Kamakshi Amman: ஐஸ்வர்யம் தருபவர், கருணைக் கடல் காஞ்சி காமாட்சி அம்மனின் சிறப்புகள்
Aug 16, 2023, 05:45 AM IST
Kanchipuram: ஒவ்வொரு யுகத்திலும் அம்பாளைப் போற்றி மகான்கள் ஸ்லோகம் இயற்றியுள்ளனர். காஞ்சி காமாட்சி அம்மனின் பல்வேறு சிறப்புகளை இக்கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்.
108 சிவ திருத்தலங்கள், 18 வைணவ திருத்தலங்கள் அமைந்துள்ள காஞ்சி நகரம் முக்தித் தலங்கள் என்கின்ற போற்றுதலுக்குரிய சிறப்பு பெற்ற ஏழு தலங்களிலும் ஒன்றாக இருக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
வாரணாசிக்கு அடுத்த புண்ணய தலமாக விளங்கும் இதை கச்சியபதி என அழைப்பர். தேவியியின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம். உலக புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் மாயையை அகற்றி ஞானம் அருளும் தேவி கிடைக்கப் பெற்ற ஒரு தொன்மையான க்ஷேத்திரம்.
இங்கு காமாட்சி அம்மன், மஹா திரிபுர சுந்தரியாக, பூர்ண பிம்ப சொரூபிணி ரூபமாக காட்சி தருகிறார். தந்திர சூடாமணியின் படி இது, தேவியின், நாபி விழுந்த சக்தி பீடம் எனவும், மஹாசக்தி பீடங்களில் ஒன்று எனவும் அறிகிறோம்.
இரு திருக்கால்களையும். மடித்து, பத்மாசனத்தில் மிக கம்பீரமாக, ஒரு கையில் கரும்பு, வில், மற்றொரு கையில் தாமரை, கிளி ஏந்தி, அன்னை காமாட்சி, கலைமகள் சரஸ்வதி, திருமகள் லக்ஷ்மியை தனது இரு கண்களாகக் கொண்டு அமர்ந்திருக்கும் தெய்வீகத் திருக்கோலம் காணக் கண் ஆயிரம் வேண்டும்.
எல்லையில்லா கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக, தேவி காட்சியளிக்கிறார். இந்த காஞ்சி என்கிற கோவில்களின் நகரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துடன் காட்சிதரும் ஆலயத்தில், காயத்திரி மந்திரம் 24 அட்சரங்களை 24 தூண்களாக்கி காயத்திரி மண்டபத்தில் அமைந்த அழகிய பீடத்தில் அமர்ந்து, அம்பாள் நித்ய விஸ்வரூப தரிசனம் அளிக்கும் காட்சி காணத் திகட்டாதது.
புராண காலத்தில் அம்பாள் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்த கதைகள் சில உண்டு. பலவித வரங்களைப் பெற்று, அனைவரையும் மிகவும் துன்புறுத்தி வந்த பண்டாகாசுரன் எனும் வலிமை மிக்க அசுரனை சம்ஹாரம் செய்து, அவன் தலைப் பகுதியுடன், மிகவும்ஆக்ரோஷமாக வந்து, அதை கண்டு அனைவரும் பீதியில் உறைய, பின்பு சாந்தமாகி பிரத்தியட்சம் தந்த ஒரு அற்புத ஆலயம் இது.
அந்தக் கொடிய அரக்கனை வதம் செய்த நிகழ்வு ஆலயத்தின் வளாகத்திலுள்ள" விஜய ஸ்தம்பம்" காண்பிக்கிறது.
உக்கிரம் மிகுந்திருந்த அம்மனை, சௌமியமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். இது ஒரு காலத்தில் காமக்கோட்ட நாயகி சன்னதி எனப்பட்டது. அம்பாள் சன்னதிக்கு எதிரே ஆதிசங்கர பகவத் பாதாள் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். காஞ்சி மகா பெரியவர் தவறாமல் வந்து தரிசனம் செய்யும் தலமிது.
அம்பாளைப் பற்றிய பல நுணுக்கமான தகவல்களை பல தலைப்புகளில் இவர் அளித்திருக்கிறார். இங்கு, பூஜை முறைகளை, இவர் சாஸ்த்திரப்படி வகைப்படுத்தி நன்கு அமைத்துக் கொடுத்தவராவார்.
