Arnav Divya: ‘பவுன்சர்களோடு வந்தாரு..என் குழந்தையை கொல்ல பார்த்தாரு' -அர்ணவ் மனைவி கதறல்!
Jun 14, 2023, 07:09 AM IST
சீரியல் நடிகையான திவ்யா தன் கணவரான அர்ணவ் தன் அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக குற்றம் சாட்டி இருக்கிறார்
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அர்ணவ். இவர் தன்னுடன் நடித்த நடிகை திவ்யாவை காதலித்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அர்ணவ் தன்னை அடித்ததாகக் கூறி திவ்யா காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, அர்ணவ் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே அர்ணவிற்கு குழந்தை பிறந்தது. அதனைத்தொடர்ந்து திவ்யா ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் அர்ணவ் பத்து பதினைந்து பேருடன் திவ்யா வீட்டிற்குச் சென்று அங்கு நுழைய முயற்சித்து இருக்கிறார். இது குறித்து நடிகை திவ்யா அளித்த பேட்டியை படிக்கலாம்.
“இவ்வளவு நாள் வீட்டுக்கு வராத அர்ணவ் இன்று திடீரென்று 13 பேருடன் வீட்டிற்கு வந்தார். கதவைத் தட்டினார். நான் அவரிடம் நீங்கள் இப்போது இங்கு வரக்கூடாது; நீதிமன்றத்தில் அப்படியான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; ஆகையால் இங்கிருந்து சென்று விடுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் உடன் வந்தவர்கள் இது அர்ணவ் வீடு என்று சொல்லி கதவை தள்ளினார்கள். நான் உடனே கதவை மூடிவிட்டு என்னுடைய வழக்கறிஞரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொன்னேன். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன்.
அர்ணவ் இங்கு ஒரு உளவாளி ஒருவரை வைத்திருக்கிறார். நான் எங்கு செல்கிறேன்.. வருகிறேன் உள்ளிட்ட எல்லா விவரங்களும் அவருக்கு தெரிந்திருக்கிறது. காலை ஷூட்டிங் சென்றுவிட்டு இரவு தான் வீட்டிற்கு வருகிறேன்; வீட்டில் இரண்டு வயதான பெரியவர்கள் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் எனக்கு என்ன பாதுகாப்பு. அர்ணவால் எந்த பெண்ணுக்கும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் ஆடியோவை ரிலீஸ் செய்தேன். அதை கேட்டுவிட்டு அவர் தற்போது இங்கு வந்திருக்கிறார். என்னவென்று கேட்டால் அவன் தற்போது இருக்கக்கூடிய வீட்டை காலி செய்து விட வேண்டுமாம். இது அவருடைய வீடாம். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் அவர் இங்கு வரவே கூடாது.
அவர் என்னை கொடுமைப்படுத்தி இருக்கிறார்; எனது குழந்தையை கொல்ல முயற்சித்து இருக்கிறார். இதை முதல்வர் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் நிச்சயம் என்னை காப்பாற்றுவார். எனது குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது; குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் நான் வேலைக்கு கிளம்பி இருக்கிறேன். இப்போது அவருக்கு இந்த வீடு வேண்டுமாம். நான் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்.”
டாபிக்ஸ்