HT Temple SPL: 'நன்றாகப் பேச்சு வர வேண்டும்'சீர்காழியில் உள்ள ஓசை கொடுத்த நாயகியை வழிபடுங்கள்!
Jan 04, 2024, 07:29 AM IST
திருமணமாகாத பெண்கள் இங்குள்ள மகாலட்சுமி, மூலவர் மற்றும் அம்பாளையும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட்டு வந்தால் திருமணத் தடை அகலும் என்பர்.
சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஊர் திருக்கோலக்கா. இங்கு ஓசை நாயகி அம்மன் கோயில் உள்ளது. ஞானப்பால் உண்டு தன தேவார இசையால் அமுதமெனத் தமிழை வளர்த்த சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி.
சமீபத்திய புகைப்படம்
அம்மை அப்பனிடம் இருந்து அருள் பெற்ற பின் ஞானசம்பந்தர் தல யாத்திரை மேற்கொண்டார். தனது 3 வயதில் சீர்காழிக்கு மேற்கில் உள்ள திருக்கோலக்கா எனும் திருத்தலம் சென்று அங்குள்ள கொன்றை வனத்தில் எழுந்தருளியிருந்த 'கொன்றைவன நாதரை' வழிபட்டார். அவர் தரிசித்த முதல் தலம் 'திருக்கோலக்கா'. அந்த ஆலயத்தையும் அதன் முன் உள்ள குளத்தையும், அதில் நீராடிய மாந்தரையும், நீந்திக் கொண்டிருந்த வாளை மீன்களையும் கண்டு மனம் மகிழ்ந்த சம்பந்தர், 'மடையில் வாளை பாய மாதரார்' என்ற பதிகத்தை சன்னதி முன்பாக நின்று பாடினார்.
சம்பந்தர், கைகளால் தாளம் போட்டுப் பாடியதைக் கண்டு இறைவன் குழந்தையின் கைகள் நோகுமே என்று பஞ்சாட்சரம் பொறித்த செம்பொற்தாளங்களை திருஞானசம்பந்தருக்கு அருளினார். ஆனால், அந்தப் பொன் தாளம் ஒலி எழுப்பவில்லை. உடனே, இத்தலத்தில் வீற்றிருக்கும் கருணையே வடிவம் கொண்ட அன்னை 'அபிதகுசாம்பாள்' விண்ணவரும், மண்ணவரும் அதிசியிக்க, மின்னும் மாசிலா பொன் தாளத்தை ஒலி இசைக்கச் செய்தார். ஒலி இசைக்க செய்த தேவி அன்று முதல் ஓசை கொடுத்த நாயகியானார். அய்யன் தாளபரீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
சோழர் காலத்தில் செங்கற்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டிருந்தது. பின்னர் நகரத்தாரால் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டுப் பொலிவுடன் விளங்குகிறது. இத்திருக்கோயில் 230 அடி நீளமும் 155 அடி அகலமும் கொண்டது. மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே சன்னதிகள் உள்ளன.
பெரிய பிள்ளையார், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சுப்பிரமணியர், தக்ஷிணாமூர்த்தி, சூரிய சந்திரர்கள் போன்ற உப தெய்வங்களுக்கும் உள்ளன. சனி பகவானுக்கும் தனிக் கோயில் உண்டு. பஞ்சலிங்கங்களும் உண்டு. ஓசை நாயகி சுமார் நான்கு அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திருக் காட்சி தருகிறாள். கோயிலின் தென்கிழக்கில் தல விருட்சமான கொன்றை மரம் ஒரே வேரில் மூன்று மரமாக வளர்ந்துள்ளது.
பேசும் குறை உள்ளவர்களும் செவி கேட்கும் திறன் இல்லாதவர்களும் இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவன் இறைவிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் குறைகள் நீங்கப் பெறுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமணமாகாத பெண்கள் இங்குள்ள மகாலட்சுமி, மூலவர் மற்றும் அம்பாளையும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபட்டு வந்தால் திருமணத் தடை அகலும் என்பர்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்