Modi vs Priyanka Gandhi: ’அம்பானி-அதானி பற்றி ராகுல் பேசவில்லையா?’ பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி!
May 11, 2024, 04:01 PM IST
”மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் பெயர்களை உச்சரிப்பதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று தனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி இருந்தார்”
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி குறித்து பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிறுத்தி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
”தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரை திட்டுவதை ஏன் நிறுத்தினார்” என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பிய நிலையில், ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி பேசினார்.
அப்போது, உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது, கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்ததாக குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி அதானியின் பெயரை குறிப்பிட்டு பேசுவதில்லை என்று நரேந்திர மோடி இன்று கூறினார். ராகுல் காந்தி ஒவ்வொரு நாளும் அதானி பற்றி பேசுகிறார், அவர் தினமும் அதானி பற்றிய உண்மையை உங்கள் முன் வைக்கிறார், அதை அம்பலப்படுத்துகிறார் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
நரேந்திர மோடிக்கு பெரிய தொழிலதிபர்களுடன் கூட்டணி இருப்பதாக ராகுல் காந்தி தினமும் உங்களிடம் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு ரூ 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளின் ஒரு ரூபாயைக் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதில் சொல்ல வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார்.
பிரதமர் மோடி கூறியது என்ன?
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதி இருந்து தொழிலதிபர்கள் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு பேசுவதை ராகுல் காந்தி ஏன் நிறுத்தினார் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சிக்கு டெம்போ லோடுகளில் பண, வந்து சேர்ந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்
மேலும் தொழிலதிபர்கள் அம்பானி-அதானியை திட்டுவது ஒரே இரவில் நிறுத்தப்பட்டதில் என்ன ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது? என்றும் நரேந்திர மோடி சந்தேகம் கிளப்பினார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது.
வரும் மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும், மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலும், மே 25ஆம் தேடி அன்று 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.
வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.