சொல்லக்கூடாது.. வாழ்ந்து காட்டணும்.. மிகப்பெரிய உதாரணம் நடிகர் சிவகுமார்
Oct 27, 2023, 11:19 AM IST
Actor Sivakumar Birthday: நடிகர் சிவகுமார் இன்று தனது 82 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமா எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி வளர்த்திருக்கிறது. ஆனால் சில கலைஞர்கள் தான் தங்களை நெறிப்படுத்தி சரியான முறையில் வளர்த்து எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயனாக வாழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி என்ற இரு பெரும் நாயகர்களை கொடுத்தவர் தான் இவர். பன்முக திறமை கொண்ட இவர் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என மிகப் பெரிய கலைஞர்கள் கொடி கட்டு பறந்த காலத்தில் அவர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளார். அதற்குப் பின்பு 1970களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்து பல்வேறு விதமான படங்களை இவர் மக்கள் மத்தியில் கொடுத்துள்ளார்.
இயக்குனர் தேவராஜ் மோகன் இவரும் இணைந்து பல்வேறு விதமான வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இவருடைய நூறாவது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படத்தை தேவராஜ் மோகன்தாஸ் இயக்கினார். பட்டி தொட்டி எங்கும் இதன் பாடல்கள் ஒலித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக இன்று வரை தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.
அன்றைய காலகட்டத்தில் இருந்த முன்னணி இயக்குனர்களோடு இவர் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு நல்ல நடிகனாக மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஓவியக் கலைஞராக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டவர் சிவகுமார்.
தொடர்ச்சியாக டைரி எழுதும் பழக்கம் கொண்டவர் இவர். எழுத்துப் பணியில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அது மட்டுமில்லாமல் இன்று வரை யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்.
இவர் பெயரில் டிரஸ்ட் ஆரம்பித்து பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். பல கலை நாயகன் என்று பலரும் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் அதற்கு செயல் வடிவம் கொடுத்து இன்று வரை அதன்படி வாழ்ந்து வருபவர் சிவகுமார்.
எத்தனையோ கிசுகிசுக்கள் நடிகர்கள் மீது வருவதை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நல்ல பிள்ளைகள் என்று சக கலைஞர்கள் கூறும் வகையில் இன்று வரை நடித்து வருகின்றனர். அந்த அளவிற்கு ஒரு நெறிமுறையோடு வாழக்கூடியவர் சிவகுமார்.
எத்தனை நீளமான வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசக்கூடியவர் இவர். பல கலை கலைஞனாக வாழ்ந்து வரும் சிவகுமார் இன்று தனது 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சொற்களுக்கு செயல் வடிவம் கொடுத்து ஒரு நெறிமுறையோடு வாழக்கூடியவர்கள் என்றுமே வாழ்த்துக்களுக்கு உரியவர்கள் தான். எனவே நமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்