Karthigai Deepam 2022: கார்த்திகேயனுக்கு கார்த்திகை தீபம்!
Dec 05, 2022, 06:11 PM IST
கார்த்திகை திருநாளில் தீபம் ஏற்றி கார்த்திகேயனை வழிபட்டால் பல பலன்கள் கிடைக்கும் எனப் புராணங்கள் கூறுகின்றன.
கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு கார்த்திகை திருநாள் விசேஷ நாளாகப் போற்றப்படுகிறது. சிவபெருமானின் நச்சுக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு சுடர்கள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக உருமாறி நின்றது.
சமீபத்திய புகைப்படம்
அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் பாலூட்டி தாயாக வளர்த்தனர். பின்னர் சிவபெருமான் உமா தேவியருடன் குழந்தைகளை வாரி அணைக்க ஆறு உருவங்களும் ஒரு உருவமாய் மாறி உமா தேவியாரின் கையில் சரவணனாகப் பிரகாசமாய் எழுந்தருளினார்.
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட காரணத்தினால் இக்குழந்தைக்குக் கார்த்திகேயன் என்று திருநாமம் சூட்டுகிறோம் எனச் சிவபெருமான் கார்த்திகை பெண்களை நோக்கி அருள்பாலித்தார். அதேபோல் இந்த கார்த்திகை திருநாளில் சரவணன் போற்றி வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும் எனச் சிவபெருமான் கூறினார்.
இந்த கார்த்திகை திருநாளில் விளக்கேற்று வழிபட்டால் அனைத்து நலங்களும் கிட்டும் எனக் காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபத் திருநாள் அன்று விளக்கேற்ற உதவும் அகல், எண்ணெய், திரி, சுடரொளி இவை நான்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற தத்துவத்தை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.
மகாபலி மகாராஜன் தனது உடலில் ஏற்பட்ட சூட்டைத் தணிப்பதற்காக கார்த்திகை திருநாளில் விரதம் இருந்து அதனைத் தீர்த்துக் கொண்டார் எனப் புராணம் கூறுகிறது. அதேசமயம் தேவி புராணத்தில், மகிஷாசுரனுடன் அம்பிகை போர் செய்து கொண்டிருந்த போது தவறுதலாகச் சிவலிங்கம் ஒன்றை உடைத்து விட்டார். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்று விரதம் இருந்து தனது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் எனக் கூறுகிறது.
இந்நிலையில் பல புராணங்களையும், பல விசேஷ பலன்களையும் கொண்ட கார்த்திகை திருநாள் அன்று உலகத்தில் இருக்கும் அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த கார்த்திகை திருநாள் கோலாகலமாகத் தீபமேற்றிக் கொண்டாடப்படுகிறது.