24 Years of Mudhalvan: ஒருநாள் முதல்வராக கலக்கும் அர்ஜூன்! வில்லனாக அசத்தும் ரகுவரன்! வெள்ளி விழாவை நெருங்கும் முதல்வன்!
Nov 07, 2023, 05:20 AM IST
24 Years of Mudhalvan : படத்தின் இறுதி காட்சியில் ரகுவரன் கூறும் ‘தட் வாஸ் எ குட் இன்டர்வ்யூ என்ற வசனமும், பின்னர் அர்ஜூன் கூறும் ‘என்னையும் கடைசில அரசியல்வாதி ஆக்கிட்டிங்கல்ல’ என்ற வசனமும் சுஜாதாவின் திறமைக்கு சான்றுகள்.
முதல்வன், அரசியல் ஆக்ஷன் திரைப்படம். இந்தப்படத்தை எழுதி, இயக்கியவர் பிராமாண்ட இயக்குனர் ஷங்கர். மாதேஷ் தயாரிப்பாளர். இந்தப்படத்தில் அர்ஜூன், மனிஷா கொய்ராலா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ரகுவரன் வில்லானகவும், வடிவேல், மணிவண்ணன் காமெடி கதாபாத்திரத்திலும், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். படத்தின் வசனங்களை சுஜாதா எழுதியிருப்பார். கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருப்பார்.
புகழேந்தி தொலைக்காட்சி நிருபர், ஒருமுறை முதல்வரை பேட்டி எடுக்கிறார். அப்போது கடினமான கேள்விகளை கேட்கிறார். அதில் ஆத்திரமடைந்த முதல்வர், ‘அங்கிருந்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். ஒரு நாள் எனது நாற்காலியில் அமர்ந்து பார்த்தால் புரியும்’ என்கிறார். இதை நிருபர் புகழேந்தி சவாலாகவே எடுத்துக்கொண்டு ஒரு நாள் முதல்வராகிறார்.
அப்போது அவர் செய்யும் அதிரடி, அதற்கு முதல்வர் கொடுக்கும் குடைச்சல் என படம் மெதுவாக துவங்கி பரபரப்பான அரசியல் களமாகிவிடும். ஒரு நாளில் அவர் செய்த மாற்றங்களால் புகழேந்தியின் புகழ் அதிகரித்து, முதல்வரின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். இதனால் ஆத்திரமடைந்த முதல்வர் புகழேந்தியின் வீடு, பணியிடம், புகழேந்தி என தொடர் தாக்குதல்களை நடத்துவார்.
புகழேந்தியை முதல்வராக வலியுறுத்தி ஒரு கூட்டம் அவரது வீட்டை சூழ்ந்துகொள்ளும். புகழேந்தியும் அதை ஏற்கும் நிலை ஏற்படும். புகழேந்தியின் காதலி தேன்மொழி, அவரது தந்தைக்கு அவர் அரசியலுக்கு வருவதற்கு விருப்பம் இருக்காது. ஆனால் அவர் வரும் நிலை ஏற்பட்டு, முதல்வரும் ஆகிவிடுவார்.
அவருக்கு முன்னாள் முதல்வர் கொடுக்கும் குடைச்சலில் புகழேந்தியின் பெற்றோர் கொல்லப்படுவர். காதலியும் விலகி அவர் தவித்திருக்கும் வேளையில், மேலும் மேலும் குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார் முன்னாள் முதல்வர், அனைத்தையும் சமாளித்து, காதலியையும் கைப்பிடிப்பாரா புகழேந்தி என்பதுதான் மீதி கதை.
இந்த கதை ரஜினிகாந்துக்காக எழுதப்பட்டது. ஆனால் அவரால் நடிக்க முடியாமல் போகவே விஜயை வைத்து செய்ய ஷங்கர் நினைத்தார். ஆனால் அதுவும் முடியாமல் போகவே, கமலை வைத்து படமெடுக்க முயன்று அதுவும் தோல்வியில் முடிவடைய கடைசியில் அர்ஜூன் நடித்தார். ஆனால் அவருக்கு இது ஒரு சிறந்த படமாக அமைந்தது.
பெண் முக்கிய கதாபாத்திரத்துக்கு மீனாவை நடிக்க வைக்க முயற்சி செய்து, முடியாமல் போகவே மனிஷா கொய்ராலா நடித்தார். முதல்வர் கதாபாத்திரத்தில் தரமான வில்லனாக கலக்கியிருப்பார். மணிவண்ணன் மற்றும் வடிவேலு இருவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருப்பார்கள்.
படத்தின் இறுதி காட்சியில் ரகுவரன் கூறும் ‘தட் வாஸ் எ குட் இன்டர்வ்யூ என்ற வசனமும், பின்னர் அர்ஜூன் கூறும் ‘என்னையும் கடைசில அரசியல்வாதி ஆக்கிட்டிங்கல’ என்ற வசனமும் சுஜாதாவின் திறமைக்கு சான்றுகள்.
ஏ,ஆர்.ரஹ்மானின் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். குறுக்கு சிறுத்தவளே, முதல்வனே, உப்பு கருவாடு, அழகான ராட்சசியே, உளுந்து வெதக்கையில, ஷக்கலக்க பேபி என்ற பாடல்கள் இன்று வரையிலும் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவை. 24 நான்கு ஆண்டுகளை முடித்து வெள்ளி விழா ஆண்டை நோக்கி வெற்றி நடைபோடும் முதல்வன் படம் குறித்து சில நினைவுகளை ஹெச்.டி தமிழ் அந்தப்படம் வெளியான நாளில் பகிர்ந்துகொள்கிறது.
டாபிக்ஸ்