ஒவ்வொரு யுகத்திலும் அம்பாளைப் போற்றி மகான்கள் ஸ்லோகம் இயற்றியுள்ளனர். துர்வாஸ முனிவர் கிருத யுகத்தில் 2000 சுலோகங்கள், பரசுராமர் திரேதா யுகத்தில் 1500 சுலோகங்கள், தவுமியா ஆச்சார்யா 1000 சுலோகங்கள், ஆதி சங்கரர் கலியுகத்தில் 500 சுலோகங்கள் பாடிப் புகழேந்திய புண்ணிய தேசமிது. செண்பக மரத்தை தலவிருட்சமாக கொண்டது.
காஞ்சிமா நகரத்து அனைத்துக் கோவில்களும், அன்னை காமாட்சியின் ஆலயத்தை நோக்கியே அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இங்கு சிவன் ஆலயங்கள் பல உண்டு. ஆனால் அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது.
தேவி காமாட்சியே அனைத்து கோவில்களுக்கும் ஒரே சக்தியாகத் திகழ்கிறார். இங்கு எந்தக் கோவிலில் திருவிழா நடந்தாலும், அதன் உற்சவர் தனது கோவிலை சுற்றுவதை தவிர்த்து, தேவி காமாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வருவர். நெடுங்காலமாக இது வழக்கத்தில் உள்ளது.
108 திருப்பதிகளில் உள்ள திருக்கல்வனூர் திவ்யதேச பெருமாள் சன்னதி,தேவி காமாட்சி அம்மனின் மூலஸ்தானம் அருகிலேயே இருப்பது சிறப்பு. ஒரு சமயம் இங்கு ஆட்சி செய்த ஆகாச பூபதி, குழந்தைப் பேறு வேண்டி, மனமுருகி நிற்க, அவர்தம் பக்திக்கு மகிழ்ந்த அன்னை, தனது மகனான கணபதியையே மகனாகப் கொடுத்தார்.
கணபதியும் மன்னர் குடும்பத்தில் துண்டீரர் எனும் நாமம் கொண்டு, மன்னருக்குப் பிறகு ஆட்சி செய்தார். இதன் காரணமாக இது தொண்டை மண்டலம் என்றாயிற்று. இந்த துண்டிமகாராஜாதான் வணங்கிய நிலையில் தேவி காமாட்சி அம்மன் எதிர் சன்னனதியில் காட்சி தருகிறார்.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களைத் தனக்கு ஆசனமாகக் கொண்டு, நான்கு கைகளுடன் காட்சி தருகிறாள். கருவறைக்குள் மூல விக்ரஹத்திற்கு அருகே ஒற்றைக் காலில் தவம் செய்யும் நிலையில் தேவி அம்மனின் காட்சி உள்ளது. ஞான சரஸ்வதி, லக்ஷ்மி, அரூபலக்ஷ்மி, சியாமளா, வராஹி, அன்னபூர்ணி, அர்த்தநாரிஸ்வரர், தர்ம சாஸ்த்தா, துர்வாஸர், ஆதி சங்கரர் ஆகியோரது சன்னதிகள் இவ்வாலயத்தில் உண்டு.
"ஆர்யாத்விசக்தி"எனப்படும் லலிதாஸ் நவரத்னா என்ற நூலை இயற்றிய துர்வாசர் சிறந்த, தீவிர தேவி பக்தர். அம்மன், முதன் முதலில், இவருக்கே காட்சி தந்தாராம் இவரே இப்போதுள்ள அம்மனின் மூலவிக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர் என்பர். அம்மனின் எதிரில் உள்ள, அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றியருளிய ஸ்ரீ சக்கரம் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சனை காமாட்சி, உற்சவர் காமாட்சி என ஐந்து காமாட்சிகள் உள்ளனர். காம எனும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் காமாட்சி அம்மன்.
கா என்பது சரஸ்வதி, மா என்பது மகேஸ்வரி, ஷி என்றால் லக்ஷ்மி ஆகவே இம் மூன்று தேவிகளும் இணைந்ததே அருள்மிகு காமாட்சி அம்மன்.
இவர் ஐந்து திருநாமங்கள், சக்தி பேதம் மூன்று, சிவ பேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என அறுவகை பேதங்களைக் கொண்டவர். இவரை வழிபட, ஐஸ்வர்யம் மிகுந்த நிம்மதியான ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும்.
