தீவினைகளை அகற்றி நல்வினைகளை வழங்கும் முருகன்.. வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை கோயில்!
Oct 09, 2024, 03:12 PM IST
வல்லக்கோட்டை முருகப்பெருமானின் மீது எட்டு திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார். கோவிலின் மூலவர் முருகப்பெருமான், தாயார் வள்ளி தெய்வானை. தீர்த்தம் வஜ்ரத் தீர்த்தம். இங்கு திருவிழாக்கள் தைப்பூசம், சஷ்டி, ஆடி கிருத்திகை ஆகியவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வல்லக்கோட்டை முருகன் கோயில் காஞ்சிபுரத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும் கிழக்கு தாம்பரத்திலிருந்து முடிச்சூர் ஒரகடம் வழியாக 28 கிலோமீட்டர் தூரத்திலும் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் வல்லக்கோட்டை திருத்தலம் உள்ளது. 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோவிலின் மூலவர் முருகப்பெருமான் திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது. முருகனின் இரு புறங்களிலும் வள்ளி தெய்வயானை அருள்பாலிக்கின்றனர். கருவறையை தவிர கோயில் சுற்றுகையில் கணபதி உற்சவ திருவுருவம் சண்முகர் மற்றும் அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன.
சமீபத்திய புகைப்படம்
இக்கோயிலில் இந்திரனால் அமைக்கப்பட்ட வஜ்ரத் தீர்த்தம் உள்ளது. ஒரு சமயம் அருணகிரிநாதர் தல யாத்திரையாக பல ஆலயங்களுக்கு சென்று வந்தார். அப்போது, திருப்போரூர் முருகனை தரிசித்த அவர் அன்று இரவு அங்கேயே தங்கினார். காலையில் திருத்தணி முருகனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன் ‘கோடை நகர் மறந்தனையே’ என்று சொல்லி மறைந்தார். மறுநாள் காலையில் எழுந்த அருணகிரிநாதர் கனவில் தோன்றிய முருகப் பெருமானை நினைத்தபடி திருத்தணி செல்லும் வழியில் உள்ள வல்லக்கோட்டை திருத்தலம் சென்று அங்குள்ள இறைவனை தரிசித்தார்.
மேலும் வல்லக்கோட்டை முருகப்பெருமானின் மீது எட்டு திருப்புகழ் பாமாலை பாடி மகிழ்ந்தார். கோவிலின் மூலவர் முருகப்பெருமான், தாயார் வள்ளி தெய்வானை. தீர்த்தம் வஜ்ரத் தீர்த்தம். இங்கு திருவிழாக்கள் தைப்பூசம், சஷ்டி, ஆடி கிருத்திகை ஆகியவை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரகாரத்தில் விஜய கணபதி, சண்முகர், தேவி கருமாரியம்மன் உற்சவர் ஆகியோரது சன்னதிகள் காணப்படுகின்றன.
புராணக் கதை
படி இளஞ்சி என்னும் தேசத்தில் செங்குந்தபுரம் என்னும் நகரை பகிரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் இந்த மன்னனை காண நாரத முனிவர் வந்தார். ஆணவம் பிடித்த மன்னனும் நாரதரை கண்டு கொள்ளவே இல்லை, இதனால் கோபமடைந்த நாரதர் அங்கிருந்து வனத்திற்கு சென்றார். அங்கு கோரன் என்ற அரக்கன் பல நாடுகளை வென்று வெற்றிக் களிப்பில் வந்து கொண்டிருந்தான்.
அவனைக் கண்ட நாரதரின் ஆணவத்தை அடக்க இவன்தான் சரியான ஆள் என முடிவெடுத்தார். நீ பல நாடுகளை வெற்றி கொண்டிருந்தாலும் இந்த இளைஞன் நாட்டை வென்றால்தான் உனது விஜயம் நிறைவு பெறும் என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டு நகர்ந்தார். அசுரன், இளைஞன் நாட்டின் மீது போர் தொடுத்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத மன்னன் மிரண்டு விட்டான். அதனை போரில் வென்றான். அசுரனிடம் நாடு நகரம் என அனைத்தையும் இழந்த மன்னன், காட்டிற்கு சென்றான்.
அங்கு நாரத முனிவர் எதிரில் வந்தார். மன்னன், அவரிடம் தனது தவறை கூறி மன்னிப்பு கேட்டான். துர்வாச முனிவரை சந்தித்தால் நல்வழி காட்டுவார் எனக்கூறி நாரத முனிவர் சென்று விட்டார். பகிரதனும் அந்த அடர்ந்த காட்டில் நீண்ட காலம் மிகுந்த சிரமப்பட்டு பின் ஒரு வழியாக துர்வாச முனிவரை தேடி கண்டுபிடித்தார். அவரிடம் தன் நிலையை கூறி நாட்டை மீட்க வழி கேட்டு மன்றாடினார். துர்வாச முனிவர் அவரிடம் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இங்கு உள்ள முருகனை வழிபட்டால் உனது குறைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்று கூறிச் சென்றார்.
மன்னனும் துர்வாசர் கூறியபடி முருகனை வழிபட்டார், பின்னர் வாழ்வில் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்ப பெற்றார். பகிரத மன்னன் பின்னர் முருகருக்கு ஒரு கோயில் கட்டி வள்ளி தெய்வானையை பிரதிஷ்டை செய்தார். இவர் கட்டிய கோயில் தான் வல்லக்கோட்டை சுப்பிரமணியர் கோயில். வள்ளி, தெய்வானை உடன் கோடை ஆண்டவர் என்ற பெயரோடு இங்கு இறைவன் அருளாட்சி செய்கிறார்.
தீவினைகளை அகற்றுவார்
பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு தீவினைகளை அகற்றி நல்வினைகளை வழங்கும் அபய கருத்துடன் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். ஒரு காலத்தில் வல்லன் கோட்டை என்று இருந்த இந்த ஊர் பிற்காலத்தில் மருவி வல்லக்கோட்டை என்று ஆகியது.
கோவிலுக்கு மற்றொரு புராண கதையும் உண்டு. வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இந்த பகுதி இருந்தது. அந்த அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதையடுத்து தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று முறையிட்டனர். முருகப் பெருமானும் தேவர்கள் துயரை துடைக்க எண்ணினார். அதன்படி அசுரனை அழித்து அவனுக்கு முக்தி அளித்தார். மேலும் அசுரனின் வேண்டுகோள் படி இந்த ஊர் வல்லன் கோட்டை என்ற சிறப்பு பெறும் என்றும் அருளினார். அந்த வல்லன் கோட்டையே தற்போது வல்லக்கோட்டை என்று மருவி உள்ளதாக கூறப்படுகிறது.
வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகனை நீங்களும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்!
டாபிக்ஸ்