Masi Festival 2023:: திருச்செந்தூர் மாசி திருவிழா 25-ல் தொடக்கம் - முழு விபரம்
Feb 20, 2023, 05:40 PM IST
Tiruchendur Masi Festival: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா இம்மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இம்மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.
சமீபத்திய புகைப்படம்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இந்தாண்டு மாசித் திருவிழா கொடியேற்றம் வரும் 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
மாசித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு 25-ம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
26-ம் தேதி 2-ம் திருவிழாவான அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் புறப்பாடு நடக்கிறது.
3-ம் திருவிழா 27-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். 4-ம் திருவிழா 28-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
5-ம் திருவிழா 1-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மேல் குட வருவாயில் தீபாரதனை நடக்கிறது. 6-ம் திருவிழா 2-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது
7-ம் திருவிழாவான 3-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணி சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஷண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் வந்தடைகிறது.
8-ம் திருவிழாவின் 4-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
9-ம் திருவிழா 5-ம் தேதி சண்முகர் சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அன்று காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
11-ம் திருவிழாவான 7-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது. 12-ம் திருவிழா 8-ம் தேதி சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கார்த்திக், நிர்வாகிகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்