தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Vijayan: ‘லோ பட்ஜெட் கமல்’ யார் இந்த விஜயன்? தெரிய வேண்டிய நடிகர்!

Actor Vijayan: ‘லோ பட்ஜெட் கமல்’ யார் இந்த விஜயன்? தெரிய வேண்டிய நடிகர்!

HT Tamil Desk HT Tamil

Feb 18, 2023, 05:50 AM IST

google News
1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ்.
1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ்.

1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ்.

தமிழ் சினிமா உலகில் திடீரென உச்சம் சென்று ரசிகர்களை கவர்ந்த வெகு சிலரில் ஒருவர் இவர். தான் நடித்த படத்தின் பெயரையே அடையாளமாக சொல்லும் நடிகர்களில் ஒருவர். 'ரமணா' வில்லன் என்றால் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும். அவர்தான் 'உதிரிப் பூக்கள்' விஜயன். ஹீரோ, வில்லன், குணச்சித்திரம்... எப்படி பார்த்தாலும் அவர் ஒரு லெஜண்ட்.

கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.

1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது ஆன்ட்டி ஹீரோ. 

2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் மனைவியை கொன்று விட்டு கொழுந்தியாளை அடைய துடிக்கும் வேடம், விஜயனுக்கு... (அஜித்தின் 'ஆசை' படத்தோட raw versionன்னு சொல்லலாம்) அந்த படத்தில் பின்னி எடுத்திருப்பார், விஜயன். அவரது உடல்வாகு, வில்லத் தனமான பார்வை அமைதியான தோற்றம் எல்லாம் அவரது கேரக்டரை ஹிட்டாக்கின. அதன் பிறகு, மலையாளம் கூடவே தமிழிலும் ஏராளமான படங்களில் விஜயன் நடித்தார்.

பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன் என முன்னணி இயக்குர்களிடம் நடித்த இவர், 1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ். 1980களுக்கு பிறகுதான் தமிழில் ரஜினி, கமல் ஆதிக்கம் துவங்கியது. அதற்கு முந்தைய கால கட்டத்தில் இவருக்கும் அன்றைய நாளின் மற்றொரு ஹீரோவான சுதாகருக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஆரம்ப கால விஜயனிடம் கொஞ்சம் மம்முட்டி சாயலை பார்க்க முடியும்.

கதாநாயகன் வேடத்துக்கு பிறகு, 1992 வரை நிறைய கேரக்டர் ரோல்களிலும் விஜயன் நடித்தார். 'மண் வாசனை', 'நிறம் மாறாத பூக்கள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'பசி', 'ஒரு கைதியின் டைரி', 'கொடி பறக்குது', 'அன்புக்கு நான் அடிமை' (ரஜினியின் அண்ணன்), 'நாயகன்' (மும்பை குடிசை வாழ் மக்கள் இடத்தை வாங்கி தரும் புரோக்கர் துரை)... இப்படி அவரது படங்களின் பட்டியல் மிக நீளம்.

இதற்கிடையே, 'புதிய ஸ்வரங்கள்' மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்போதெல்லாம் பிலிம் ரோல் காலம். அந்த படம் முடிந்து லேபில் இருந்த பிலிம் சுருள் தீ விபத்தில் கருகியதால் அவரது இயக்குநர் கனவும் கருகிப்போனது. இப்படி, விஜயனின் வாழ்வில் துன்பியல் அதிகம்.

1992க்கு பின் 2002 வரை பத்து ஆண்டுகள் விஜயனின் திரை பயணத்தில் பிரேக்... இந்த கால கட்டத்தில் மது, புகைப் பழக்கம் என சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களை சந்தித்தார், விஜயன். முன்னணி இயக்குநர்கள் படத்திலும் ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் நடத்தது மட்டுமல்ல... 1980களில் மிகப் பிரபலமாகவும் வலம் வந்த ஒரு நடிகர், யாருமே கண்டு கொள்ளாத நிலைமையில் இருந்தார்.

அவரை மறுபடியும் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த படம் 'ரமணா'. 2002ல் வெளியான அந்த படத்தில் விஜயகாந்துக்கு மெயின் வில்லனாக அதகளம் பண்ணியிருப்பார். அதே ஆண்டு மாதவன் நடித்த 'ரன்' படத்திலும் வில்லன் அதுல் குல்கர்னியின் வலதுகரமாக விஜயன் நடித்தார். இதுபோல, '7ஜி ரெயின்போ காலனி' படத்தில் நாயகனின் தந்தையாக, குண சித்திர நடிகராகவும் நிரூபித்திருப்பார்.

'உதிரிப்பூக்கள்' விஜயன், 'ரமணா' விஜயனாக இரண்டாவது சுற்று வலம் வர தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் அவரது வாழ்க்கையே முடிந்து போனது. 'ஆயுதம் செய்வோம்' படப்பிடிப்பில் மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்தாலும் தமிழ் திரையுலக வரலாற்றில் 'உதிரிப் பூக்கள்' விஜயனுக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-நெல்லை ரவீந்திரன் எழுத்து

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி