31 Years of Meera: பி.சி.ஸ்ரீராம் இயக்கிய முதல் படம்.. விக்ரம் ஹீரோ.. வித்தியாச காதல் கதை மீரா!
Dec 18, 2023, 05:57 AM IST
மீரா திரைப்படம் வெளியாகி 31ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் முதன்முறையாக தமிழில் இயக்கி 1992, டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆன ரொமான்டிக் படம் தான், மீரா. இப்படத்துக்குண்டான கதையினை எம்.ஆர். பாரதி எழுதியிருந்தார். படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடிகை ஐஸ்வர்யாவும், விக்ரமும் நடித்து இருந்தனர். தவிர, தருண், பூர்ணம் விஸ்வநாதன், காந்திமதி, சின்னிஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் கலக்கியிருந்தனர். இப்படத்துக்குண்டான இசையை இளையராஜாவும் தன் படத்துக்குண்டான ஒளிப்பதிவினை பி.சி.ஸ்ரீராமும் செய்திருந்தனர். தவிர, நாசரும் சரத் குமாரும் சிறப்புத்தோற்றத்தில் நடித்து இருந்தனர்.
மீரா திரைப்படத்தின் கதை என்ன?: கல்லூரி படிக்கும் மீரா, கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறப்போகிறாள். தான் எவ்வாறு இப்படி ஆனேன் என்பதை ஃப்ளாஷ்பேக்கில் விவரிக்கிறார். அங்கு இருந்து தொடங்குகிறது மீரா படத்தின் கதை.
ஜீவா என்னும் கல்லூரி மாணவர், மீராவை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறான். ஆனால், மீராவோ வெறுக்கிறாள். இறுதியில் மீரா ஜீவாவை தனது கல்லூரியில் தன்னுடன் உடன்படிக்கமுடியாதபடி சில புகார்களால் வெளியேற்ற வைக்கிறாள்.
அப்போது, நடந்து செல்லும் மீரா ஒரு பெண் கொல்லப்படுவதைப் பார்க்கிறாள். அதைப் புகாரளிக்க காவல் நிலையம் சென்றபோது கொன்றவரே காவல் துறை அலுவலராக இருப்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறார். இதனை உணர்ந்துகொண்ட காவல் துறை அலுவலர், மீரா தான் கொலைக்கான ஒரே சாட்சி என்பதை அறிந்து, அவளைக் கொல்ல ரவுடிகளை அனுப்புகிறான்.
இதை ஜீவா அறிகிறான். ரவுடிகளை தடுத்து அடித்துவிட்டு கிளம்புகிறான் ஜீவா. அதனைத்தொடர்ந்து மீராவைக் கொல்ல 6 ரவுடிகள் அனுப்பப்படுகின்றனர். அவர்களிடம் இருந்து இருவரும் தப்புகின்றனர்.
இடையில் ஒரு காமெடி போலீஸ் குழுவிடம் இருவரும் சிக்கிக் கைதான நிலையில், அவர்களிடம் இருந்து இருவரும் நைஸாக தப்புகின்றனர். இறுதியில், மீரா ஜீவாவின் காதலை ஏற்றுக்கொள்கிறாள்.
அப்போது இருவரும் தப்பி ஒரு கண்காணாத இடத்திற்குச் செல்கின்றனர். அப்போது ஜேசு என்னும் சிறுவன், மீராவிற்கு நெருக்கமாகின்றான். அவனது பிறந்தநாளைக் கொண்டாட முனையும்போது, மீராவைக் கொல்ல திட்டம்போடும் ரவுடிகளால் சிறுவன் ஜேசு கொல்லப்படுகிறான். இறுதியில் அந்த கொலையாளிகளை ஜீவா கொல்கிறான். ஆனால், மீராவோ, ஜீவா மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறாள். இறுதியில் ஜீவா தன்னைத்தானே கொன்றுகொள்கிறான். இறுதிக்காட்சியில் மீரா பிரசவத்திற்குப் போகிறாள்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள்: இதில் விக்ரம் ஜீவாவாகவும், ஐஸ்வர்யா மீராவாகவும் மாஸ்டர் தருண் ஜேசுவாகவும் நடித்துள்ளனர். தவிர, ஜனகராஜூம் சின்னிஜெயந்தும் காமெடி போலீஸாக வலம்வருகின்றனர். பெண்ணைக் கொல்லும் காவலராக சரத் குமார் நடித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் புது ரூட்டுல தான் நல்ல ரோட்டுல தான் நின்றாடும் வெள்ளி நிலவு, ஓ.. பட்டர்ஃபிளை.. ஏன் விரித்தாய் சிறகை.. ஆகிய இரண்டு பாடல்களும் இன்றும் கேட்டால் கிளாஸிக் ரகம்.
ஒரு வித்தியாசமான காதல் கதையாக மீரா படம் அமைந்தது. இப்படம் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்