Mucherla Aruna: ‘நிறத்தை வைத்து ரிஜக்ட் செய்வார்கள்’ நடிகை அருணா வேதனை!
Jan 05, 2023, 06:15 AM IST
Mucherla Aruna Interview: ‘இங்கு என்ன மாறியிருக்கிறது? இன்றும் எதுவும் மாறவில்லை’ -முச்சேர்லா அருணா!
பாரதி ராஜாவின் அறிமுகங்களில் முக்கியமானவர் அருணா என்கிற முச்சேர்லா அருணா. அறிமுகமாக்கிய இயக்குனருடன் முதல் படத்திலேயே நடித்தவர். 80களில் 90களில் வந்த பல படங்களில் அருணா இல்லாத கதாபாத்திரங்கள் மிகமிக குறைவு . கதாநாயகியாக, தங்கையாக பல படங்களில் நடித்த அவர், சமீபத்தில் இணையதள பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ அந்தபேட்டி:
‘‘கல்லுக்குள் ஈரம் எனது முதல் படம். எனக்கும் இந்த துறைக்கும் சம்மந்தமே இல்லை. நான் படிக்கும் போதே என்னை பாரதிராஜா பார்த்திருக்கிறார். அந்த படத்திற்கு நான் சரியாக இருப்பேன் என என்னை அவர் தான் தேர்வு செய்தார். என்னை சந்திக்கும் போது, எனக்கு பாரதிராஜா யார் என்றே தெரியாது. அப்போது அந்த அளவிற்கு பொழுதுபோக்கு சாதனங்கள் என்னிடம் இல்லை.
அலைகள் ஓய்வதில்லை படம் தெலுங்கில் நான் தான் ராதா கதாபாத்திரம் பண்ணேன். தமிழ் படத்தை நான் பார்க்கவே இல்லை. மணிவண்ணன், மனோபாலா அண்ணன்கள் தான் சுத்தி சுத்தி எடுப்பாங்க.
கல்லுக்குள் ஈரம் படம் வரும் போது, எனக்கு 15 வயது. பாரதிராஜா சாரை டெடர் போல நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அவர் சீன் சொல்லும் போது நாம் கவனமாக கேட்க வேண்டும். அவ்வளவு தான், மற்றபடி அவர் ரொம்ப கறார் எல்லாம் இல்லை. பாராட்டும் நேரத்தில் பாராட்டுவார்.
நிறைய படங்கள் நான் நடிக்க முடியாமல் தவறவிட்டிருக்கிறேன். விசு சாரோட பெண்மணி அவள் கண்மணி படம் பண்ணும் போது,என்னுடைய கதாபாத்திரம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. யாரையும் மதிக்காத மரியாதை இல்லாத கதாபாத்திரம் அது. ஆனால், எல்லாரும் அந்த படத்தில் என் கதாபாத்திரத்தை பாராட்டினார்கள். ஆனால், நான் அந்த மாதிரி கதாபாத்திரம் நடிக்க விரும்பமாட்டேன். நடித்துவிட்டும் வருத்தப்பட்டேன். நான் உண்மையில் அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறுபட்டவள்.
நிறத்தை வைத்து விமர்சிப்பது எங்கள் காலத்தில் இருந்து இருக்கிறது. இது சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் உண்டு. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது கூட நிறமான பெண்களுக்கு பிரச்னை இருக்காது. அதுவே கருப்பான பெண்ணாக இருந்தால் ரிஜக்ட் செய்துவிடுவார்கள்.
இங்கு என்ன மாறியிருக்கிறது? இன்றும் எதுவும் மாறவில்லை. பெண்கள் வேலை செய்வது, அவர்களின் சுதந்திரம் மட்டும் தான் மாறியிருக்கிறது. எல்லா இடத்திலும் நிற வேற்றுமை இருக்கு. நீங்கள் அமெரிக்கா போனால் கூட, இந்தியர்களே நம்மை நிறத்தால் ஒதுக்குவார்கள்.
எனக்கு நான்கு மகள்கள். நான் ஒரு வடஇந்தியரை காதல் கல்யாணம் பண்ணேன். அவர்களுக்கு முதல் குழந்தை பையன் வேண்டும் என்பது. ஆனால், எனக்கு 4 பெண் குழந்தைகள். என் கணவருக்காக 4 முறை முயற்சித்தேன். நான்கு முறையும் அறுவை சிகிச்சை தான். ஆனால் எங்களுக்கு பெண் குழந்தைகள் தான் கிடைத்தார்கள்,’’
என்று அருணா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.