Lord Hanuman: அற்புதங்கள் நிறைந்த ஆஞ்சநேயர் சரித்திரம்!
Nov 13, 2023, 06:10 AM IST
'இந்த ஒரு அபூர்வக் குழந்தையைப் பெற்றதால்,நீ,சாப விமோசனம் பெற்று விட்டாய். இனி விண்ணுலகம் வரவும் .இன்று சூரியன் மறையும் வரைதான் நீ மண்ணுலகில் இருக்க முடியும்'
ஆஞ்சநேய சரித்திரம் என்றாலே,அது பலப்பல அதிசயம், ஆச்சர்யம், அற்புதங்கள் நிறைந்து நம்மை பரவசப்படுத்தும். குறிப்பாக குழந்தைகளை பரவசப்படுத்தும். அவரின் அவதாரத்தன்றே, மேற்படி விஷயங்கள், தன் வேலையைத் தொடங்கி விட்டதாக சொல்கிறது, அபூர்வ ராமாயணம் எனும் சிறப்பான நூல் ஒன்று. அஞ்சனா தேவி, தான் ஈன்றெடுத்த குழந்தை வானர முகத்தோடு பிறந்து இருந்தாலும், பிறந்த சில கணங்களில், அது 16 வயது வாலிபன் ஆகக் கிடுகிடு என வளர்ந்து விட்டது என்பதால்,'தன் மகன்' எனும் பொருள்பட அவனை "ஆஞ்சிநேயா", அஞ்சனை யான தன்னை மிகவும் நேசிப்பவன் எனப் பொருள் கொண்டழைத்தாள்.
சமீபத்திய புகைப்படம்
தாயின் பாதார விந்தங்களில் விழுந்து, வணங்கி, தொழுதான் நற்குணங்களே வடிவான ஆஞ்சநேயன். அப்போதுதான் அஞ்சனா தேவி, தான்,வானுலகில் நடனமாடும் தேவ கந்தர்வ கன்னிகைகளில் ஒருவளாக இருந்தபோது தவசீல, ஒரு முனிவரை, குரங்கு முகம் என்று கேலி செய்ததனால் அல்லவா இம் மண்ணுலகப் பிறப்பு, சாப விமோசனம் கேட்ட போது அசிரீரி சொன்ன விஷயமல்லவா ஆறுதல் தந்தது என ,மீண்டும் எண்ணிப் பார்த்தாள்.
"தேவி,உன் மகன் பரம் பொருள் சிவபெருமானின் அம்சம். நீயும்,உன் கணவர் கேசரியும், புண்ணியம் செய்தவர்கள். இந்த ஒரு அபூர்வக் குழந்தையைப் பெற்றதால்,நீ,சாப விமோசனம் பெற்று விட்டாய். இனி விண்ணுலகம் வரவும் .இன்று சூரியன் மறையும் வரைதான் நீ மண்ணுலகில் இருக்க முடியும்" என கெடு வைத்து கூறியது நினைவுக்கு வந்தது..
சாப விமோசனம் மகிழ்வை தந்தாலும்,அற்புத மகனை பிரிய மனம் ஒப்பவில்லை. பிரிய இயலாத ஒரு கஷ்ட மனநிலையில்,மகனிடம், பிரிய சம்மதம் கேட்க, ஆஞ்சிநேயனோ, நிலமை புரிந்து கொண்டவனாய், சம்மதித்துப் பிறகு தாம் சாப்பிட வேண்டிய உணவு பற்றி தாயிடம் கேட்க,,அஞ்சனை யின் மனம் விம்மித் தணிந்தது.
பார்க்க பெரியவனாக இருந்தாலும்,பிறந்து சில கணங்களே ஆனதால்,இம் மண்ணுலக விஷயங்கள் ஏதும் அவனுக்குப் புரிய வாய்ப்பில்லை என்பது அவள் நினைவுக்கு வர, அவள் திடுக்கிட்டு,திணறி விட்டாள். பின்னர் தம்மை தேற்றிக் கொண்டு,பலவித பழங்களைப் பற்றிக் கூறி, வானரங்கள் பழத்தைப் புசித்து, தம் பசியை ஆற்றி க்கொள்ளும் இயல்பினை ச்சொல்லி விளங்கினாள். நேரமின்மையால்,பழம் எப்படி இருக்கும் என்று காண்பிக்க,சன்னலுக்கு. வெளியில் தெரிந்த சூரியனைத் காட்டினாள்
விளக்கம் சொல்லிய கையோடு,நேரமாகிவிட்ட படியால்,மகனுக்குத் தனது ஆசிர்வாதங்களை அள்ளிக் கொடுத்துவிட்டு,அஞ்சனை வானுலகம் நோக்கிப் பறந்து சென்றாள். பழம் சாப்பிட, ஆசைப் பட்ட ஆஞ்சினேயன், அன்னை கூறிக் காண்பித்ததை நினைவு படுத்திக்கொண்ட பின்,ஆதவனே பழம்தான் என எண்ணியவனாய்த் தாவிக்குதித்தெழுந்து,படு வேகமாக வின்னில் நீந்திப் போய், சூரியனை எடுத்து, விழுங்கியே விட்டான்.
இந்தப் பராக்கிரம சாலி செய்த செயல் கண்டு, தேவர்களும் மற்றோரும், திடுக்கிட்டுத் திணறி, பதைபதைத்துப்போய், பரபரப்புடன்,செய்வதறியா மனக்கிலேசத்துடன்,பிரம்ம தேவனிடத்தில் சென்று, நடந்த விபரங்களைக்கூறி, உடனே,ஆவண செய்யச் சொல்ல,பிரம்மனும் மிக அதிர்ச்சி அடைந்தவராய், மண்ணுலகம் விரைந்து வந்து, ,அனுமனை சந்தித்து பேசலானார்.
சூரியனை மீட்க வேண்டிய அவசரத்திலும்,பிரம்மா,ஒர் அழகியசிவந்த இரத்தின மாலையினை எடுத்துவர மறக்கவில்லை.தனது முன்பு,நான்கு தலை உள்ள தாத்தா ஒருவர் அமர்ந்து, தன்னிடம் அன்பாகச் பேசி வருவதை வேடிக்கையாகப் பார்த்து வந்த அனுமனுக்கு, அவரிடம் மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
அவர் சொல்வதன் அர்த்தம் புரிந்தது.சூரியதேவனின். முக்கியத்துவம் புரிய,வாய் திறந்து ஆதவனை அண்ட வெளியில் விட,அவரும் ஆளைவிட்டா போதும் என்பதைப்போலத் தாவித் தன்னிடத்திற்கே சென்று விட்டார்.அனைவரும் பெரு மூச்சு விட்டுத் தம்மைத் தாமே ஆசுவாசப் படுத்திக் கொண்டனர்.தலைக்கு வந்தது, தலைப் பாகையுடன் போச்சே என மகிழ்ந்தனர்.
பிரம்ம தேவர்,அனுமனுக்கு தாம் எடுத்து வந்திருந்த சிகப்பு ரத்தின மாலையை கொடுக்க, அது சிகப்பு வண்ணம் கொண்டதாக இருந்ததால்,அதுவும் ஒரு பழமே என அனுமன் நினைக்கையில்,அவனை அழைத்துக் கொண்டு போய்,தோட்டத்தில் உள்ள பல வகை பழ மரங்களைக் காட்டி அவைகளே தின்பதற்கு ஏற்றவை என விளக்கிச் சொல்லிவிட்டு , அவனின் பிறப்பின் ரகசிய காரியத்தைக் கூறலானார்.
அந்த ரத்தின மாலை ஒளியில் கூட, அவன், பழங்களைத் தேடிப் புசிக்கலாம் எனக்கூறி, அதை அவனது கழுத்தில் அணிவித்தார்.பின்னர், அவன் சாதாரண ஒரு குழந்தை இல்லை. ராமனாக,விஷ்ணு அவதாரம் செய்யும் நேரம்,அவருக்குத் துணையாக,சேவகம் செய்து காப்பவனாக அவன் இருப்பான் என்று கூறி,அவனது கழுத்தை அலங்கரிக்கும் ரத்தின மாலை எவர் கண்ணிற்கும் தெரியாது.யார் ஒருவர் கண்ணிற்கு தெரிந்து அது பற்றி பேசுகிறாரோ,அவரே மஹாவிஷ்ணு எனக் கொள் என்றார்.தாம் ஒரு ஸ்ரீ ராம பக்தன் என்கிற விபரங்கள் கேட்டு,பூரிப் படைத்து மகிழ்ந்த அநுமன் ஆனந்தக்கூத்தாடினான்.
