சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்கள்
Feb 17, 2022, 05:48 PM IST
பின்னணி பலம் எதுவுமின்றி தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் நடிகர்களின் பட்டியலை காண்போம்.
தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் பின்னணி பலம் எதுவுமின்றி நடித்து முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். யார், யார் இந்த பட்டியலில் இருக்கின்றனர் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்…
சிவகார்த்திகேயன்
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் மிமிக்ரி செய்ததில் தொடங்கியது சிவகார்த்திகேயனின் பயணம். இதனையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். நகைச்சுவை கலந்த பேச்சு, எப்படியாவது சினிமாவில் சாதித்து காட்டவேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடிய அவருக்கு இயக்குநர்
பாண்டிராஜ் ‘மெரினா’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதனையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமா ராஜா , ரஜினி முருகன் என வரிசையாக நகைச்சுவையாக படங்களில் நடித்து தனக்கு என ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் குறித்து நடிகர் விஜய் ஒரு விழாவில், "சிவகார்த்திகேயன் குழந்தைகளை பிடித்துவிட்டார்" என்றார். அதுமட்டுமின்றி இவர் தற்போது நடிகராக மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பது, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பன்முகத் திறமைக் கொண்டவராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ பட்டியலில் இருக்கும் இவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரனமாக இருக்கிறார்.
சந்தானம்
‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமடைந்த சந்தானம், ‘மன்மதன்’ படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். பின்னர் ‘சிவா மனசுல சக்தி’, ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, வல்லவன் , ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ என பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்தார் சந்தானம்.
இவரை போல் யாருமே நகைச்சுவை செய்ய முடியாது என்ற அளவில் ரசிகர்கள் கொண்டாடினர். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமே தனது பயணம் சென்றுவிட கூடாது என்பதால் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ மூலம் கதாநாயகனாக கால்பதித்தார். பின்னர் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஏ1’ மற்றும் டகால்டி என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ரோபோ சங்கர்
மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடம் அணிந்து மிமிக்ரி செய்த சங்கர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போதிலிருந்து இவர் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டர். ‘ரௌத்திரம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
ஆனால் அவர் நடித்த சீன் எடிட்டிங்கில் வெட்டப்பட்டது. பின்னர் மீண்டும் இயக்குநர் கோகுல் அவருக்கு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தொடர்ந்து ‘மாரி’, ‘கலகலப்பு 2’, ’மாரி 2’, ’புலி’, ’விஸ்வாசம்’ என வரிசையாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சமுத்திரக்கனி
கே.பாலசந்தர் இயக்கிய 'ரமணி Vs ரமணி' என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் சமுத்திரக்கனி. பின்னர் 'அரசி', 'அண்ணி' தொடரிலும் நடித்தார். பார்த்தாலே பரவசம் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்டிரி கொடுத்தார்.
வந்த இரண்டே ஆண்டுகளில் 'உன்னை சரணடைந்தேன்' , நாடோடிகள் படத்தை இயக்கினார். தற்போது பாசிட்டிவ், நெகடிவ் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.
சூரி
நடிகராகும் கனவோடு தனது கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த சூரிக்கு 'திருமதி செல்வம்' தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர் 'மறுமலர்ச்சி' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அவருக்கு 'வெண்ணிலா கபடிக் குழு' படம் கைக் கொடுத்தது.
இதனையடுத்து சூரி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி. ஜெயம் ரவி என கதாநாயகர்களுடன் பிஸியாக நடித்துவருகிறார். சூரியை முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர்கள் போட்டிப் போட்டு வருகின்றனர்.
ரியோ
தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றிய ரியோ நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படம் மூலம் நடிகராக அறிமுகமாகினார். பின்னர் ஒன்று, இரண்டு படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2006 ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'பெண்' என்ற நாடகம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
இன்றைய அவரது வெள்ளித்திரை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது 'பெண்' டிவி சீரியல்தான். அதுமட்டுமல்லாமல் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியிலும் அவர் பங்காற்றியிருக்கிறார். இன்று ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களுக்கு மேல் நடிக்கிறார்.
மாதவன்
இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த மாதவனை, மணிரத்னம் 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார். 'கார்த்தி' கதாபாத்திரத்தின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார் மாதவன். 'மின்னலே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'டும் டும் டும்' என வரிசையாக இவர் படங்கள் வெற்றியடைந்தது. இவர் தற்போது நடிப்பது மட்டுமில்லாமல் படத்தை இயக்கியும் வருகிறார்.