Oscar Movies: ஆஸ்காருக்கு பறக்கும் 6 தமிழ் படங்கள்... கிட்டுமா விருது! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Sep 23, 2024, 03:43 PM IST
Oscar Movies: தமிழ் சினிமாவில் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 6 தமிழ் படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட உலகில் மிக உயரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கார் விருது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக வழங்கப்படும்.
இந்த விருதானது சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சண்டைக் காட்சி என பல பிரிவுகளில் வழங்கப்படும்.
இந்த நிலையில், 2025ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கார் விருது விழாவிற்கு பல திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், தமிழ் மொழியில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற மஹாராஜா, தங்கலான், ஜிக்தண்டா டபுள் எக்ஸ், வாழை, ஜமா, கொட்டுக்காளி ஆகிய 6 திரைப்படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதுபோக இந்திய அளவில் பார்க்கும் போது 12 இந்தி திரைப்படங்களும், தெலுங்கில் 6 திரைப்படங்களும், மலையாளத்தில் 4 திரைப்படங்களும், மராத்தி மொழியில் 4 திரைப்படங்களும், ஒரிசா மொழியில் 1 திரைப்படமும் என மொத்தம் 29 திரைப்படங்கள் ஆஸ்கார் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மஹாராஜா
நடிகர் விஜய் சேதுபதி- இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் கூட்டணியில் வெளியான இந்தத் திரைப்படம் பெண்கள் மீது நடத்தப்படம் வன்முறை குறித்து பேசியுள்ளது. இயக்குநர் இந்தக் கதையை அணுகிய விதம் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வாழை
இயக்குநர் மாரி செல்வராஜ், அவரது இளமைக் காலத்தில் நடந்த, அவர் அனுபவப்பட்ட வாழ்க்கையை வாழை திரைப்படமாக கொடுத்துள்ளார். வறுமையின் கோரப்பிடியால் பள்ளி செல்லும் வயதில் சிறுவர்கள் படும் துயரையும், இதனால், ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே பறிகொடுத்த மக்கள் குறித்தும் மிக ஆழமாக பேசியிருக்கிறார். இதையடுத்து இந்தப் படமும் ஆஸ்கார் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொட்டுக்காளி
இயக்குநர் வினோத்ராஜ்- நடிகர் சூரி கூட்டணியில் திரைக்கு வந்த படம் கொட்டுக்காளி. 12ம் வகுப்பு முடித்த தனது முறைப்பெண்னை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார் கதாநாயகன். அங்கு வேறொரு நபருடன் காதல் வயப்பட்டதால், அப்பெண் சூரியை திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக ஊர் மக்கள் கூடி சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். பின் நடப்பது என்ன என்பது தான் மீதிக்கதை. கிராமங்களின் வழக்கத்தையும் நடைமுறைகளையும் தத்ரூபமாக எடுத்து பல விருதுகளை குவித்து வரும் இந்தப் படமும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்- ராகவா லாரன்ஸ் கூட்டணியில் வித்யாசமான கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். மதுரையில் அரசியல் செல்வாக்கான ரவுடியாக வலம் வரும் லாரன்ஸை, சினிமா ஹீரோ ஒருவர் சீண்டிப் பார்க்கிறார். இதனால், தானும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என இயக்குநர் சத்யஜித் ரேவிடம் சீடனாக உள்ள எஸ்.ஜே.சூர்யாவை நாடிச் செல்கிறார். பின் லாரன்ஸின் ஆசை நிறைவேறியதா என்பதே கதை. வித்யாசமான கோணத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படமும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தங்கலான்
பா.ரஞ்சித்- விக்ரம் கூட்டணியில் வரலாற்று திரைப்படமாக உருவானது தங்கலான். வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் சுரண்டியது போக மீதமுள்ள இடத்தில் விவசாயம் செய்து வரும் விக்ரமின் கூட்டத்திடமிருந்து, மீதி நிலமும் பிடுங்கப்பட நினைக்கிறது. இந்நிலையில், விக்ரமின் கூட்டத்திற்கு வெள்ளைக்காரர் உதவுகிறார். வரலாற்று ரீதியிலான இந்தப் படமும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜமா
அறிமுக பாரி இளவளகன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஜமா. அழிந்து வரும் தெருக்கூத்து கலை குறித்து அற்புதமான படைப்பை உணர்வுப்பூர்வமாக தந்துள்ளார். இந்நிலையில் இந்தப் படமும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபோக ஆஸ்கார் பட்டியலில் லாபட்டா லேடிஸ், கல்கி 2898 ஏ.டி., ஆட்டம், ஆடு ஜீவிதம், ஆர்ட்டிகிள் 370, அனிமல் ஆகிய விமர்சன ரீதியான வெற்றிப் படங்களும் ஆஸ்காருக்கு பரிந்துரைக்க பட்ட படங்களின் பட்டியலில் உள்ளது.