Thangalaan:விக்ரம் பிறந்தநாள் பரிசு.. தங்கலான் குட்டி டீசர் எப்போது? - அறிவிப்பு
Apr 16, 2023, 09:09 PM IST
நடிகர் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தில் இருந்து ஒரு சிறு முன்னோட்டம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூலமாக இயக்குநர் பா.ரஞ்சித்துடன் முதன்முறையாக இணைகிறார் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ்குமார்.
தங்கலான் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து பதிவிடப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே தங்கலான் படத்திற்காக தற்போது வரை இரண்டு பாடல்களை பதிவு செய்து முடித்துள்ளதாகவும், இந்த படத்தில் பயன்படுத்த பட்ட இசையானது நான் இது வரை முயற்சி செய்யாத ஒன்றும் என்றும் ஜிவி பதிவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்தில் டேனியல் கால்டகிரோனே என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விக்ரமின் பிறந்தநாளான நாளை காலை 9.05 மணிக்கு படத்தில் இருந்து ஒரு சிறு முன்னோட்டம் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக சென்னையில் தொடங்கி, பின்னர் கர்நாடகாவில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப் பகுதிகளில் நடந்து வருகிறது. அண்மையில் இந்த திரைப்படம் தொடர்பாக பேட்டியளித்த இயக்குநர் பா. ரஞ்சித் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறி இருந்தார்.
டாபிக்ஸ்