29 Years Of Vishnu: 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடல் பாடிய விஜயை தூக்கிவிட்ட விஷ்ணு திரைப்படம்!
Aug 17, 2024, 07:23 AM IST
29 Years Of Vishnu: 'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடல் பாடிய விஜயை தூக்கிவிட்ட விஷ்ணு திரைப்படம் குறித்து பார்ப்போம்.
29 Years Of Vishnu: ஷோபா சந்திரசேகர் கதையில், எஸ்.ஏ.சந்திரசேகர் திரைக்கதை அமைத்து இயக்கி, நடிகர் விஜய் நடித்து ஹிட்டடித்த திரைப்படம் தான், விஷ்ணு. இத்திரைப்படம்,1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி, ரிலீஸாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது. இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சங்கவி, ஜெய்சங்கர், தலைவாசல் விஜய், செந்தில், குமரிமுத்து ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கான வசனங்களை கோபு பாபு எழுத, ஒளிப்பதிவை விஸ்வம் நட்ராஜ் செய்திருந்தார். மேலும், இசையை தேவாவும், எடிட்டிங்கினை எம்.வெள்ளைசாமியும் செய்திருந்தனர். இன்றுடன் விஷ்ணு திரைப்படம் வெளியாகி, 29ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இப்படம் குறித்துப் பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.
விஷ்ணு திரைப்படத்தின் கதை என்ன?
விஷ்ணுவின் தந்தை தங்கதுரைக்கும் விஷ்ணுவுக்கும் முரண்பாடுகளுடனே வாழ்க்கை போகிறது. விஷ்ணுவின் தந்தை தங்கதுரை, தன் மகனை பயந்தவராகவே வளர்க்க விரும்புகிறார். ஆனால், விஷ்ணு, உலகத்தை நன்கு சுற்றிப் பார்த்து பரந்துபட்ட ஆளாக வளர விரும்புகிறார். தங்கதுரை தன் மகன் விஷ்ணு மீது காட்டும் அளவுகடந்த பாதுகாப்பு, விஷ்ணுவை வெறுக்க வைக்கிறது. அதனால், யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் விஷ்ணு, ஊட்டியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிக்கு சேர்கிறார். எஸ்டேட் உரிமையாளர் ராஜமாணிக்கம், விஷ்ணுவின் நடத்தைகள் பிடித்துப்போய், விஷ்ணுவை தன் மகனாக தத்தெடுக்கிறார். இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, ராதா என்னும் பெண்ணைப் பார்த்தவுடன் விஷ்ணு காதலில் விழுகிறார். பின் இருவரும் காதலிக்கின்றனர்.
இதற்கிடையே விஷ்ணுவின் வளர்ப்புத்தந்தை ராஜமாணிக்கம், ஒரு புகைப்படத்தை விஷ்ணுவிடம் காட்டி, தன் மீது வைத்திருக்கும் அன்பு உண்மையென்றால், இப்புகைப்படத்தில் இருக்கும் நபரை கொல்லவேண்டும் என்கிறார். அவரைக் கொல்வதற்கு முக்கிய காரணமென்றால், தன் சொந்தமகனை இப்புகைப்படத்தில் இருப்பவர் கொன்றுவிட்டதாக ராஜமாணிக்கம் விஷ்ணுவிடம் கூற, விஷ்ணுவும் அதைச் செய்து அவரைப் பழிவாங்கிவிடுவோம் என்கிறார். இதற்கிடையே அந்தப் படத்தை வாங்கி பார்க்கும் விஷ்ணுவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிருக்கிறது. ஏனென்றால், அதில் இருப்பது விஷ்ணுவின் சொந்த தந்தையான தங்கதுரையின் புகைப்படம்.
அதன்பின், சற்று சுதாரித்துக்கொள்ள்ளும் விஷ்ணு ராஜமாணிக்கத்திற்கும் தங்கதுரைக்கும் இடையில் இருக்கும் பிரச்னையை அறிய முற்படுகிறார். அப்போது, ராஜமாணிக்கத்திற்கும் தங்கதுரைக்கும் சொத்துப் பிரிப்பதில் பிரச்னை இருந்திருக்கிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட வரதராஜன், ராஜமாணிக்கத்தின் எஸ்டேட்டில் பணத்தைத் திருடுகிறார். இதை துரதிர்ஷ்டவசமாக, ராஜமாணிக்கத்தின் சொந்த மகன் பார்த்துவிடுகிறார். இதனால், ஆத்திரமடையும் வரதராஜன், ராஜமாணிக்கத்தின் சொந்த மகனைக் கொன்று, பழியை தங்கதுரை மீது போட்டுவிடுகிறார். பின்பு, வரதராஜனின் திருகு வேலைகளை விஷ்ணு பல்வேறு முயற்சிகள் மூலம் வெளியில் கொண்டுவந்து, வரதராஜன் ராஜமாணிக்கத்தின் சொந்தமகனைக் கொன்றது தெரியவருகிறது. இறுதியில், ராஜமாணிக்கமும் தங்கதுரையும் ஒன்றுசேர்கிறார்கள். படம் முடிவடைகிறது.
விஷ்ணு படத்தில் நடித்தவர்களின் விவரம்:
இப்படத்தில் விஷ்ணு/கிருஷ்ணனாக விஜய் நடித்துள்ளார். ராதாவாக சங்கவி நடித்துள்ளார். தங்கதுரையாக ஜெய்சங்கரும், ராஜமாணிக்கமாக தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, முத்துவாக நடிகர் செந்திலும், நிர்மலாவாக கலாரஞ்சனியும், டோபியாக குமரிமுத்துவும், ஹரிசந்திராவாக நடிகர் எஸ்.எஸ்.சந்திரனும், மாணிக்கமாக நடிகர் ஒரு விரல் கிருஷ்ணா ராவும் நடித்திருந்தனர். படத்தில் ஆஜாரே மேரி பாடலுக்கு, நடிகை ஜோதி மீனா சிறப்புத்தோற்றத்தில் ஆட்டம்போட்டிருப்பார்.
விஷ்ணு படத்தில் இசையின் பங்கு:
விஷ்ணு படத்தில் தேவாவின் இசையில் பாடல்கள் ஹிட்டடித்தன. குறிப்பாக, சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வாயேன் நந்தலாலா, தொட்டபெட்டா ரோட்டுக்குள்ள முட்டை பரோட்டோ ஆகியப் பாடல்கள் ஹிட்டடித்தன. அதில் 'தொட்டபெட்டா ரோட்டுல முட்டை பரோட்டா’ பாடலை, நடிகர் விஜய் பாட,அவருக்கு இணையான குரலாக அவரது தாய் ஷோபா சந்திரசேகர் பாடியிருந்தார். இப்பாடல் தற்போதுவரை விழாக்காலங்களில் ஒலிக்கும் ஹிட் பாடல் ஆகும்.
விஷ்ணு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 29ஆண்டுகள் நிறைவு ஆனாலும், இன்றும் இப்படத்தை டிவியில் போடும்போது ரசிக்கலாம்.