ஆண்டுகள் பல உருண்டு ஓடின.அனுமன் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள், ஏற்றங்கள், எவ்வளவோ சம்பவங்கள் நடந்தேறின.
"பூ மாலைகள் கொஞ்சும்
பா மாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்,அணைத்
தால் அது இனிமை" என தூய இனிமையான நல் நினைவுகளுடன் , ஸ்ரீ ராம நாமம் சொல்லிக்கொண்டு ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் வருகையை வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான்..
ஆவலுடன் அவன் எதிர் பார்த்திருந்த அந்த நாளும் வந்தே விட்டது.சீதாதேவி தேடும் படலத்தில், ஒருநாள் ஸ்ரீ ராமரும்,லக்ஷ்மணரும் சபரி அன்னை கூறியபடி, சுக்ரீவனைச் சந்திக்க வரும் பொழுது,சுக்ரீவன் தனது தளபதியான அநுமனை, இவர்களை சோதனையிட அனுப்பிய போது,ஒரு பிரம்மச்ச ரி வடிவில்,அனுமன் அவர்கள் முன் ஆஜராகி விளக்கம் பெற முயலும்போது,ராமர்
"உனது கழுத்தை அணி செய்யும் இரத்தின மாலை உன்னை மேன்மேலும் அழகாக காட்டுகிறது"
என்று கூறியபோது,அநுமன் பக்திப் பரவசத்தில் பேச, நா, எழாது கண்ணீர் மல்க, காட்டாற்று வெள்ளமதில் நடுவே நின்று நீர் அருந்தும் உணர்வுடன், ஆத்மார்த்தமாக
"பிரபோ,தங்களுக்கு தொண்டு செய்யவே என் பிறப்பு.தங்களை எப்போது சந்திப்போம் என்றபடி காத்திருந்து காத்திருந்து பூத்துப்போன என் விழிகளுக்கு ஒளி கிடைத்து விட்டது.தங்களை சந்தித்தது என் பாக்யம் என்றபடி ஸ்ரீ ராமரின் பாத மலர்களைப் பணிந்து வணங்கினான் அநுமன்.
வேதங்களைக் கற்றவர்க்கு உரிய சத்தியமும்,தெளிவும் அநுமன் பேச்சில் இருந்தது எந்த ஒரு பிழையான தொனி,முகக்குறிப்போ, இல்லாது,தேர்ந்தெடுத்த சொற்களால்,கனக்கச்சிதமக,எவ்வித தயக்கமும் இல்லாது,நிதானமாக அவன் பேசியது,அவனின் விவேகத்தைப் பறை சாற்றியது.அனுமனின் சூட்சம புத்திகூர்மை,, தொலைநோக்குப்பார்வை,முகம் பார்த்து குணம் படிக்கும் திறன்,நினைத்த வடிவம் எடுக்கும் திறமை,, வீரம்,பலம்,பாங்கான பேச்சு அனைத்தையும் கண்டு,புன்சிரிப்பைத் தன் இதழ்களில் தவழ விட்டவராக,தனது வலது கரத்தைமேலுயர்த்தி, அந்த சிரஞ்சீவியை,எதற்கும் அஞ்சாத அஞ்சனை மைந்தனை,தான் ஏற்கப் போகும் வீரியமிக்க உண்மையானதொரு தொண்டனை மனதார ஆசீர்வதித்தார் ஸ்ரீ ராமர்.
"மனோ ஜலம் மாருத
துல்ய வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்!
வாதாத் மஜம் வானர யூத
முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சிரஸா
நமாமி!!"
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்.
அடையார்,சென்னை.
டாபிக்ஸ்