Election 2024: ’பாஜக 400 ஜெயிக்குமா? 250 தாண்டுறதே கஷ்டம்!’ புள்ளி விவரங்களுடன் விளாசும் பத்திரிக்கையாளர் சமஸ்!
Apr 21, 2024, 10:30 AM IST
“பாஜக கடந்த முறை வென்ற தொகுதிகளை காட்டிலும் கூடுதலாக வெற்றி பெறுவதற்கான சூழல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே உள்ளது”
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளை கூட பாஜகவால் வெல்ல முடியாது என மூத்த பத்திரிக்கையாளர் சமஸ் கூறி உள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்து உள்ள நேர்காணல் ஒன்றில், “பாஜக கூட்டணி 400 இடங்களை வெல்லும் என பேசுவது, ஒரு உளவியல் தாக்குதல். கடந்த 2019ஆம் ஆண்டில் பாஜக மட்டும் 303 இடங்களை வென்று இருந்தனர். அந்த இடங்களை தற்போது வெல்வதே அவர்களுக்கு சிரமம். பாஜகவால் 225 முதல் 250 வரையிலான இடங்களை பெற முடியும்.
பாஜக இன்று 12 மாநிலங்களில் நேரடியாகவும், பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் ஆகிய 2 பெரிய மாநிலங்களில் கூட்டணி மூலமும் பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்களில் நடைபெறும் ஆட்சியில் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இந்த 14 மாநிலங்களிலும் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வெற்றியை அவர்கள் பெற்றார்கள். இந்த 14 மாநிலங்களிலும் உள்ள 219 மக்களவைத் தொகுதிகளை பாஜக வெற்றி பெற்றது.
பாஜக கடந்த முறை வென்ற தொகுதிகளை காட்டிலும் கூடுதலாக வெற்றி பெறுவதற்கான சூழல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டுமே உள்ளது.
பல ஆயிரம் கோடி நிதியை உத்தர பிரதேச மாநிலத்திற்கு மத்திய பாஜக அரசு செலவு செய்து உள்ளது. ஒட்டு மொத்த தென்னக மாநிலங்களுக்குமான மத்திய நிதி பகிர்வு 1.90 லட்சம் கோடி என்றால் உத்தர பிரதேசம் என்ற ஒரு மாநிலத்திற்கு மட்டும் 2 லட்சம் கோடிக்கு மேல் நிதி பகிர்வு சென்று உள்ளது. இது நீங்களாக மீதம் உள்ள 13 மாநிலங்களிலும் பாஜகாவல் முன்பு பெற்ற இடங்களை பிடிக்க பெரும் சவால் நீடிக்கிறது.
உதாரணமாக குஜராத் மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் இப்போது உள்ளூர் எம்.பிக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. பாஜக தலைமையால் அறிவிக்கப்பட்ட 2 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டு அடுத்த வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய சூழல் உள்ளது. இந்த பகுதியில் காங்கிரஸ் கூட்டணியால் குறைந்தபட்சம் 2 முதல் 4 தொகுதிகளை வெல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். ஹரியானாவை பொறுத்தவரை கடந்த முறை 10 தொகுதிகளையும் பாஜகவே வெற்றி பெற்றது. ஆனால் அங்கு உருவாகி உள்ள எதிர்ப்பு காரணமாக ஹரியானா முதல்வர் மாற்றப்பட்டு உள்ளார். தற்போது உள்ள 6 எம்.பிக்களுக்கு வாய்ப்பு தராமல், காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக பெரும் சரிவு உள்ளது. மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. மகராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாஜகவால் கடந்த முறை பெற்ற பெரிய வெற்றியை பெற முடியாது. அந்த இடங்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும்.
ஏனைய மாநிலங்களில் 2 முதல் 5 வரையிலான எம்.பிக்களை பாஜக இழந்தாலே கடந்த முறை வென்ற 303 என்ற எண்ணிக்கையை அடைய முடியாது என்பது உண்மை. 272 என்ற தனி பெரும்பானைக்கான எண்ணை காட்டிலும் வெறும் 31 இடங்களை மட்டுமே பாஜக கூடுதலாக வைத்து உள்ளது.” என சமஸ் கூறி உள்ளார்.