"சினிமாக்காரன்னு எனக்கு பொன்னு குடுக்கல.. பொன்னு தேடியே வெறுத்துட்டேன்" வேதனையை சொல்லிய வில்லன் நடிகர்!
Nov 10, 2024, 01:01 PM IST
சினிமாக்காரன் எனக் கூறி எனக்கு யாரும் பெண் தரவில்லை. கட்டாயப்படுத்தி எனக்கு ஜெயசுதாவை கல்யாணம் செய்து வைத்தனர் என நெப்போலியன் தன் திருமணக் கதையை கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நெப்போலியன், அவரது குரலும், உருவமுமோ பார்ப்போரை கதிகலங்க வைக்கும். பாரதிராஜா மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர், கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகனாக இருந்து பின் சினிமாவை விட்டே விலகினார்.
இதைத் தொடர்ந்து கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வந்த இவர், எம்பியாகவும், மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அவர் இந்தியாவை விட்டே வெளியேறினார்.
நெப்போலியன் மகனுக்கு திருமணம்
நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் சிறு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். நெப்போலியன் இவரது சிகிச்சைக்காகவே அமெரிக்கா சென்ற நிலையில், இப்போது தனுஷுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஜப்பானில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குஷ்பு, மீனா, ராதிகா, கலா மாஸ்டர், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு அவர், மகனின் திருமண வாழ்க்கை பற்றி மட்டுமல்லாது, தனது திருமண வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார்.
எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை
நான் தமிழ் சினிமாவில் தீவிரமாக செயல்பட்டு வந்தேன். அந்த சமயத்தில் எனக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து என் பெற்றோர் பல இடங்களில் எனக்கு வரன் பார்த்தனர். ஆனால், நான் சினிமாவில் நடிப்பதால் என்னை நம்பி யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து எனக்காக சுமார் 50 பெண்களை பார்த்திருப்போம். ஒரு கட்டத்தில் நான் கல்யாணத்தின் மீது வெறுப்பு அடைந்த நிலையில், எனக்கு தேவதை போல் கிடைத்தவர் தான் என் மனைவி ஜெயசுதா எனக் கூறியுள்ளார்.
கொடூர வில்லனாக நினைத்த மனைவி
இந்நிலையில், நெப்போலியனுடன் நடந்த திருமணம் குறித்து பேசிய ஜெயசுதா, அவர் திருமணத்திற்காக 50 பெண்களைப் பார்த்திருக்கலாம், ஆனால், எனக்கு பார்த்த முதல் மாப்பிள்ளையே இவர் தான். இவர் என்னை பெண் பார்க்க வந்த சமயத்தில் நான் இவரை கொடூர வில்லனாகவே பார்த்தேன். படத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு விஷம் கொடுத்து கருவிலேயே குழந்தையை கொலை செய்தவராக இவரைப் பார்த்ததால் மிகவும் பயந்து இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள மறுத்தேன். பின் என் வீட்டில் உள்ளவர்கள் என்னை சமாதானப்படுத்தி இவருடன் திருமணம் செய்து வைத்தனர் எனக் கூறியுள்ளார்.
வெறுப்பு கருத்துகள்
முன்னதாக தனது திருமணம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட நெப்போலியன், தன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணுடன் அடுத்த மாதம் ஜப்பானில் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என தங்கள் வீட்டில் பல ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுப நிகழ்வு குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். இதைக் கண்ட இணையவாசிகள், தனுஷின் உடல்நலக் குறைபாட்டை சுட்டிக்காட்டி, ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்குவதாக கருத்து தெரிவித்திருந்தனர். அத்துடன், பணம் இருப்பதால் உங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என பல விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
நெப்போலியன் வேண்டுகோள்
இதற்கு பதிலளித்த நெப்போலியன், மனதை மிகவும் நோகடிக்காதீர்கள், இங்கு அனைவருக்கும் குடும்பம் உள்ளது. அவர்களை மனதில் வைத்துக் கொண்டு மற்றவரை விமர்சிக்க கற்றுக் கொள்ளுங்கள். நல்ல வார்த்தைகளை கூற மனம் வரவில்லை என்றால் கருத்து தெரிவிக்காமலாவது இருக்கலாம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
டாபிக்ஸ்