PM Visits in Chennai: பிரதமர் மோடி இன்று 'ரோடு ஷோ'..சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - விபரம் இதோ.!
Apr 09, 2024, 09:41 AM IST
PM Modi Road Show: பிரதமர் மோடியின் சென்னை வருகை நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, அனுராக் சிங் தாக்குர் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேசியத் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து படையெடுத்தும் வரும் நிலையில் 7-வது முறையாக தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமரின் நிகழ்ச்சி நிரல்
மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு சென்னை வரும் மோடி, சென்னை தியாகராய நகரில் மாலை 6.30 மணிக்கு ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அப்போது, தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரையிலான பாண்டி பஜார் சாலையில் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
மேலும், மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.வி.பால கணபதி, ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால், காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் வெ.ஜோதி வெங்கடேசன், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் வாக்கு சேகரிக்க உள்ளார்.
தொடர்ந்து இன்று இரவு கிண்டி ராஜ்பவனுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு ஓய்வெடுக்கிறார். பின்னர் நாளை (ஏப்ரல் 10) சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து காலை 10.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார்.
போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடியின் வாகன பேரணி நடைபெறுவதையொட்டி சென்னை ஜி.எஸ்.டி. சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் இன்று பிற்பகல் 3 முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகனம் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட சாலைகளில் வணிக வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும். மேலும், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி நோக்கி செல்லும் வாகனங்கள், சிப்பெட்டிலிருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள், வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள், கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள், சிபிடியில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள், டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள், அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வை முன்னிட்டு சென்னை பெருநகரில் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இவற்றை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். மேலும், பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சியையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: