Vishnu Vishal: லால் சலாம்.. முக்கிய அப்டேட் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால்!
Jan 18, 2024, 03:13 PM IST
Lal Salaam Update: நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'லால் சலாம்'. இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ரஜினிகாந்த் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள 'லால் சலாம்' வரும் பிப்.9 ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏ..புள்ள பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. ரஹ்மான் இசையில் கபிலன் எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடி இருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டதாகவும் இக்காட்சி சிறப்பாக வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வெளியான டீஸரில், விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் தலைமையிலான இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக மாறுகிறது. இதனால் பெரும் கலவரம் வெடிக்கிறது. இதனால் சில மரணச் சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனையடுத்து ரஜினியின் மாஸான என்ட்ரி. 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க', 'குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க' என்று ரஜினி பேசும் அனல் பறக்கும் வசனங்கள் சரவெடியாக வெடிக்கிறது. டீஸரில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.
'லால் சலாம்' படப்பிடிப்பு சென்னை, மும்பை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. அதனைத் தொடர்ந்து ரஜினி தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தாா்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்