Actress Samyuktha: சாதி பெயரைத் தூக்கி எறிந்த நடிகை - எனக்கு இதுவே போதும்!
Feb 06, 2023, 01:14 PM IST
எனக்குச் சாதியே பிடிக்காது என வாத்தி திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
நடிகை சம்யுக்தா மேனன் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் தற்போது தனுஷ் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைக்கிறார்.
சமீபத்தில் வாத்தி திரைப்படத்தின் பிரமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை சம்யுக்தா மேனன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்," நான் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண். எனக்குத் தமிழ் தெளிவாகப் பேச வரும். தமிழ்ப் படங்களில் எனக்கு நடிக்க ஆசை இருந்தாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதேசமயம் வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை, சில வாய்ப்புகளை நானே நிராகரித்துள்ளேன். நடிகர் தனுஷ் அவர்களுடன் வர வேண்டும் என்பதற்காக இதெல்லாம் நடந்தது போல் எனக்குத் தோன்றுகிறது.
இந்த படத்தில் அரசுப் பள்ளியில் பயாலஜி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் திரைப்படமாக இந்த படம் அமைந்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பு வரை தான் நான் படித்துள்ளேன் அதற்குப் பிறகு சினிமாவிற்கு வந்து விட்டேன்.
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் ஆனால் இதைத்தான் படிக்க வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. எனது பெயர் சம்யுக்தா மட்டும்தான். மேனன் என்ற சாதி அடைமொழியை நான் போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.
மலையாள சினிமாவில் அதிக சம்யுக்தாக்கள் இருப்பதால் ஊடகத்துறையினர் என்னைத் தனியாகச் சுட்டிக்காட்ட இந்த மேனனை இணைத்து விட்டனர். தயவு செய்து என்னை மேனன் என்று யாரும் சாதியை வைத்து அடையாளப்படுத்தாதீர்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குச் சாதியே பிடிக்காது. என்னை சம்யுக்தா என்று அழைத்தால் போதும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பூ, மரியான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த பார்வதி மேனனும், என்னைப் பார்வதி என்று அழைத்தால் போதும் இதுதான் என் பெயரும் கூட மேனன் என்ற சாதி அடையாளத்தை என் பெயருடன் சேர்க்காதீர்கள். என்னைப் பார்வதி என்றால் அழைத்தால் மகிழ்ச்சி எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல் அவன் இவன் படத்தில் நாயகியாக நடத்திருந்த ஜனனி ஐயர், என்னை ஜனனி என்று அழைத்தால் போதும் ஐயர் என்ற சாதி அடையாளத்தோடு என்னை அழைக்க வேண்டாம் எனக் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குச் சாதியேப் பிடிக்காது என நடிகை சம்யுக்தா கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
டாபிக்ஸ்