Modi: ’மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய வரைபடமே மாறும்!’ நிர்மலா சீதாராமன் கணவர் பிரகாலா பிரபாகர் எச்சரிக்கை!
”2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்று பிரபாகர் கூறினார்”
2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'இந்தியாவின் வரைபடம் மாறும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் எச்சரித்துள்ளார்.
பொருளாதார நிபுணர் பிரகாலா பிரபாகர் பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், 2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்று பிரபாகர் கூறினார்.
தற்போது இருக்கும் மோடி அரசாங்கம் மீண்டும் தொடர்ந்தால் இந்தியாவில் மீண்டும் தேர்தலே நடக்காது என எச்சரித்த அவர், பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு மற்றும் வரைபடமே மாறும் என கூறினார்.
இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுக்களை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார் என்ற அவர், பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையிலான இன மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும் என எச்சரித்தார்.
முன்னதாக மார்ச் மாதம், பிரகாலா பிரபாகர் தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றில் பேசுகையில், “தேர்தல் பத்திர ஊழல் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என குற்றம் சாட்டி இருந்தார்.
யார் இந்த பிரகாலா பிரபாகர்?
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட பிரகாலா பிரபாகர், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ மற்றும் எம்பில் பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அமைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். கடந்த 1986ஆம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 10 ஆண்டு கால மோடி அரசின் பொருளாதார செயல்பாடுகள் குறித்து பிரகாலா பிரபாகர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். மேலும் புதிய இந்தியா எனும் கோணல் மரம் என்ற புத்தகத்தில் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார செயல்பாடுகளையும் பிரகாலா பிரபாகர் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்குகிறது.
நாடு முழுவதும் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.