"இப்படி பண்ணா வெளங்குவனா? வர்ற லட்சுமிய ஏன் தடுக்கணும்"- நெப்போலியன் பகிர்ந்த அனுபவம்
Dec 02, 2024, 03:41 PM IST
நடிகர் நெப்போலியன் சினிமாவில் தான் பேசிய முதல் வசனம், அப்படியே வாழ்வில் பலித்ததாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நெப்போலியன். திமுக அமைச்சர் கே.என்.நேருவின் உதவியாளராக இருந்த நெப்போலியன், பாரதிராஜாவிடம் கிடைத்த அறிமுகத்தால் சினிமா பக்கம் வந்தார்.
பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் தான் நெப்போலியன் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிக்க வந்த அவருக்கு சினிமா பற்றிய எந்த தகவலும் தெரியவே இல்லையாம்.
இதுகுறித்து அவர் நடிகர் சித்ரா லக்ஷ்மணனின் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
துணிஞ்சு நின்னேன்
அந்தப் பேட்டியில், எனக்கு சினிமான்னா எப்படி எடுப்பாங்கன்னே தெரியாது. சரி வந்துட்டோம். படத்துல நடிக்க மேக்கப்பும் போட்டுட்டோம். ஒரு சீன்லயாவது நடிச்சிட்டு போயிடுவோம்ன்னு கொஞ்சம் துணிஞ்சு நின்னேன்.
அப்போ எனக்கு குடுத்த சீன் என்னென்னா ஒரு வாத்தியார தூக்குல போடுற சீன். ஒருத்தன் சினிமாவுல முதல் முதலா நடிக்க வரும்போதே இப்படி ஒரு சீன் எடுத்தா அவன் வெளங்குவானா? அதுவும் நான் அறிவுமதிய தூக்குல போடனும் அந்த சீன்ல. அதக் கேட்ட உடனே நான் ரொம்ப சோகமாகிட்டேன்.
முகத்த பாத்து கண்டு பிடிச்சாரு
அப்போ என்ன கவனிச்ச டைரக்டர் ஏன்டா உனக்கு சீன் பிடிக்கலையான்னு கேட்டாரு. இப்போ தான் அவரு முதன் முதல்ல நடிக்க சான்ஸ் குடுக்குறாரு. நான் போய் இல்ல சார், எனக்கு நீங்க எடுக்குற சீன் புடிக்கலைன்னா சொல்ல முடியும். அப்படி சொன்னா நம்பள அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுவாருன்னு பயம்.
அதுனால நான் அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார்ன்னு சொல்லி சமாளிச்சேன். அப்போவும் அவர் விடல. இங்க வா உன் மூஞ்சே சரி இல்லையேன்னு சொல்லி, அந்த இடத்துலயே ஒரு சீன் எழுதுறாரு. அதுல ஒரு மங்கலகரமான டயலாக் எழுதுறாரு. அப்புறம் அத நடிச்சும் காமிச்சாரு. இது தான் நான் தமிழ் சினிமாவில் பேசிய முதல் வசனம்.
ஜனங்க புரிஞ்சிகனும்
"வர்ற்ற லட்சுமிய யாருடா தடுத்து நிறுத்த முடியும். நான் எப்போவுமே நல்லத தான் சொல்லுவேன். நல்லத தான் செய்வேன். அத ஜனங்க புரிஞ்சிகனும்"ன்னு எழுதி என்கிட்ட கொடுத்து பேச சொன்னாரு. இதான் நான் பேசி நடிச்ச முதல் சீன்.
இந்த வசனம் பேசுனதுக்கு அப்புறமா தான் நம்மகிட்டயும் படிப்படியா கொஞ்சம் கொஞ்சமா லட்சுமி வர ஆரம்பிச்சது. எனக் கூறியிருக்கிறார். இவரது இந்த வீடியோ பாசிட்டிவ்வான வார்த்தைகளுக்கு இருக்கும் பலத்தை குறிப்பிடுகிறது எனக் கூறியுள்ளார்.
சினிமா வளர்ச்சி
புது நெல்லு புது நாத்து படத்திற்குப் பின், நெப்போலியன் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகவும், கொடூர அரக்கனாகவும், மக்களைக் காக்கும் நபராகவும், கடவுள் பக்தனாகவும், மனைவிக்கு அடங்கியவனாகவும். வீட்டோடு மாப்பிள்ளையாகவும், நேர்மையான போலீசாகவும் நடித்து மக்களுக்கு மட்டுமின்றி அவரது சினிமா பசிக்கும் தீனி போட்டுக் கொண்டார்.
இதன் காரணமாக இவருக்கு தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு ஏன் ஹாலிவுட் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஒரு முழு ஹாலிவுட் படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றிருப்பார் நெப்போலியன்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்