Election 2024: ’ஓட்டு போட ரெடியா! மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை இலவச பேருந்து’ தேர்தல் ஆணையம் ஏற்பாடு!
Apr 18, 2024, 06:12 PM IST
”வாக்குப்பதிவு நாளான 19.04.2024 (நாளை) அன்று, சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது”
இந்தியத் தேர்தல் ஆணையம், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் 2024
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி, மார்ச் 27ஆம் தேதி நிறைவடைந்தது.
மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் மார்ச் 30ஆம் தேதி உடன் நிறைவடைந்ததால் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையம், மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
பொதுப் போக்குவரத்து வசதி இல்லையெனில், அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யலாம் எனவும், தகுதியுள்ள வாக்காளர்களுக்கு இந்த வசதிகளைப் பெறுவதற்கு சக்ஷம் செயலி அல்லது உதவி எண்ணில் பதிவு செய்யும் வசதியும் வழங்கப்படலாம் எனவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, மூத்த குடிமக்கள், கண்பார்வை, உடலியக்க குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பலவீனமான உடலியக்கம் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 19.04.2024 அன்று, சாதாரண நகர சேவைகளில் இலவச பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும், வாக்குப்பதிவு நாளன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இல்லத்திலிருந்து வாக்குச் சாவடிக்கும், வாக்குச்சாவடியிலிருந்து இல்லத்திற்கும் இலவசமாக சென்று வர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட வசதிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் “சக்ஷம் கைபேசி செயலி”/ 1950 உதவி எண்/ மாவட்டக் கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கையை முன்வைத்து, வாக்களிக்க ஏதுவாக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024:
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.