தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் மேலும் 2 வழக்கு

தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் மேலும் 2 வழக்கு

Marimuthu M HT Tamil

Nov 07, 2024, 07:42 AM IST

google News
தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கர் பற்றிய சர்ச்சை பேச்சு.. கூடிக்கொண்டே இருக்கும் கேஸ்.. கஸ்தூரி மீது ஆண்டிபட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி மீது ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் மேலும் 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே சமீபத்தில் அந்தணர்கள் சமூகத்தின் மீது தொடரும் அவதூறுகளை கண்டித்து, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கஸ்தூரி, ‘’ஒவ்வொரு இடத்திலும் அவன் இவனை ஒடுக்கினான். இவன் அவனை ஒடுக்கினான் என புனைந்துவிட்டுட்டாங்க. வெள்ளையாக இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்னு சொன்னது வெள்ளையர்களை இல்லை. ஐயர், ஐயங்காரை தான். ஆனால், இதில் சிலர் மாறி நாங்களும் பொய் சொல்வோமேன்னு போய் நிற்கிறாங்க. இறைச்சி சாப்பிடுவேன்னு சொல்றது எல்லாம் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்த துருப்பிச்சீட்டை எடுத்துத்தருவது மாதிரி தான்.

நம்ம அந்தணர் இனத்தை இழிவுபடுத்தினார் என்றால், அடிவருடி, சொம்புன்னு சொன்னதாகச் சொன்னார்கள். என் நிலையை எல்லாம் யோசிச்சுப் பாருங்க. நேராக ஒரு விஷயம் தான். ஏனென்றால், பெண்ணாகப் போய்விட்டேன், நடிகையாகப் போய்விட்டேன். அவங்க சொல்ற வார்த்தை திராவிடியா தனத்தைவிட கொச்சையான வார்த்தையொன்றும் கிடையாது. அப்படியே சொன்னாலும் என் சுய உழைப்பைப் போட்டு செய்யிறேன்னு சந்தோஷமாக சொல்லிட்டுப் போயிடுவேன். உன்னை மாதிரி பிளவுவேலை செய்து, மாமா வேலை செய்யிறதை விட, என்னுடைய வேலை பரவாயில்லை என்று சொல்வேன்.

சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தணர் - கஸ்தூரி

சிவச்சாரியர் ஒருவர் சொன்னார், இத்தனை நாட்கள் நாம் சாத்வீகமாக இருந்துட்டோம் என்று. ஐயா, இல்லை ஐயா, சுதந்திரத்துக்காக உயிர் கொடுத்தவர்களில் பெரும்பாலானோர் அந்தணர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். தமிழ் அந்தணர்கள். தமிழர்கள்.

ஆரிய வந்தேறின்னு சொல்றாங்க. யார் வந்தேறி. கைபர், போலான் கணவாய் மூலமாக வந்த பல சமயங்கள் சார்ந்தோர் வந்தாங்க. அவர்களைப் பற்றியெல்லாம், பேசினால், உங்கள் ஓட்டு தான் குறையும்.

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு வந்ததாகச் சொல்லப்படுபவர்களை வந்தேறி எனச் சொல்கிறீர்களே, சங்க காலம் முதல் தமிழர்கள் கோயில்களில் சேவை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

எப்படி ஆரியப் பண்பாடு தமிழகத்துக்குள் வரும்போது ஷத்திரியர்கள் எனும்போது வன்னியர்களும் தேவர்களும் இணைந்துகொண்டார்களோ., வைஷ்யர்கள் என்ற பாகுபாட்டில் செட்டியார்கள், முதலியார்கள், வேளாளர்கள் இணைந்துகொண்டார்களா., அதேபோல் கோயில் பணிகளைச் செய்ய சிவச்சாரியார்கள், ஐயர்கள், ஐயங்கார்கள், பண்டாரத்தினர், சைவப் பிள்ளைமார்கள் ஆகியோர் இணைந்துகொண்டார்கள்.

தெலுங்கர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரி:

தெரியாமல் தான் கேட்கிறேன். முந்நூறு வருஷத்துக்கு முன்பு, ராஜாக்களுக்குக் கூட சேர்த்துக்கிட்ட அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்த தெலுங்கு பேசினவர்கள் எல்லாம், இன்றைக்கு தமிழ் எங்கள் இனம் என்றுசொல்லும்போது, எப்போவோ வந்த பிரமாணர்களைத் தமிழர்கள் இல்லையென்று சொல்ல நீங்கள் யாருங்க.

