HBD Ponvannan : நடிகர் பொன்வண்ணன் குறித்து அறியாத சில பக்கங்கள்.. சரண்யாவிடம் எப்படி காதலை சொன்னார் தெரியுமா?
May 06, 2023, 06:10 AM IST
நடிகர் பொன்வண்ணன் பிறந்தநாளான இன்று அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் பொன்வண்ணன்1963ல் மே 06ஆம் தேதி பிறந்தார். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் சக நடிகையான சரண்யாவைத் திருமணம் செய்துக்கொண்டார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர் பொன்வண்ணன்.
இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் பொன்வண்ணன். அப்போதே தன்னுடைய படங்களில் பொன்வண்ணனை நடிக்கவும் வைத்தார் பாரதிராஜா. புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி, அதன் பின் கருத்தம்மா, பசும்பொன் உள்ளிட்ட படங்களில் பொன்வண்ணனை நடிக்க வைத்திருப்பார்.
அதன் பிறகு அன்னை வயல், ஜமீலா மற்றும் கோமதி நாயகம் ஆகிய மூன்று சிறிய திரைப்படங்களை இயக்கவும் செய்தார். இடையில் அண்ணாமலை என்கிற சீரியலில் கோமதி நாயகம் என்ற நகைச்சுவை வில்லனாகவும் நடித்திருந்தார். பின்னர் பொன்வண்ணன் பருத்திவீரன் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.
நடிகை சரண்யா தனது கணவர் பொண்வண்ணன் எப்படி தன்னிடம் காதலை சொன்னார் என்ற சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
கருத்தம்மா திரைப்படத்தில்தான் முதன் முறையாக என்னை சந்தித்தார்.அந்தப் படத்திலும் கணவன் மனைவியாகத்தான் நடித்திருப்போம். ஆனால் படத்தின் அசோசியேட்டாக இருந்ததால் ஷூட்டிங்கில் எப்பவுமே அவர் பிஸியாக இருப்பார், தன்னிடம் பேசியது கூட இல்லை.
அப்படி இருந்தவர் திடீரென்று ஒரு நாள் எனக்கு கால் செய்து நான் இயக்குனராக போகிறேன். உங்களது கால்ஷீட் வேண்டும் என்று கேட்டார். எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று நான் கேட்க, 70 ஆண்டுகள் வேண்டும் என்று பதில் சொன்னார். எதற்காக கால் செய்தார் என்று உடனே எனக்கு புரிந்து விட்டது. ஏதோ விளையாட்டாக திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் என் காதலை மறுத்து விட்டால் நான் ஒன்றும் செய்து கொள்ளப் போவதில்லை அதனால் யோசித்து உங்களது முடிவை கூறுங்கள் என்று பொன்வண்ணன் கூறிவிட்டு கால் கட் பண்ணிவிட்டார். இப்படி தான் சரண்யாவிடம் பொண்வண்ணன் காதலை வெளிபடுத்தியிருக்கிறார்.
எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா நடிகர் பொன்வண்ணன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார். அதில், நடிகர் பொன்வண்ணனிடம் நல்ல குணம் உள்ளது. நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர். தொடக்க காலங்களில் அன்னை வயல் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை. பின்னர், தொலைக்காட்சி தொடர்கள் இயக்கம், தொடர்களில் நடிப்பது, சினிமாவில் நடிப்பது என அடுத்தடுத்த முயற்சிகள் செய்தார்.
பொன்வண்ணனின் உண்மையான பெயர் ஷண்முகம். சினிமாவில் அவர் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு தனிப்பட்ட பி.ஆர்.ஓ போல நான் செயல்பட்டேன். அவர் மிகச்சிறந்த ஓவியரும்கூட. நிறைய அற்புதமான ஓவியங்கள் வரைந்துள்ளார். அவருடைய ஓவியங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகர். பொன்வண்ணனின் ஓவியத்திறமை குறித்து 99 சதவிகித மக்களுக்கு தெரியாது.
பொன்வண்ணனுக்கு பெரிய சம்பாத்தியம் எல்லாம் கிடையாது. அப்படியான சூழலில் சரண்யாவின் அப்பாவிடம் சென்று பொன்வண்ணன் பெண் கேட்டுள்ளார். மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கிய ஏ.பி.ராஜின் மகள்தான் நடிகை சரண்யா. அவரிடம் பெண் கேட்கையில், "சினிமாவில் நான் அசிஸ்டன்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிருக்கேன். டீவி சீரியல்களிலும் நடிச்சிருக்கேன்.
எதிர்காலத்தில் நிறைய படங்களிலும் நடிப்பேன். அதேபோல நிச்சயம் இயக்குநர் ஆவேன். இதெல்லாம் நடக்காமல் போனால்கூட என்னிடம் ஓவியம் வரையும் திறமை இருக்கிறது. அதை வைத்து சம்பாதித்து உங்கள் மகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன்.
எனவே உங்கள் பொண்ணை எனக்கு திருமணம் செய்துகொடுங்கள் எனத் திறந்த மனதுடன் கேட்டுள்ளார். வெளிப்படையாக பேசிய பொன்வண்ணனின் இந்தப் பேச்சு சரண்யாவின் அப்பாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. இரண்டு மூன்று நாட்களிலேயே அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்