்தவாறு அவர் கதாபாத்திரங்களின் பின்னணியை அமைத்து இருந்ததும் அதற்காக அவர் தேர்வு செய்த நடிகர்களும் படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்து இருக்கிறது.
படத்தின் சில காட்சிகளில் ஹார்பரில் கண்டெய்னர்களை ஏற்றுவதும் இறக்குவதுமான காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தது.அதனை எடிட்டிங்கில் ட்ரிம் செய்திருந்தால் அவ்வப்போது எழுந்த சலிப்பும் காணாமல் போயிருக்கும்.
படத்தில் ஒரு பாடல்தான். அதில் கூட சாம் சி.எஸ்ஸின் முத்திரை இல்லை. பின்னணி இசை திரைக்கதைக்கு ஒன்றி போய் இருந்தாலும், வழக்கமாக சாமின் பின்னணியில் வரும் இரைச்சல் இதிலும் தொடருகிறது. விவேக் ஆனந்த் கேமராவின் வைடு ஷாட்கள், டாப் ஆங்கிள் ஷாட்கள், கடல் மற்றும் அதனை சார்ந்த இடங்களை காண்பிக்க அவர் செய்த கலர் கிரேடிங் ஒர்க் அனைத்தும் சிறப்பு.
படத்தில் பலவீனம் என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. டூயட், ரொமான்ஸ் என்று எதிர்பார்த்து வந்தால், அதற்கு வாய்ப்பில்லை. அருள்மொழி வர்மனுக்கு அடுத்த ஹிட் பார்சல்!
டாபிக்ஸ்