Rajinikanth: ‘அந்த ‘முரட்டுக்காளை’ ட்ரெயின் சீன்’ -ஜூடோ ரத்தினம் பற்றி ரஜினி!
Jan 27, 2023, 01:30 PM IST
ஜூடோ ரத்தினத்துடன் முரட்டுக்காளை படத்தில் பணியாற்றியது மறக்கமுடியாது என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு சண்டை பயிற்சியாளராக விளங்கிய பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பால் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காலமானார். அவருக்கு வயது 93. இளம் வயதிலேயே மில் தொழிலாளியாக இருந்து பின்னர் திரைத்துறைக்கு வந்த ஜூடோ ரத்தினம், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். அவரது உடல் இன்றைய தினம் சென்னையில் உள்ள ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்க அலுவலகத்தில் திரை உலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “ 1976 லிருந்து எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கன்னட படம் மூலம் எங்கள் இருவருக்கும் இடையேயான பழக்கம் தொடங்கியது. அதன்பின்னர் எஸ்.பி முத்துராமன் நடித்த படங்களிலெல்லாம் அவர்தான் ஃபைட் மாஸ்டர். அவருக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கினார். அவருடைய எத்தனையோ உதவியாளர்கள் இன்று மாஸ்டர்களாக இருக்கிறார்கள். அவரிடம் உள்ள சிறப்பம்சம் பாதுகாப்புதான். படத்தில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கிறாரோ அதே போல ஸ்டண்ட் மேன்களுக்கும் அவர் பாதுகாப்பு கொடுப்பார். ரொம்ப மென்மையானவர். அந்த முரட்டுக்காளை ட்ரெயின் ஃபைட்டை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. ஒரு சரித்திரத்தை சாதித்து, பூரண வாழ்கை வாழ்ந்து அவர் தற்போது 93 வயதில் காலாமாகியிருக்கிறார். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். நன்றி” என்று பேசினார்.
1959ஆம் ஆண்டில் தாமரைக்குளம் படத்தில் நடிகராக அறிமுகமான ஜூடோ ரத்தினம் 1966ஆம் ஆண்டு வெளிவந்த வல்லவன் ஒருவன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஜூடோ ரத்தினம் சண்டை பயிற்சிகளை அளித்துள்ளார். கடைசியாக சுந்தர் சி நடிப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜூடோ ரத்தினத்தின் இறுதிச்சடங்கு நாளை சனிக்கிழமை அன்று சொந்த ஊரான குடியாத்தத்தில் இறுதி சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்