அதனால் தானே, தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைக்கமுடியவில்லை. நான் ஹைதராபாத்தில் தான் நான்கு வருடங்கள் இருக்கிறேன். நீங்கள் எல்லாம் திராவிடர்களா அப்படின்னு தெலுங்கு மொழிபேசும் நபர்களிடம் கேட்கும்போது, என்னது என கேள்வி கேட்குறாங்க. உங்களைவிட நன்கு தெலுங்கு பேசுறவங்க தமிழ்நாட்டில் இருக்காங்க. 5 அமைச்சர்கள் இருக்கிறாங்க அப்படின்னு சொன்னேன். உடனே, ஹைதராபாத் காரங்க சந்தோஷமாகப் பார்க்கிறாங்க.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு அப்படின்னு திருமா சார் கேட்டார். அவர் தெரிந்துபேசினாரா, தெரியாமல் பேசினாரா எனத் தெரியாது. ஆதிகுடிகளான பறையர் குடிகளுக்குத் தான் பங்கு கிடையாது. தெலுங்கு பேசினால் ஏற்கனவே நிறையப் பங்கு கொடுத்திட்டுதான் இருக்காங்க. விடுங்க. ஆனால், அவங்க நம்மகிட்ட இருந்து எதையும் அடிச்சுபிடுங்காமல் இருந்தால் சரி’’ என நடிகை கஸ்தூரி பேசியிருந்தார்.

இதற்குப் பல தெலுங்கு அமைப்புகள் கஸ்தூரியைக் கடுமையாக சாடின. அதன்பின், இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. குறிப்பாக திமுக எம்.பி.ஆ. ராசா, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கடுமையாக கஸ்தூரியை சாடினர்.

எனது தெலுங்கு குடும்பத்தை புண்படுத்துவது நோக்கமாக இருந்ததில்லை - கஸ்தூரி!

இதுதொடர்பாக நடிகை கஸ்தூரி தற்போது மன்னிப்புக்கேட்டுள்ளார். அதில் அவர் தனது டிவிட்டரில் எழுதியிருப்பதாவது, ‘’கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பல மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் வந்துள்ளன. அவர்கள் என் உறுதியை மட்டும் கடினமாக்கினார்கள்.

இருப்பினும், இன்று எனது மிகவும் மரியாதைக்குரிய தெலுங்கு சகோதரர் ஒருவர், தமிழ்நாடு மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஒட்டுமொத்த தெலுங்கு மக்கள் பற்றி நான் பேசிய வார்த்தைகளால் உண்டான விளைவுகளைப் பற்றி பொறுமையாக விளக்கினார்.

நான் என் பாரதமாதாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் மகத்தான பெருமை கொண்ட உண்மையான தேசியவாதி.

நான் எப்போதும் சாதி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவள். தெலுங்கில் ஒரு சிறப்புத் தொடர்பு இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்.

நாயக்க மன்னர்கள், கட்டபொம்மு நாயக்கர், தியாகராஜ கிருதிகள் பாடி புகழ்பெற்ற நாட்களை ரசித்து வளர்ந்தவள் நான்.

தெலுங்கில் எனது திரையுலக வாழ்க்கையை நான் மிகவும் மதிக்கிறேன். தெலுங்கு மக்கள் எனக்கு பெயர், புகழ், அன்பு மற்றும் குடும்பத்தை வழங்கியுள்ளனர்.

நான் வெளிப்படுத்திய கருத்துகள் குறிப்பிட்ட சில நபர்களுக்குச் சூழல் சார்ந்தவையே தவிர, பெரும்பான்மையான தெலுங்கு சமூகத்திற்கு பொதுவானவை அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

எனது தெலுங்கு குடும்பத்தைப் புண்படுத்துவது எனது நோக்கமாக இருந்ததில்லை. கவனக்குறைவாக ஏதேனும் மோசமான உணர்வு ஏற்பட்டால் வருந்துகிறேன்.

அனைவரின் நலன் கருதி, 3 நவம்பர் 2024 அன்று ஆற்றிய உரையில் தெலுங்கில் உள்ள அனைத்துக் குறிப்புகளையும் திரும்பப் பெறுகிறேன்.

அந்த உரையில் நான் எழுப்பிய மிக முக்கியமான விஷயங்களில் இருந்து இந்த சர்ச்சை, கவனத்தை திசை திருப்பியுள்ளது. தமிழ்நாட்டின் தெலுங்கு சகோதரர்கள் பிராமணர்களின் கண்ணியத்திற்கான போராட்டத்தில் திரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார், நடிகை கஸ்தூரி.

அடுத்தடுத்து வழக்குப்பதிவு:

இந்நிலையில் தெலுங்கு மக்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இவ்விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை திருநகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி மீது திருச்சியிலும் 3 பிரிவுகளின் கீழ் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை