56 years of Kandhan Karunai: முருகனின் புகழ்பாடும் கந்தன் கருணை.. பக்தி மணக்க ஒரு காவியம்
Jan 14, 2024, 05:44 AM IST
கந்தன் கருணை திரைப்படம் வெளியாகி 56ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
முருகனின் புகழ்பாடும் பக்தி மணம் கமழும் ‘கந்தன் கருணை’திரைப்படம் வெளியாகி இன்றுடன் 56ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
1967ஆம் ஆண்டு வெளியான கந்தன் கருணை திரைப்படத்தை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் முருகனாக நடிகர் சிவகுமாரும் தெய்வானையாக நடிகை கே.ஆர்.விஜயாவும், வள்ளியாக நடிகை ஜெயலலிதாவும் நடித்துள்ளனர். சிவனாக ஜெமினி கணேசனும் பார்வதியாக சாவித்திரியும் நடித்துள்ளனர்.
சிவாஜி கணேசன், முருகனின் படைத்தளபதி வீரபாகுவாகவும், வள்ளியின் தோழியாக மனோரமாவும் நடித்துள்ளனர். சூரபத்மனாக எஸ்.ஏ. அசோகன் நடித்துள்ளார். குழந்தை முருகனாக மாஸ்டர் ஸ்ரீதரும் ஸ்ரீதேவியும் நடித்துள்ளனர். அவ்வையாக கே.பி.சுந்தராம்பாள் நடித்து இருந்தார். இப்படம் முழுக்க முழுக்க ஈஸ்ட்மேன் கலரில் எடுக்கப்பட்டு இருந்தது.
கந்தன் கருணை படத்தின் கதை என்ன? எம்பெருமான் முருகனின் அவதரிப்பு, அவன் சிறுவயதில் ஞானப்பழத்துக்காக கோபித்துக்கொண்டு பழனி மலையில் குடிபுகுந்தது, அவ்வையை சந்தித்தது, அப்பனுக்குப் பாடம் புகட்டியது, படைதிரட்டி சூரபதுமனை அழித்தது, தெய்வானை மற்றும் வள்ளியை கரம்பிடித்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கந்தன் கருணை ஆகும்.
முருகனின் அறுபடை வீடுகளில் கதை நகர்கிறது. அறுபடை வீடுகளில் சுவாமி மலையில் தந்தையான சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ வார்த்தையின் அர்த்தத்தைப் பயிற்றுவிக்கிறார், கந்தன். பின், ஞானப்பழம் தொடர்பான சண்டைக்காக பழனிமலை செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின், திருச்செந்தூரில் இருக்கும் சூரபதுமனை தனது பரிவாரங்களுடன் சென்று வீழ்த்துகிறார்,முருகன். அதில் மெச்சிய இந்திரன், தனது மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் முடித்துக்கொடுக்க எண்ணுகிறார். தெய்வானை மற்றும் முருகனின் திருமணம் நடைபெறும் தலம் தான், திருப்பரங்குன்றம். அதன்பின் திருத்தணியில் வள்ளியை மணமுடிக்கிறார். பின் மனைவிகளுக்கு இடையே நிகழ்ந்த சிறு ஊடல் தீர்ந்து பழமுதிர்ச்சோலையில் சமாதானம் ஆகிறார், முருகப்பெருமான். இவை அனைத்தும் கச்சியப்பரின் கந்தபுராணத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
கந்தன் மணம் கமழ வைத்த இசை: இப்படத்திற்குண்டான இசைப்பணியை கே.வி.மகாதேவன் மேற்கொண்டிருந்தார். இப்படத்தில் இசையமைத்தமைக்காக அவர் தேசிய விருது பெற்றார். அந்தளவுக்கு இப்படத்தின் பாடல்கள் இன்றும் பல இடங்களில் ஒலிபரப்பப் படுகின்றன. குறிப்பாக, ’திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ எனும் பாடலைச் சொல்லலாம்.
அதேபோல் சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா, வள்ளிமலை மன்னவா வேதம் நீயல்லவா, வெற்றிவேல் வீரவேல் சுற்றி நின்ற பகைவரெல்லாம், அறுபடை வீடுகொண்ட திருமுருகா ஆகிய காலத்தால் அழியாத பாடல்களை கண்ணதாசன், இப்படத்துக்காக எழுதிக்கொடுத்தார்.
சுவாரஸ்யமான தகவல்: இப்படத்தில் சிவகுமாருக்குப் பதிலாக, விஜயகுமார் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடையில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படம், கந்தன் கருணை என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு வயது மூன்று ஆகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்