HBD Rajyalakshmi: 1980களில் 4 மொழிகளில் டாப் நடிகை.. தற்போது சீரியல்களில் அம்மா ரோல்.. நடிகை ராஜ்யலட்சுமிக்கு பர்த் டே!
Dec 18, 2023, 05:04 AM IST
நடிகை ராஜ்யலட்சுமியின் பிறந்த தின சிறப்புப் பகிர்வு கட்டுரை தான் இது!
1980களில் தெலுங்கு, தமிழ், கன்னடா, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை ராஜ்யலட்சுமி சந்து, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் அம்மா கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார். டிசம்பர் 18ஆம் தேதியான இன்று தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ராஜ்யலட்சுமி குறித்து நாம் அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அவை குறித்துக் காண்போம்.
யார் இந்த நடிகை ராஜ்யலட்சுமி? நடிகை ராஜ்யலட்சுமி ஆந்திர மாநிலத்தின் தெனாலியில் 1964ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தார். சிறுவயதில் நாடகங்கள் பலவற்றில் நடித்தார். தனது 15 வயதில் சங்கராபரணம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகையாக மாறினார். பின் என். டி.ராமாராவ், நாகேஸ்வ ராவ், பாலகிருஷ்ணா ஆகிய தெலுங்கு நடிகர்களுடனும், ரஜினிகாந்துடன் தமிழிலும், மோகன்லால், மம்மூட்டி ஆகியோருடன் மலையாளத்திலும் ஜோடியாக நடித்தார். தவிர, கன்னடத்திலும் ஜிதேந்திரா மற்றும் விஷ்ணு வர்தனுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு கே.ஆர்.கிருஷ்ணன் என்பவரை மணம்புரிந்த ராஜ்யலட்சுமி, ரோஹித் கிருஷ்ணன் மற்றும் ராகுல் கிருஷ்ணன் ஆகிய இருகுழந்தைகளுக்குத் தாய் ஆனார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் ராஜ்யலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சினிமா பிரவேசம்: தெலுங்கில் சங்கராபரணம் திரைப்படம் மூலம் திரையுலகில் பிரவேசித்த நடிகை ராஜ்யலட்சுமி தமிழில், சுஜாதா, மூன்று முகம், அர்ச்சனை பூக்கள், சங்க நாதம், புதிய தீர்ப்பு, சூர சம்ஹாரம், சங்கர் குரு, கை வீசம்மா கை வீசு, திராவிடன், புது பாடகன், திருப்பாச்சி, வரலாறு, எம் மகன், திருப்பதி, யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், சைவம் ஆகிய குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து பிரபலமானவர்.
சீரியல் என்ட்ரி: தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை ராஜ்யலட்சுமி, தமிழில் மேகலா, கண்மணியே, கஸ்தூரி, பிள்ளை நிலா, பிரிவோம் சந்திப்போம், செல்லமே, ராஜா ராணி, அழகு, பாக்யலட்சுமி, அன்பே வா ஆகிய சீரியல்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் தனது 59ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9