குழந்தை வரம் வேண்டி இங்கு வருபவர்கள், இங்க உள்ள "சந்தான ஸ்தம்பத்தை" வணங்கி புத்ர பாக்யம் பெற வேண்டிக் கொள்வார்கள். அம்மனின் திருவடிகளில் நவகிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதால், பக்தர்க்கு நவகிரக தோஷம் ஏற்படாது. முக்தியை அளித்திடும் ஒரு க்ஷேத்திரம் இது என்பர்.
அருள்மிகு அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்து இப்போது தங்க விமானம் அமைக்கப்பட்டு, அங்கு அம்பாள் அமர்ந்துள்ளார். ஆதிசங்கரரின், புகழ்பெற்ற, ஆனந்த லஹரி இங்குதான் உருவானது என்கிறது தேவஸ்தான குறிப்பு.
காஞ்சியில் அனைத்து சிவன் கோவில்களையும், மையமாகக் கொண்டு, இயங்கும் ஒரே சக்தி ஆலயமிது. பொன்நகை செய்வோர் போன்ற பல சமூகத்தினரின் குல தெய்வமிது எனவும் அறியப்படுகிறது. பஞ்ச கங்கைக் தீர்த்தம் குளம் உள்ளது. தெப்ப உற்சவம், தேர் ஆகிய பல திருவிழா உற்சவங்கள் நடக்கிறது.
ஆடி திருவிழா, மாசி உற்சவம், நவராத்திரி விழா, வசந்த உற்சவம் இப்படி பல விசேஷ நாட்கள் உண்டு. பண்டை தமிழ் இலக்கியம் பெரும் பாணாற்றுப் படையில், இவ்வாலயம் பற்றிய செய்திகள் உள்ளன.
லலிதா சகஸ்ரநாமத்தில் முதல் பெயராக காமாட்சி "ஸ்ரீ மாதா" என போற்றப்படுகிறார். கேட்ட வரங்கள் கிடைக்கும் என்பதால் இங்கு பிக்ஷ்த்துவாரத்தின் வழியாக,"பகவதி பிக்க்ஷாம் தேஹி" என அம்மனை நோக்கி கை ஏந்தி நிற்பர்.
ஆதிசங்கரரின் சௌந்தர்ய லகரி, மூககவியின் பஞ்ச சதி போன்ற தோத்திரங்கள், இத்தேவியின் மகிமைகளை செவ்வனே பகரும்.
காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றால், அனைத்து அன்னை ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறுவார்கள்.
மஹா பெரியவர் தமது அருள் உரையில் "மாயைக்குக் காரணம் பிரம்ம சக்தி காமாட்சி, அவளே, ஞானமும் அருள்பவள், மாயையில் இருந்து விடுவிக்கிற நல்ல கருணையும் அவளிடம் பூர்ணமாக உள்ளது" என்று கூறி பெருமிதப் படுவார்.
"கோ"பூஜைக்குப் பின்னரே அன்றாட ஆலய பணிகள் துவங்குகிறதாம். அன்னை, இங்கு, ஸ்தூலம் அதாவது காமகோடி காமக்ஷியாக, சூட்சமம் அதாவது அஞ்சன காமாக்ஷி-அரூப லக்ஷ்மி, அதாவது காமகோடி பீடம் எனும் ஸ்ரீ சக்கரம் என்கிற மூவகை வடிவிலும் அமைந்து அருள்மழை பொழிகிறாள்.
இவருக்கு மஹாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஷ்வரி, ஸ்ரீ லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி போன்ற பல திருப்பெயர்கள் உண்டு. நாமும் அன்னையை மனதார வேண்டி வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்
"தேவியே சக்தியின் வடிவமானவள், சக்தியாலே தான் நாம் இயங்குகிறோம். எப்பொழுதும் தேவியை மனதார நினைத்து, செயல் புரிந்து, அதை அவளுக்கே அர்ப்பணித்து, அவள் அருளைப் பெறவே இப்பிறவி என நினைத்து வழிபடுபரை உலக மாயை ஒன்றும் செய்ய இயலாது. எளிதாக முக்தியைப் பெற வழிவகுக்கும்" என்பது வியாசரின் அருங்கருத்து.
-கி.சுப்பிரமணியன்
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை.
டாபிக்ஸ்