Electoral Bonds: தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்? எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
Mar 18, 2024, 06:19 PM IST
“எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கைகள் திருப்தி இல்லை என அதிருப்தி”
தேர்தல் பத்திரங்கள் எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து தரவுகளையும் முதலிலேயே வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஏன் தேர்தல் பத்திரங்கள் குறித்த எண்களை வெளியிடவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதில் எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கைகள் திருப்தி இல்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வரும் மார்ச் 21ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்களின் எண்களின் முழு விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் இதற்கான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
தேர்தல் பத்திரங்களில் பணபறிமாற்றம் நடந்தது குறித்த எண்கள் வெளியிடாததைகடுமையான வார்த்தைகளில் கண்டித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களின் அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு வங்கியைக் கேட்டுக் கொண்டதுடன் மேலதிக உத்தரவுகளுக்காக காத்திருக்கக்கூடாது என்றும் கூறி உள்ளது.
எஸ்பிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, "நாங்கள் நீதிமன்றத்துடன் விளையாடுகிறோம்" என்று நினைக்க வேண்டாம், தேர்தல் பத்திரங்களின் எண்களை நீதிமன்றம் விரும்பினால், "நாங்கள் கொடுப்போம்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், எந்த தகவலையும் மறைக்கவில்லை என்று கூறி பிரமாணப் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உருவாக்கியதன் முக்கிய நோக்கம் அரசியலில் கறுப்புப் பணத்தைத் தடுப்பதே என்றார். நீதிமன்றத்திற்கு வெளியே இந்த தீர்ப்பு எவ்வாறு விளையாடப்படுகிறது என்பதை உச்ச நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த விவரங்களை வைத்து சூனிய வேட்டை தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். "சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில்" சில சமூக ஊடக பதிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன என்று அவர் கூறினார். இது தொடர்பாக நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "நீதிபதிகளாக, நாங்கள் சட்டத்தின் ஆட்சியில் மட்டுமே இருக்கிறோம், அரசியலமைப்பு சட்டத்தின்படியே செயல்படுகிறோம். இந்த அரசியலில் சட்டத்தின் ஆட்சியை நிர்வகிக்க மட்டுமே நமது நீதிமன்றம் பாடுபட வேண்டும். நீதிபதிகளாகிய நாங்களும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறோம். ஆனால் இதை எடுக்கும் அளவுக்கு எங்கள் தோள்கள் விசாலமானவை. நாங்கள் எங்கள் தீர்ப்பின் வழிகாட்டுதல்களை மட்டுமே செயல்படுத்துகிறோம் என கூறினார்.
இரண்டு தவணைகளில், நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்களை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அதிக தொகையை பணமாக்கிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும், பிஆர்எஸ் நான்காவது இடத்திலும் உள்ளன.
யார் யாருக்கு நன்கொடை அளித்தனர் என்ற தகவலை எஸ்பிஐ வெளியிடவில்லை. இந்த நிலையில் நன்கொடையாளர்களின் நன்கொடை தொகையை திமுக மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளது.